இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

“முட்டாள்களை கூட வைத்திருந்ததால் தான் கோட்டாபய வீழ்ந்தார். ரணிலும் அதையே செய்கிறார்.” – இரா.சாணக்கியன்

“முட்டாள்களை இராஜாங்க அமைச்சர்களாகவும் ஆலோசகர்களாகவும் வைத்திருந்தே கோட்டாபய பதவியில்லாமல் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன்போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் வட்டாரங்கள் மேற்கொள்ளவேண்டிய பிரசார செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்;  மக்கள் தேர்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஒரு தேர்தல் நடந்தால்தான் அது ஜனநாயக நாடு என்று ஏற்றுக்கொள்ளப்படும். அதன்மூலம் தான் எமது அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்லக்கூடிய சூழல் ஏற்படும். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விவாதிப்பதற்கு இரண்டு நாட்கள் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.

அங்கு எமது கருத்துகளை பதிவுசெய்வதற்கு தயாராகவுள்ளோம். தேர்தலுக்காக மக்கள் வீதியிலிறங்கி போராடவும் தயாராகவுள்ளனர்.

ஜனாதிபதி அண்மையில் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அத்தியாசிய சேவையாக சிலவற்றை அறிவித்துள்ளார். கழிவு நீர்வெளியேற்றப்படும் கால்வாய், வோக்குகள் கூட இந்த வர்த்தமானியில் வந்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் ஓடி ஒழிப்பதற்காக இந்த வோக்குகளை அத்தியாவசிய சேவையாக அறித்துள்ளாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

நாங்கள் கல்லடி பாலத்தில் கறுப்பு சுதந்திர தின போராட்டம் நடாத்திய பின்னர் இன்று பாலங்களும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும்.அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்காமல்போகும்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்கள் இந்த சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் சிலவேளைகளில் தேவைப்படாது, சீனாவிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வர ஆரம்பித்துள்ளார்கள். அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தேவைப்படாது என கூறுகின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தினை காட்டி காட்டி மக்களை ஏமாற்றுவதுடன் தேர்தலையும் பிற்போட்டு பொருளாதாரத்தினை நல்ல நிலைக்கு கொண்டுவரலாம் என்று ஜனாதிபதி கருதுகின்றாரானால் அவரை யாரோ ஏமாற்றுகின்றார்கள்.

கோட்டாபய ராஜபக்ஸ அவர்களையும் இவ்வாறான பொய்களை கூறியே ஏமாற்றினார்கள். கோட்டாபய ராஜபக்ஸ சேதன பசளை ஊடாக நாட்டின் வருமானம் அதிகரிக்கும் என்று கூறினார். ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முட்டாள் ஒருவரும் மில்லியனர் பில்லியனர் உருவாகபோகின்றார்கள் என்று கூறியிருந்தார்.

அவ்வாறான முட்டாள்களான இராஜாங்க அமைச்சர்களையும் ஆலோசகர்களையும் வைத்திருந்துதான் கோத்தபாய அவர்கள் பதவியில்லாமல்போகும் சூழல் ஏற்பட்டது. அவ்வாறு ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேர்தல் நடாத்ததேவையில்லை, பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம், சர்வதேச நாடுகளின் உதவி தேவையில்லையென்றால் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வரும்.

வித்தியாசம் என்னவென்றால் ரணில் விக்ரமசிங்க என்பவர் தனி நபர். கோட்டாபயவினை சுற்றி மொட்டு கட்சி என்ற ஒரு பாராளுமன்றமே சுற்றியிருந்தும் அவர் நாட்டைவிட்டு தப்பியோடவேண்டிய ஒரு சூழல்வந்தது. ஜனாதிபதி தனியொருவராகயிருப்பதன் காரணமாக அவர் அத்தியாவசிய சேவையாக அறிவித்த வோக்குக்குள்ளேயே ஒழிக்கவேண்டிய சூழல் ஏற்படும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

“எனக்கு தெரியும் உங்களுக்கு பெரிய மூளை உள்ளது.” – நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் சாணக்கியன்!

உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஜனாதிபதியிடமான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு தெரியும் உங்களுக்கு பெரிய மூளை உள்ளது என்று.

ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை IMF இனது உதவியுடன் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக சாக்கு போக்கு சொல்லப்பட்டு பிற்போடப்படும் உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா?

ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுமா? இதற்கான கால அவகாசம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“2015 ல் மைத்திரிபால சிறீசேன நமது தலைவர். 2023ல் நமது தலைவர் பிரபாகரன்.” – சாணக்கியத்தனமாக மக்களை ஏமாற்றும் இரா.சாணக்கியன்

“தமிழரசு கட்சி தலைவர் காட்டிய கட்சி” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் – 2023 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள் அறிமுகத்துடனுன் தேர்தல் பரப்புரை மக்கள் கூட்டம் நேற்று (19) இடம்பெற்றது.

இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வீதியின் இரண்டு பக்கங்களிலும் மக்களை காணமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. நாம் பார்க்க வேண்டும் என்றால் இராணுவ முகாம்களைத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்கள் என்றால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தான்.

