இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

சீனாவை வெளியேற சொன்ன இரா.சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் !

பாராளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘கோ ஹோம் சீனா’ என்று சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது தாம் சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

“இராணுவத்தினருக்கு புதிய வரவு-செலவு திட்டத்தில் 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது எதிர்க்கப்பட வேண்டிய விடயமல்ல.“ – இரா.சாணக்கியன்

“2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ‘சர்வஜன நீதி’ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இராணுவ சிப்பாய்களின் நலனுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆனால் ஒதுக்கப்படும் நிதி உண்மையில் இராணுவ சிப்பாய்களை சென்றடைகிறதா என்பதை ஆராய வேண்டும்.

நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள நாட்டு மக்களுக்கான நலன்புரி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் சீறுடை பிரான்ஸ் நாட்டில் இறக்குமதி செய்யப்படப்படுகிறது.

இராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் நவநாகரிக பொருள் கொள்வனவுக்கு செல்லும் போது அரச செலவுடன் அவர்களுக்காக இராணுவ சிப்பாய்கள் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. இவ்வாறான அடிப்படை முறையற்ற செயற்பாடுகள் முதலில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ள பின்னணியில் நேரடி வரி அறவிடலினால் நடுத்தர மக்கள்பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் சிகரெட்விற்பனை விலைக்கும், சிகரெட்நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பிற்கான வரைபுகளை தயாரிக்கும் அரசாங்கம் சிகரெட் நிறுவனத்திடமிருந்து முறையாக வரி அறவிட நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை வகுக்கவில்லை.

ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சிகரெட் நிறுவனத்திற்கு பல்வேறு வழிமுறையில் வரி விலக்கு வழங்கியுள்ளன. 2000 ஆம் ஆண்டு ஆட்சியில்  சிகரெட்ஒன்றின் விற்பனை விலைக்கும் – நிறுவனத்திடமிருந்து அறவிடப்படும் வரிக்கும் இடையில் சமனிலை தன்மையை பேணப்பட்டது. ,பிற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் சிகரெட் நிறுவனங்களுக்க சார்பாகவே செயற்பட்டது.

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சிகரெட் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டு வரி விதிப்புக்கு முன்னர் பல பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வருடம் மாத்திரம் 40 முதல் 50 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் ஒன்றின்விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது. ஆனால் சிகரெட் உற்பத்திக்கான வரி விலக்கு 50 சதவீதத்தால் வழங்கப்பட்டது.

ஆகவே நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நிறுவனம் பெறும் வருமானத்தில் ஒருபகுதியை அரசாங்கம் பெற்று அதனை நடுத்தர மக்களின் நலன்புரி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை நிதியமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

சாணக்கியனின் மட்டக்களப்பு காரியாலயத்தின் மீது தாக்குதல் – மீண்டும் ஒட்டுக் குழுக்கள் நடமாடுகின்றன என சாடல் !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனம் தெரியாத விசமிகளால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சோளார் மின்விளக்கம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.குறித்த மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் கடந்த 2 வருடங்களாக மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் தற்போது ஓரளவிற்கேனும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்ற நிலையில், மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக தான் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் வகையில், தன்னை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த செயற்பாடு அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீண்டும் மட்டக்களப்பில் ஒட்டுக்குழுக்கள் தங்களது ஆராஜக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனரா..? எனவும் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும்.” – இரா.சாணக்கியன்

“நாட்டை பாதுகாக்க இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோட்டா கோ கம போராட்டத்தை ஆரம்பிப்பதை போன்று கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘வனத்துறை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் வடக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும், நாடாளுமன்றத்திலும் உரையாற்றி இதுவரை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. கிழக்கு மாகாண அபிவிருத்தி குழு தலைவர் இவ்விடயத்தில் எம்முடன் இணங்குவார் என எதிர்பார்க்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் யானை மோதல் தாக்குதலினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை, வவுனத்தீவு, செங்கலடி மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள், விளை நிலங்களுக்கு யானைகள் உட்புகுந்து பயிர்களை நாசம் செய்து, மக்களின் குடியிறுப்புக்களில் புகுந்து வீடுகளையும் உடைத்தெறிகிறது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை திட்டம் வகுக்கப்பட வேண்டும். வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் வன சேவையாளர்களுக்கு வனவளத்துறை தொடர்பான தொழினுட்ப ரீதியான பயிற்சி வழங்கப்பட வேண்டும். பல ஆண்டு காலமபாக வனவளத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. வனவள அதிகாரிகளின் சேவை முழுமையாக செயற்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்கள் பாரம்பரியமாக விவசாயம் காணிகளுகளை வனவளத்துறையினர் ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளார்கள் ஆனால் மறுபுறம் மட்டக்களப்பு வாகரை பகுதியில் வனவளத்துறை திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளில் மண்நிரப்பி மண்மேடு உருவாக்கப்பட்டுள்ளது.

