இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

இலங்கையில் முகநூலில் கருத்து வெளியிடுவோரை கூட கைது செய்கிறார்கள் – நாடாளுமன்றில் இரா. சாணக்கியன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(04) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘அரசாங்கமானது பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதை விடுத்து, இளம் தலைமுறையினரை கைது செய்யும் செயற்பாட்டையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கேசன் துறையிலிருந்து ஹம்பாந்தோட்டைவரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.

இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு கூட இன்று இல்லை. மேலும், வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டத்தின் ஈடுபட்ட பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். 47 நாட்களாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செய்ய தவறு என்ன என்பதை நாடாளுமன்றில் வெளிப்படுத்த வேண்டும்.

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தச் சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது? அந்த இளைஞர்கள் செய்த தவறு என்ன?

பல தமிழ் இளைஞர்கள் வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது அவர்களின் வழக்கு விசாரணைகளையேனும் துரிதப்படுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முகநூலில் கருத்து வெளியிட்டார்கள் என்றுக்கூட சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இளம் தலைமுறையினரை கைது செய்ய என்ன காரணம்? இவர்கள் செய்த பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ன?

இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டால் நிச்சயமாக விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்தினை நாசப்படுத்தியுள்ளார் – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக  மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் முழுமையாக மாகாணத்தினை நாசப்படுத்தியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்,

ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் நிலங்கள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை. வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார். இந்த மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை.

நாட்டில் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பால் உற்பத்தி தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். மயிலடுத்துறை பகுதியில் அத்துமீறிய வகையில் ஒரு தரப்பினர் கூடாரமிட்டுள்ளார்கள். இச்செயற்பாடுகளுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம்,இவர்களை மீண்டும் அழைத்து வருவதில்லை என பொறுப்பான தரப்பினர் குறிப்பிட்டதன் பின்னரே வழக்கை மீளப் பெற்றோம். தற்போது மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும். “ என தெரிவிதார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இவ்விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கிறோம்.
இவ்விடயத்தில் உணர்வுபூர்வமாகவும், பிரச்சினையற்ற வகையிலும் தீர்வு காணுமாறு ஆளுநருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கிறோம் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உத்தியோகப்பூர்வமான அறிவிப்பின் ஒரு பிரதியை எனக்கும் தாருங்கள் அதனை மாவட்ட செயலாருக்கு வழங்க முடியும்.
சேதன பசளை உற்பத்தி என ஒதுக்கப்பட்ட 5 ஹேக்கர் நிலப்பரப்பு அரசியல் தரப்பினரின் இணக்கமானவர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இது குறித்து அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவையில் சி.வி.விக்கி, கஜேந்திரகுமார் – தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்கிறது கூட்டமைப்பு!

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளார்.

சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.” என தெரிவித்துள்ளார்.

……………………….

கடந்த நல்லாட்சி அரசு காலத்திலும் சரி, 2009ஆம் ஆண்டு முதல் மகிந்தராஜபக்ச தரப்பினரையும் எதிர்க்கவும் சரி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினருடன் இரா.சாணக்கியன் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பு இணைந்து செயலாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக ரணில் விக்கிரமசிங்க தமிழர் தேசியபிரச்சினைக்கு தீர்வு வழங்ககூடிய தலைவர் என கூறி வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவையில் இணைந்தது தொடர்பில் இரா.சாணக்கியன் விசனம் தெரிவித்துள்ளார்.

“3 வயது குழந்தையை எரித்தவர்களை காப்பாற்ற இன்று ஜெனீவாவில் அலிசப்ரி இருக்கின்றார். ” – இரா.சாணக்கியன்

“3 வயது குழந்தையை எரித்தவர்களை காப்பாற்ற இன்று ஜெனீவாவில் அலிசப்ரி இருக்கின்றார். ” என அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மகசின் சிறைச் சாலையில் உண்ணாவிரதமிருக்கு கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதபோராட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய ஜே.வி.பி. அமைப்பின்  தலைவருக்கு சிலைவைத்து மாலை போடுவதற்கு அரசு அனுமதித்துள்ளது. ஆனால் சிங்களவர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் ஒரு சட்டம் தமிழர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் ஒரு சட்டம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற உறவுகளுக்கு ஆதரவாக நாங்களும் மட்டக்களப்பிலே அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

2018 க்கு பிற்பாடு கைது செய்யப்பட்ட உறவுகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்கப்படவேண்டும். அதேநேரத்தில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

பயங்கரவாத தடுப்பு சட்டம் ஊடாக தொடர்ச்சியாக கைதுகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவே அந்த கைதுகளை செய்வதற்கான இந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் இனி இருக்க கூடாது . இந்த அரசாங்கத்துக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கடந்த காலத்தில் 3 ஜனாதிபதிகள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளனர். மைத்திரிபால சிறிசேன றோயல் பாக்கில் மாடிவீட்டு ஒன்றில் தனது காதலியின் மண்டையை அடித்து உடைத்து கொலை செய்யப்பட்டு சிறைக்கு சென்றவரை விடுதலை செய்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ச உயிர் நீதிமன்றில் குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியே விடப்பட்டு தேசிய வீடமைப்பு தலைவராக நியமித்தார்.

அதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்ததும் ரஞ்சன் ராமநாயக்கா விடுவிக்கப்பட்டார். எனவே சிங்களவர்களை பொறுத்தவரையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்வது இலகுவானது உள்ளது.

ஆனால் இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அவரிடம் பேசவேண்டும் இவரிடம் பேச வேண்டும் என தெரிவிக்கின்றனர். தற்போதைய பிரதமர் தினேஸ்குணவர்த்தன, அலிசப்ரி,  நாமல் ராஜபக்ச கடந்த ஆட்சியின் போது பெயர்பட்டியலை தருமாறு கோரி அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் இந்த அரசியல் கைதிகள் வாழ்கையை இழந்து குடும்பத்தை இழந்து அவர்களின் தந்தை பிள்ளை மனைவியை இழந்து சிறையில் வாடுகின்றனர் என்றனர் ஆனால் ஆட்சி வந்து போய்விட்டது இன்னும் விடுதலை இல்லை.

ஜ.நா கூட்டத் தொடரிலே கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி பொருளாதார குற்றங்கள் இல்லை அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

இந்த பொருளாதார குற்றங்களுக்கு அலி சப்ரியும் பொறுப்பானவர். இவர் அந்த நேரத்தில் நீதி அமைச்சராக இருந்த இவர் 20 திருத்த சட்டமும் வேணும் என கொண்டுவந்த இவர் இன்று வெளிவிவகார அமைச்சராக இருக்கின்றார்.

இவர் இலங்கையை பிரதி நிதிப்படுத்துவதாக சென்றுள்ளாரா.? கோட்டாபாய ராஜபக்சவின் சட்டத்தரணி என்ற அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளாரா? என்ற கேள்வி இருக்கின்றது இன்று பொருளாதார நெருக்கடியினால் மக்கள் நாட்டிலே வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது .  இதற்கு காரணம் ராஜபக்ச குடும்பமே  2022  மார்ச் மாதத்தில் இருந்து பொருளாதாரத்தை இவர்கள் அழித்ததற்கான ஆதாரம் இருக்கின்றது. போர்குற்றங்களை மூடிமறைத்தது போன்று இந்த பொருளாதார குற்றங்களை மூடி மறைக்க முடியாது.

எனவே  போர்குற்றம் போலவே பொருளாதார குற்றம் செய்துள்ளது எனவே இதற்கு பொறுப்பு கூறவேண்டிய இவர்கள் தப்பி ஓடமுடியாது இதனை அலி சப்ரி உணரவேண்டும். அதேவேளை அலி சப்ரி ஒரு இஸ்லாமியர் இருந்தும் கொரோனவினால் உயிரிழந்த இவருடைய இனத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையை கூட எரித்தவர்களை காப்பாற்ற இன்று ஜெனீவாவில் இருக்கின்றார்.