வனவளத்தறை இருவேறுப்பட்ட சட்டங்களை செயற்படுத்துகிறது. மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான மயிலன்தலை மேய்ச்சல் நிலப்பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநர் பிற மாகாணங்களில் இருந்து வந்தவர்களை குடிமயமர்த்தியுள்ளார்.

நாட்டில் மோசடி நிறைந்த அமைச்சராக சுற்றாடல் துறை அமைச்சு காணப்படுகிறது. புவிசரிதவியல் மற்றும் சுரங்க திணைக்களத்தின் தற்காலிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவருக்கு எதிராக திணைக்களத்தின் அதிகாரிகள் குற்றச்சாட்டுள்ளார்கள். நாட்டின் மண்வளத்தை பாதுகாக்க வேண்டிய இந்த தலைவர் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

சூழல் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பெருமிதமாக குறிப்பிடுகிறார். ஆனால் புவிசரிதவியல் திணைக்களம் சூழல் பாதிப்புக்கு பிரதான நிறுவனமாக காணப்படுகிறது. ஆகவே புவிசரிதவியல் மற்றும் சுரங்க திணைக்களத்தின் தலைவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். 15 நாட்களுக்கு காலவகாசம் வழங்குவேன். 15 நாட்களுக்குள் பதவி நீக்காவிடின் சுற்றுச் சூழல் தொடர்பில் சர்வதேச ஊடக சந்திப்பை நடத்துவேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மையங்களை அடையாளப்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு சுற்றுலா பயணிகள் எவரும் வருகை தரவில்லை.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் பேச்சுவார்த்தையில் ஆளும் தரப்பினரை மாத்திரம் இணைத்துக் கொள்ளாமல் எம்மையும், ஜனாதிபதி இணைத்துக் கொண்டால் உண்மை விபரங்களை அவருக்கு தெரிவிப்போம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக கடன் மறுசீரமைப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஊழியர்மட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டேன். இது மிகவும் முக்கியமானது.

நான் இலங்கை மக்கள் சார்பாகவே சபையில் உரையாற்றினேன். ஆனால் இலங்கையில் உள்ள சீன தூதரகம் இவ்விடயத்தில் எனது டுவிட்டர் கணக்கை இணைத்து டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது.

20 ரில்லியன் வெளிநாட்டு கையிருப்பை சீனா கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் சீனா முன்னிலையில் உள்ளது. 7.4 பில்லியன் டொலர்களை இலங்கை சீனாவிற்கு கடனாக வழங்க வேண்டும். 22 மில்லியன் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

20 ரில்லியன் வெளிநாட்டு கையிருப்பை கொண்டுள்ள சீனா இலங்கையின் உண்மையான நண்பனாயின் எரிபொருள், மற்றும் உணவு பொருட்களை வழங்குவதை விடுத்த சீனா இலங்கைக்கு கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அதுவே உண்மையான ஒத்துழைப்பாகும்.

22 மில்லியன் இலங்கை மக்கள் இனம், மதம் என்ற அடிப்படையில் வேறுப்பட்டு இருக்கலாம், ஆனால் நாடு எனும் போது ஒன்றிணைந்து செயற்படுவார்கள். பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்ந்து கடன் வழங்கி இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியள்ளது.

நாட்டை பாதுகாக்க இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோட்டா கோ கம போராட்டத்தை ஆரம்பிப்பதை போன்று கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும்.

அதற்கு நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம் என்பதை சீன அரசாங்கத்திற்கும், இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

“பாதை அமைக்கவும் , சுத்தப்படுத்துவதற்கும் பயன்படுத்தி இராணுவத்தை அழித்தவர் கோட்டாபய ராஜபக்ஷ” – இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு!

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இனி போராட்டத்தில் ஈடுப்பட்டால் இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்குவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை சிவில் பிரஜைகள் தான் இராணுவத்திலும், பாதுகாப்பு தரப்பிலும் சேவையாற்றுகிறார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இராணுவத்தை வரவழைக்க நேரிடும். இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள்

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள். ஆகவே போராட்டத்தை முடக்குவது குறித்து அவதானம் செலுத்துவதை விடுத்து பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண அவதானம் செலுத்துமாறும், அதற்கு கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை மாத்திரமல்ல, இராணுவத்தையும் இல்லாதொழித்து சென்றுள்ளார் என இராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ கால்வாய், சுத்தப்படுத்துவதற்கும், கட்டடம் அமைப்பதற்கும், வீதி நிர்மாணிப்புக்கும் இராணுவத்தை பயன்படுத்தினார். அமுதா கத என்ற விசேட படையணியை உருவாக்கி 40 ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு தனது இராணுவ நிலைப்பாட்டை மேம்படுத்தினார்.