இன்று ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சியில் கூட பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்றோம். வட-கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை தருமாறு கேட்டுக் கூட இந்த நாட்டில் இருக்கும்  பெண்களின் மானத்தை கூட கரிசனை எடுக்காது கலாச்சார சீர்கேட்டை கரிசனையில் எடுக்காது தமிழர்களின் முதலீடு வேண்டாம் அரசியல் தீர்வு தரமாட்டோம் என்று சொல்லுகின்ற அரசாங்கம் தான் இந்த அரசாங்கம் என்றார்.

“பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபகேடு.” – சாணக்கியன் காட்டம் !

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சாபகேடாக சந்திரகாந்தன் உள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் 07 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த நாட்களில் வெளிநாட்டிற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு அந்நாடுகளின் அரசியல் தரப்பினர், இலங்கையர்களுடன் சந்திப்பில் ஈடுப்பட்டேன். முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் அதிகாரத்தை பகிர்ந்தளித்துள்ளன. புலம் பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதிகார பகிர்வு அவசியமானது.

கடந்த நாட்களில் வெளிநாடுகளில் முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் அரசியலில் தொடர்புமில்லாமல் உள்ள இரண்டாம் தரப்பினருடன் ஒன்றிணைந்து இலங்கைக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காணி விவகாரத்திற்கு பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை,அதிகார பகிர்வு ஆகியவற்றுக்கு தீர்வு அவசியமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபகேடு. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளும் இராணுவம் வசமுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இவ்வாற நிலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் கட்சி மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை மட்டக்களப்புக்கு வரவேற்றுள்ளார்.

தனது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் நாமல் ராஜபக்ஷ உள்ளார். அவ்வாறிருக்கையில் நாமல் ராஜபக்ஷவை மேடைக்கேற்றி மட்டக்களப்பு மாவட்ட மக்களை தரம் குறைத்துள்ள சந்திரகாந்தனை சபையில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமலிருந்திருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் கூட கிடைத்திருக்காது. கல்முனை பிரதேச செயலக பிரிவு குறித்து விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம் என்றார்.

“அவசரகால சட்டம், கைது, ஆகியவை தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. தென்னிலங்கைக்கு புதியது ” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

காணாமலாக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணியாக காணப்படுகிறது.

தற்போதைய அரச தலைவர்கள் வரலாற்று ரீதியிலான தவறை திருத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருமித்த வகையில் தீர்வு காண முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார வலயங்களை ஸ்தாபித்தால் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை சிறந்த முறையில் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு அடிப்படை பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு அவசியம்.

காணாமலாக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் தற்போது கைது  செய்யப்படுகிறார்கள். சிறந்த மாற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களையும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் கைது செய்வதை விடுத்து.

மத்திய வங்கியினை கொள்கையடித்தவர்கள், சீனி வரி ஊடாக கொள்ளையடித்தவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தவர்களை கைது செய்ய அவதானம் செலுத்துங்கள்.

அவசரகால சட்டம், கைது, ஆகியவை தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. தமிழ் மக்கள் அனுபவித்த அரசின் அடக்குமுறைகளை தற்போது சிங்கள மக்களும் உணர்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

அரசியலமைப்பு ரீதியிலான மாற்றத்தையே போராட்டகாரர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவற்றை செயற்படுத்த அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் வீடு கட்டும் கனவை கலைத்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு,,? – சாணக்கியன் காட்டம் !

மாதாந்தம் 50 ஆயிரம் சம்பளம் பெறும் பட்டதாரி இளைஞர்களின் வீடு கட்டும் கனவை கலைத்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு,,? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ´

வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் 30 வருட யுத்தம் காரணமாக வீடுகளை இழந்து, வீடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டு, அழிக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசம். அந்த வகையிலேயே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாரிய வீடமைப்பு வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் அந்த வீடுகள் இதுவரை முடித்துக்கொடுக்கப்படாமல் உள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே வடக்கு கிழக்கில், நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்´ எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தை காட்டிலும் தற்போதைய அரசாங்கம் கடன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட சாணக்கியன்,

இந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மாத்திரமே கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனைக் கொண்டு வீடுகளை அமைக்கமுடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வீடமைப்புத்துறையின் முன்னாள் பிரதியமைச்சர், குறித்த வீடுகளுக்கு 6 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனினும் வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் பொய்யானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ளவர்கள் வீடமைப்பு சார்ந்த விடயங்களில் பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சாணக்கியன் எம்.பிக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்கு தொடுப்பேன்.”- தயா கமகே காட்டம் !

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக  மான நஷ்டஈடு வழக்கு தொடுப்பேன் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.

கொஹுவல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் வியாழக்கிழமை (26) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் வங்கியில் இருந்து நான் 3 பில்லியன் அல்லது 3 ஆயிரம் மில்லியனுக்கும் அதிக பணம் கடன் பெற்றதாகவும் கடந்த 3 வருடங்களாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இ.ராசமாணிக்கம் குற்றம் சாட்டியிருந்தார். அவர் இந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஊடக சந்திப்பொன்றின் போதும் தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயத்துக்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. என்றாலும் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு எதிராக எனக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

அத்துடன் சாணக்கியன் எம்.பி. தெரிவித்திருப்பதுபோல் தயா கமகே ஒரு சதமேனும் மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றதில்லை. நாங்கள் வியாபாரம் செய்கின்றவர்கள். வியாபார நடவடிக்கைக்காக தயா சமூக வியாபார நிறுவனம் மக்கள் வங்கியுடன் கடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் தயா சமூக நிறுனம் பெற்றுக்கொள்ளும் கடனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அதனால் எனது கெளரவத்தை பாதிக்கும் வகையில் என்மீது பொய் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சாணக்கியன் எம்.பிக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்கு தொடுப்பேன். மேலும் ரணில் விக்ரமசிங்கவுடன் சாணக்கியன் எம்.பிக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம்.

அதற்காக என்னை திருடர் என தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் என தெரிவிப்பதற்கு அவர் முயற்சிக்கின்றார். எனவே இந்த அபாண்டமான குற்றச்சாட்டை அவர் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

“எந்த ஆதனமும் இல்லாமல் ரணிலின் சகாக்களுக்கு 54பில்லியன் ரூபா கடன்கள் வழங்கியுள்ள மக்கள் வங்கி.”- இரா.சாணக்கியன் காட்டம் !

“பிள்ளையானுக்கும் கொள்கையில்லை,ரணிலுக்கும் கொள்கையில்லை.இருவரும் ஒன்றாக பயணிக்கமுடியும்.” என  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் மக்கள் எழுச்சிமூலம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் எதிரான மிகப்பெரும் துரோகச்செயலை செய்து பிரதமர் பதவியினை ஏற்று ஜனாதிபதி ராஜபக்ஸக்களை பாதுகாப்பதற்கான முழு முயற்சியையும் முன்னெடுத்துள்ளார்.

புதிதாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரும் எரிபொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தவிலையேற்றம் தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். 180ரூபாவாகயிருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி 365ரூபாவுக்கு வந்துள்ளது.பொருளாதாரத்தினை சரியாக முகாமைசெய்யாத காரணத்தினாலேயே இந்த நிலைமையேற்பட்டது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ எடுத்த பிழையான தீர்மானங்களே நாடு இந்த நிலைக்கு செல்வதற்கு காரணமாகவுள்ளன. எரிபொருள் அதிகரிததால் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இன்று மக்கள் இந்த பொருளாதார நிலைமைக்கு ஈடுகொடுக்கமுடியாத நிலையுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக என்ன செய்யவேண்டும் என இலங்கைக்கு உதவும் பல்வேறு அமைப்புகளும் ஸ்திரமான அரசியல் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்று கூறிவிட்டது. இலங்கையானது பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேவருவதாகயிருந்தால் இந்த அரசியல் ஸ்த்திரத்தன்மை ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக மக்கள் நம்பிக்கை வைக்ககூடிய ஜனாதிபதி,மக்கள் நம்பிக்கை வைக்ககூடிய பிரதமர்,மக்கள் நம்பிக்கைவைக்ககூடிய பாராளுமன்றம்,மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்ககூடிய அமைச்சரவை இருப்பதுதான் அரசியல் ஸ்திரத்தன்மையாகும்.இன்று சர்வதேசம் மறைமுகமாக சொல்வது கோத்தாபாய ராஜபக்ஸ வீட்டுக்கு செல்லவேண்டும்.

கோத்தா கோ ஹோம் என்ற அலை அனைத்து பகுதிளிலும் ஒலிக்கும் நிலையில் ஜனாதிபதி அவரது அதிகாரத்தினை குறைக்கும் சட்டம் என்ற போர்வையில் 21வது திருத்த சட்டத்தினை கொண்டுவந்து மக்களை ஏமாற்றும் நாடகத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

இந்த நாடு மிக பாரதூரமான நெருக்கடிகளை கொண்டுள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் கடந்த ஐந்த வருடத்தில் மக்கள் வங்கியின் ஊடாக ஆக கூடுதலான கடன்களைப்பெற்றவர்கள் இதுவரையில் ஒரு ரூபா கூட செலுத்தாதவர்கள் உள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் தயாகமகே என்னும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் 2019ஆம்ஆண்டு தொடக்கம் 2022ஆம்ஆண்டு வரையில் 5000மில்லியனுக்கும் அதிகமான தொகையினை கடனாக பெற்றுள்ளார். அதிகமான கடனைப்பெற்று இதுவரையில் ஒரு ரூபா கூட மீள செலுத்தாதவர்களில் முதல் பத்துப்பேரில் ஆறாவது இடத்தில் அவர் உள்ளார்.

இது ராஜபக்ஸ குடும்பத்தின் காசும் அல்ல தனியாரின் காசும் அல்ல.மக்களின் காசு.இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நான் பேசியதற்காக இன்று காலை மக்கள் வங்கியின் தலைவரினால் எனக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த கடன்களை மீளப்பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்வதாக கூறப்பட்டுள்ளது. மூன்று பில்லியன் பணம் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் நான்கு வருடத்திற்கு பின்னர் என்ன நடவடிக்கையெடுக்கலாம் என ஆராய்வதாக தெரிவிக்கின்றனர்.

லீசிங் கட்டமுடியாத சாதாரண மக்களின் வாகனங்களை பறித்துச்செல்கின்றீர்கள்,சிறு வர்த்தகளின் கடன்கள் கட்டாவிட்டால் வர்த்தக நிலையத்தினை ஏலத்தில் விடுகின்றீர்கள். தனிநபர் 3000இதுவரை கட்டவில்லையென்றதுடன் எனக்கு கடிதம் அனுப்புகின்றார்கள்.ஏனென்னால் அவர் ரணிலின் சகா என்பதனாலாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக நிதியமைச்சர் பதவியையேற்றதன் பின்னர் அந்த அமைச்சின் கீழ் வரும் மக்கள் வங்கி ஊடாக முதல்வேலையாக எனக்கு கடிதம் அனுப்பும் வேலையைதான் செய்துள்ளார்.