இதன்பிறகு விவசாயத்துறை தொடர்பில் படையணியை ஸ்தாபித்து விவசாயத்தையும் முழுமையாக இல்லாதொழித்தார். நான் இராணுவத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை. இன்று இராணுவத்திற்காக வரிந்துக் கொள்பவர்கள் இராணுவத்தின் சம்பளம் தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்தினரது சம்பள அதிகரிப்புக்காக 20 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகிய எமக்கே ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்களினால் நாடு சீரழிந்துள்ளது. இருப்பதையும் சீரழிக்க வந்துள்ளார்கள். இராணுவத்தினரை விற்று பிழைத்து அரசியல் செய்யும் தரப்பினர் இராணுவத்தினரது சம்பளம் பற்றி கருத்துரைக்கவில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசாது நாடாளுமன்றில் சிறுபிள்ளைகள் போல சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வட-கிழக்கு தமிழ் எம்பிக்கள் !

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது (நவ 21.2022) “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார்.”என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில்; “கனடாவிற்கு ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.” எனவும்  இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

 

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தனின் காணி அபகரிப்பு மோசடி தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு ஒன்றை நியமிக்குமாறும் சபைக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாரந்தன் நேற்று (நவ. 21)நான் சபையில் இல்லாதபோது எனது பெயரை குறிப்பிட்டு ஒருசில விடயங்களை முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். காணி அபகரிப்பு தொடர்பில் ஒரு குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன்.

காணி அபகரிப்பு தொடர்பில் என்னிடம் உள்ள ஆவணங்களை தருகிறேன்,இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் உள்ள ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

கனடாவிற்கு  ஆட்களை கடத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆட்கடத்தல் தொடர்பில் சந்திரகாந்தனிடம் கேட்க வேண்டும்.

அவுஸ்ரேலியாவிற்கு ஆட்கடத்தல் தொடர்பில் ஏபிசி என்ற செய்தி நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியிட்ட செய்தியில் சந்திரகாந்தனின் சகோதரர் என குறிப்பிடப்படும் அகிலகுமார் சந்திரகாந்தன் என்பவர் ஆட்கடத்தலில் ஈடுப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி பத்திரத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழுவை நியமியுங்கள்.

மோசடி தொடர்பான சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்க தயார். ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முழுமையாக நிராகரிக்கிறேன் என்றார்.

……….

உண்மையிலேயே இந்த தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்த தமிழ் மக்கள் தொடர்பில் கிஞ்சித்தும் யோசிப்பதாக தெரியவில்லை. வடக்கில் ஈ.பி.டி.பி கட்சியினர் குறிப்பாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்தேசியக்கட்சிகளை குறிப்பாக கூட்டமைப்பினரை மலினப்படுத்திக்கொண்டிருக்கிறார். அதற்கு கூட்டமைப்பினர் பதில் கூறிக்கொண்டிருக்கின்றனர். இது தவிர கிழக்கில் பிள்ளையான் , வியாழேந்திரன் ஆகியோர் ஒரு குழுவில் நிற்க அவர்களை இரா.சாணக்கியன், கலையரசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வில் தாக்கியும் – அதற்கு பதிலாக பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் கூட்டமைப்பினரையும் தாக்கி பேசி வருவது வழமையாகிவிட்டதே தவிர மக்கள் பிரச்சினைகளை இவர்கள் பேசுவதாக தெரியவில்லை.

நேற்றைய அமர்வில் மீனவர்களையும் கவனத்தில் கொண்டு பட்ஜெட்டை தயாரியுங்கள் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சி நேற்று (21) பாராளுமன்றத்தின் நடுவில் தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இது தவிர கட்சி அரசியல் தொடர்பில் பல வாதங்களும் – முரண்களும் காணப்பட்டாலும் கூட மலையக தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான ஆரோக்கியமான பல நடவடிக்கைகளை மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  இப்படியாக பல தென்னிலங்கை, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை நாடாளுமன்றம் தெரிவுசெய்த மக்களுக்காக ஏதாவது செய்துவிட வேண்டும் என செயற்பட்டுக்கொண்டிருக்க வடக்கு – கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்களுடைய சொந்த – சுய விருப்பு –  வெறுப்பு அரசியலை செய்யும் சண்டைக்களமாக நாடாளுமன்றத்தை பாவித்துக்கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் பேசப்பட வேண்டிய – வலியுறுத்த வேண்டிய பல பிரச்சனைகள் வடக்கு- கிழக்கில் மலிந்து போய் காணப்பட நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழாயடி சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் சுதாகரித்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. புலி ஆதரவு  அரசியல் பேசுவவோரையும் – தேர்தல் கால வீர வசனங்களை பேசுவதையும் கைவிட்டு உண்மையாகவே மக்கள் பிரச்சினைகளுக்காக செயற்படும் தலைவர்களை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்ப முன்வராத வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