இனங்காணப்பட்ட முதல் பத்து பேருக்கு கடந்த ஐந்த வருடத்தில் 54பில்லியன் ரூபா கடன்கள் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படடுள்ளது. இது கோப் குழுவினால் பெறப்பட்ட தகவல்.இதனை நான் பகிரங்கப்படுத்தியதற்காக என்னை இடைநிறுத்தினாலும் நான் கவலைப்படப்போவதில்லை.கடன்பெறப்போகும்  வங்கிகளில் ஏதாவது அடமானம் வைத்தே பணம் வழங்கப்படுகின்றதே. ஆனால் இவ்வளவு பெரிய நிதியானது எந்தவித ஆதனமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பில் மக்கள் தினமும் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இன்று வேட்டிய மடிச்சு கட்டுவது குறித்து பேசுகின்றனர். ஆரையம்பதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றோலுக்கும் எரிவாயுவுக்கும் தினமும் கஸ்டப்படுகின்றனர். அதனை வீதிக்கு சென்று மக்களின் நிலைமையினை பார்த்து அதனை தீர்த்துவைக்க முயற்சி செய்யுங்கள். மேலதிகமாக 2000எரிவாயு சிலிண்டர்களை மட்டக்களப்புக்கு கொண்டுவரமுடியாத வக்கற்ற தலைவராகவே உங்கள் தலைவர் இருக்கின்றார். வேட்டியை மடித்துக்கட்டதேவையில்லை,மக்களுக்கு ஏதாவது செய்ய சொல்லுங்கள் இல்லாது விட்டால் பதவி விலகிவிட்டு வீட்டுக்கு செல்ல சொல்லுங்கள்.

மகிந்த ராஜபக்ஸ பிரதமராகயிருந்ததற்கு பதிலாக ரணில் (ராஜபக்ஸ) பிரதமராக தற்போதுள்ளார்.பிள்ளையான் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதுபோன்று ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவு அவர் வழங்கலாம். இதில் புதியதொரு வித்தியாசம் இல்லை.தற்போதும் பசில் ராஜபக்ஸதான் பாராளுமன்றத்தினை இயக்குகின்றார்.பிள்ளையானுக்கும் கொள்கையில்லை,ரணிலுக்கும் கொள்கையில்லை.இருவரும் ஒன்றாக பயணிக்கமுடியும்.”என அவர் தெரிவித்துள்ளார்.

“பாராளுமன்றம் மொட்டுக்கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல.”- நாடாளுமன்றில் சாணக்கியன்

பாராளுமன்றம் மொட்டுக்கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் சபைத்தலைவர் தினேஸ் குணவர்த்தனவிற்கு இடையில் கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்றன.

இன்றைய நாடாளுமன்ற அமர்விற்கு தலைமை தாங்கிய சபாநாயகர், ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது, தமக்கு அடுத்ததாக நாடாளுமன்றத்துக்கு தலைமை தாங்குவதற்காக தன்னை அழைத்த போதும், அவைத் தலைவர் தினேஸ் குணவர்த்தன, அதனை தடுத்தார் என இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

சபைக்கு தலைமை தாங்குமாறு படைக்கள சேவிதர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய இரா.சாணக்கியன் தயாராக இருந்தபோதும், தினேஸ் குணவர்த்தன, சபாநாயகருக்கு அனுப்பிய சில தகவல்களின் அடிப்படையில் இரா.சாணக்கியனுக்கு பதிலாக மற்றும் ஒருவர் சபைக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் இது நாடாளுமன்ற உறுப்பினரான தனது சிறப்புரிமையை மீறும் செயலாகும் என இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

இதன்போது இரா.சாணக்கியனும், M.A. சுமந்திரனும் தினேஸ் குணவர்த்தனவுடன் கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தனர்.

“நாம் கதிரைகளுக்காக நாடாளுமன்றம் வரவில்லை மக்களுக்காகவே வந்தோம். ஆனால் இவ்விடயமானது ஜனநாயகத்தை மீறும் ஒரு செயல்பாடாகும். பாராளுமன்றம் மொட்டுக்கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல.

ரணில் விக்கிரமசிங்கவின் (டீல்) வர்த்தகம் தொடர்பான விவாதத்தின்போது, நான் சபைக்கு தலைமை தாங்குவதை தினேஸ் குணவர்த்தன விரும்பவில்லை.“ என இரா.சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.