 

“தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் – சம்பந்தன் ஒப்பந்தம் தேவை” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய 6 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேசத்தையும், தமிழ் தலைமைகளையும் ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளை ஏற்க முடியாது என்றும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எமது அரசியல் உரிமைக்காக போராடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்று குறிப்பிடும் போது அனைவரும் ஒன்றிணைந்தே செயற்படுவோம் என்றும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையையும் அவர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் போராட்டத்தில் உயிர்நீர்த்த உறவுகளை நாங்கள் நினைவு கூறுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மூன்று கோடி ரூபாவுக்கு கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் இரா.சாணக்கியன் – நாடாளுமன்றில் பிள்ளையான் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.ஏ சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

“வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தான் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகிறது.” – இரா. சாணக்கியன்

“வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தான் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகிறது.” என  பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

அத்துடன் அதனை பார்வையிட்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சட்டவிரோத மண் அகழ்வு. வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இவ்வாறான மண் அகழ்வுகள் இடம்பெறுகின்றது. இது பாரிய அளவில் சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது. பின்னணியில் யார் உள்ளார். மாவட்டத்தில் இரண்டு அரச சார் அமைச்சர்கள் என்ன செய்கின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்கான அமைச்சர் உள்ளார்.

பல தலைமுறைகளாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணிகள் அரச காணிகள் வனத்துறைக்கு சொந்தமான காணிகள் என கையகப்படுதிவிட்டு. சட்ட விரோத மண் அகழ்வு மற்றும் வள சுரண்டல்களுக்கு இடமளிக்கின்றார்கள். ஆனால் அங்குள்ள மக்கள் காட்டுக்குள் விறகு வெட்டுவதற்காக செல்லும் வேளை வன பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதற்கான தண்டனை உட்பட இருபதாயிரம் மட்டில் அபராதமும் செலுத்தியுள்ளார்கள்.

இவை இப்படி இருக்க மிகவும் வெளிப்படையான முறையில் மண் அகழ்வானது இடம்பெறுகின்றது. வனத்துறையினருக்கு சொந்தமான காணியில் மண் சேமிக்கப்பட்டு கடத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் வனத்துறையும் உள்ளதா? மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் இதுதான்.

இவ்வாறான விடயங்கள் வெளியில் வரும் என்னும் பயமே காரணம். மண் அகழ்வுக்கு எமது மாவட்ட இரு அமைச்சர்களும் பின்னால் உள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்புக்கு என கட்டப்படுள்ள வரம்பை உடைத்து அதன் மூலம் கடத்துகின்றனர். அடுத்ததாக இங்குள்ள அரசியல் வாதிகள் தமது அரசியல் சுயலாபம் மற்றும் சுயநலம் கருதி தமிழ் முஸ்லீம் என பாகுபாடு காட்டி மக்களை பிரித்துவிட்டு இவ்வாறான சட்டவிரோத செயல்பாடுகளில் ஒன்றாக செயல்படுகின்றார்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பக்கமாக பிரித்து மக்களுக்கு சொந்தமான வளங்கள் சூறையாடப்படுகின்றது.

இவ் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் அல்லாதுவிடில் எமது மக்களும் எதிர்கால சந்ததியும் நிர்க்கதியாகுவது வெகு விரைவில் நடைபெறும். என்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல் – சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை !

தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

‘நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்று நண்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில் வெளியேறியிருந்தோம். இதன்போது எம் இதுவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்து வருவதனை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட EP-BEY 2600 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றே எம்மை பின்தொடர்ந்து வந்தது. இதுதொடர்பில் எமது பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரி அலோக்க பண்டார சிறிது நேரத்திற்கு பின்னர் எங்களது பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புலனாய்வாளர்களே எங்களை பின்தொடர்வதாக தெரிவித்தார். இந்த நேரத்தில் எங்கள் இருவர் சார்பிலும் நான் இந்த இடத்தில் முக்கிய கேள்வி ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றேன். எதிர்கட்சியில் உள்ளவர்களை ஏன் புலனாய்வாளர்கள் பின்தொடர்கின்றனர்.

புலனாய்வாளர்களுக்கு எவ்வாறு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார்கள் சைக்கிள்கள் வழங்கப்பட்டன என்கின்ற கேள்வியினையும் நான் முன்வைக்கின்றேன்
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன். இவ்வாறான செயற்பாடுகளினால் எங்கள் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என கூறினார்.