எமது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான இணைந்த வட, கிழக்கென்பது சாத்தியமாகுமாக இருந்தால், அது நிச்சயமாக சாத்தியமாகும். அப்படி சாத்தியமாக வேண்டுமாக இருந்தால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நடைபெறவுள்ள இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொரு தேர்தல்.

நாங்கள் வீதி வீதியாக இறங்கி இராணுவமே வெளியேறு என கோசங்களை எழுப்புகின்றோம். அதேபோன்று இதனை பாராளுமன்றத்திலும் சொல்லும் ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆசனங்களிலிருந்து 10 ஆசனங்களுக்கு வாக்கு சரிவு வந்திருக்கின்ற காரணத்தினால், வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் இராணுவமே வெளியேறு என வீதியிலே சொன்னாலும் கூட, இது தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரைக்காக சொல்லுகின்ற கோசமே தவிர இது மக்களுடைய அபிலாசை இல்லை என்ற சந்தேகம் சில வேளைகளில் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

எங்களுக்கான வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் சர்வதேசத்துடன் பேசும் போது எங்களுடைய பலம் குறைந்துள்ளதாகவே காணக்கூடியதாக இருகின்றது.

இதன் காரணமாகவே நாம் சொல்கின்றோம் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த சின்னம் தலைவர் காட்டிய சின்னம், உலக நாடுகளுக்கு நன்கு தெரிந்த சின்னம். ஆகவே, மக்கள் இந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.“ என தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்த போதும் சரி அதற்கு  பிற்பட்டபகுதியிலும் சரி இரா.சாணக்கியன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர விசுவாசியாக உலா வந்தவர். திடீரென ஒரு மேடையில் இரா.சம்பந்தனுக்கு பொன்னாடை போர்த்தி தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்ட இரா.சாணக்கியன் இன்று முல்லைத்தீவில் நின்று கொண்டு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தேர்ந்தெடுத்த கட்சி தங்களுடையது என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்.

சாணக்கியன் போல உசுப்பேற்றி வாக்கு சம்பாதிக்கும் அரசியல் தலைவர்களாலேயே வடக்கு இலங்கையும் – தென் இலங்கையும் இன்னமும் முரண்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

தலைவர் காட்டிய கட்சி என்ற  கருத்தை இரா.சாணக்கியன் கிழக்கில் பேசமாட்டார். அங்கு முஸ்லிம்கள் இருப்பதால் பாராளுமன்ற தேர்தலில் அவர்களின் ஓட்டுக்கள் பெரும்பாலும் கிடைக்காது விட்டுவிடும் என்ற அச்சம் தான்.

உள்ளூராட்சி தேர்தலுக்கும் இவர்கள் பேசும் தமிழ்தேசியத்துக்கும் பெரிதாக தொடர்பு இல்லை என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். பிரதேச சபைத் தேர்தல் முழுமையாக அபிவிருத்தியே முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது. இந்த தமிழ் தேசியவாதிகளின் சந்தர்ப்பவாத அரசியலால் உந்தப்பட்டு தமிழ் மக்கள் தமிழரசுக்கட்சி உருவான காலம் முதல் அதற்கும் அதன் கூட்டணிக்கும் தான் வாக்களித்து வந்திருக்கிறார்கள். விளைவு இன்னமும் நமது பகுதிகள் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளன. வறுமை இன்னமும் அதிகமாகவுள்ளது. குன்றும் குழியுமான பாதைகள், அடிப்படை வசதிகளற்ற கிராமங்கள், சுய  தொழில் உற்பத்திகள் விருத்தி செய்யப்படாத நிலை என இந்த தமிழ்தேசியவாதிகளை நம்பியதால் நமது மக்கள் இழந்தது அதிகம்.

இரா.சாணக்கியன் போன்ற சந்தர்ப்பவாத அரசியல் செய்வோரை ஒதுக்கிவிட்டு தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சரி மக்கள் பற்றி பேசும் – கற்ற – புதிய மாற்றத்தை பேசும் இளைஞர்களை தெரிவு செய்ய முன்வர வேண்டும்.

“போராட்ட வடிவம் மாறலாம். ஆனால் இன விடுதலையே இலக்கு.” – இரா.சாணக்கியன்

“தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தற்போது பொருளாதாரச் சுதந்திரமே மறுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தமிழர்களாகிய எமக்கு ஜனநாயக மற்றும் அரசியல் ரீதியில் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“75ஆவது சுதந்திர தினத்தினைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு இருள் சூழ்ந்த நாளாகும். போராட்டத்தின் வடிவம் மாறியிருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கான இன விடுதலையே எமக்கான ஒரே இலக்காக அமைந்துள்ளது. 75 ஆண்டுகளாக தமிழர்களாகிய எமக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கின்றது.

தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தற்போது பொருளாதாரச் சுதந்திரமே மறுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தமிழர்களாகிய எமக்கு ஜனநாயக மற்றும் அரசியல் ரீதியில் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.

எனவே எமக்கு இந்த நாட்டில் மறுக்கப்பட்டுள்ள சுதந்திரங்களுடன் சம அந்தஸ்தும் கூட மறுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், 13ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயமாகும். எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை இந்த 13 திருத்தச் சட்டத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் மூலமே எமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் இருக்கும்.

எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடான தீர்வு என்பது சாத்தியமற்றதாகும். நாம் எமது சொந்த நாட்டிலேயே இரண்டாம் கட்டப் பிரஜைகளாகவே இருக்கின்றோம்.

எனவே தமிழர்களாகிய நாம் எமது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது. எமக்கான உரிமைகளைத் தீர்மானிப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை.

எனவே இந்த விடயத்தில் சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்ப்பதற்கு நாம் பல வேலைத்திட்டங்களை மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளோம். இந்த சுதந்திர தினமானது எமக்கு இருள் தினமாகும். எனவே நாம் எமது உரிமைகளை நாம் போராடியே பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த தினத்தில் நாம் எமது விடுதலைக்காகப் போராடுவோம் என சபதம் எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இருள் தினம் பெப்ரவரி நான்காம் திகதி எனும் தலைப்பில் நாம் நாளை கல்லடிப் பாலத்திற்கு அருகில் முன்னெடுக்க இருக்கின்ற எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்று கூடவேண்டும் என்பதுடன், இந்த சுதந்திர தினம் எமக்கான இருள்தினம் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.

எனவே எமக்கு விடுதலை தேவை என சிந்திக்கின்ற ஒவ்வொரு தமிழனும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கு பெற வேண்டும். அத்துடன் பெருந்திரளான மக்கள் பங்கு கொள்வதன் மூலம் எமது இனத்தின் விடுதலைக்கான தேவையினை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதுகெலும்பு உள்ள துணிவான அரசியல்வாதி.” – இரா.சாணக்கியன் பாராட்டு!

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று துணிவுடன் நில்லுங்கள்,ஒரு முதுகெலும்பு உள்ளவராயிருங்கள்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ; சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில்ராஜபக்ஸ அவர்கள் யாழில் வீணைச்சின்னத்திலும் கிழக்கில் மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் பொதுஜன பெரமுன போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார்.

படகு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டின் முகவராகவே உள்ளது என்பதை நாங்கள் கடந்த காலத்தில் தெரிவித்துவருகின்றோம்.

பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் என்பவர் மூன்று பகுதிகளில் போட்டியிடப்போவதாக தெரிவித்திருந்த செய்திவெளிவந்திருந்தது.ஆனால் வேட்பு மனுக்கான கட்டுப்பணத்தினை அவர் செலுத்தியிருந்தபோதிலும் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.

அப்போதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.அன்று எழுந்த சந்தேகங்கள் அனைத்தையும் பசில் ராஜபக்ஸ அவர்கள் படகு கட்சியின் ஊடாகத்தான் பொதுஜன பெரமுன கட்சி போட்டியிடுகின்றது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டினை நாசமாக்கிய பொதுஜன பெரமுன கட்சி,நாட்டின் விவசாயிகளை நடுத்தெருவில் கொண்டுவந்துவிட்ட கட்சி,எரிபொருள் தட்டுப்பாட்டை நாட்டில் ஏற்படுத்தியவர்கள்,எங்களது பிரதேசத்திலிருந்த மண் வளங்களை கொள்ளையிட்டவர்கள் இந்த பொதுஜன பெரமுனவினை சோந்தவர்கள்.

இவ்வாறு பொதுஜன பெரமுன என்ற கட்சியின் ஜனாதிபதி நாட்டினை விட்டு ஓடவேண்டிய சூழ்நிலையில் அக்கட்சியின் பிரதமர்து பதவியை இராஜினாசெய்த நிலையிலும் அதன் தேசிய அமைப்பாளர் அமெரிக்க சென்று ஒழிந்த சூழ்நிலையினையும் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்தது.
பொதுஜன பெரமுனவின் காரியாலம் மட்டக்களப்பு உட்பட அனைத்து பகுதிகளிலும் மக்களினால் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் பொதுஜன பெரமுன என்ற கட்சி இங்கு போட்டியிட முடியாத நிலையில் மொட்டு சின்னத்திற்கு பதிலாக படகு சின்னத்தில் களமிறங்கி இந்த மாவட்ட மக்களை ஏமாற்றுவதற்கு சிவநேசதுரை சந்திரகாந்தன் எடுத்த முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றேன்.

பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவது என்றால் அதனை தைரியமாக சொல்லுங்கள்.கட்சியின் செயலாளர் சொல்கின்றார் தனித்து படகில் போட்டியிடுகின்றோம் என்று ஆனால் எஜமான பசில் ராஜபக்ஸ கூறுகின்றார் மொட்டு படகில் போட்டிபோடுகின்றது என்று கூறுகின்றார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று துணிவுடன் நில்லுங்கள்,ஒரு முதுகெலும்பு உள்ளவராகயிருங்கள்.டக்ளஸ் தேவானந்தா தாங்கள் பொதுஜன பெரமுன கட்சி என்று தைரியமாக ஏற்றுக்கொள்கின்றார்.

ஆனால் நீங்கள் மட்டும் இங்கு இரட்டைவேடம் போடுகீன்றீர்கள்.மட்டக்களப்பு மாவட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்றமுடியும் என்று நினைக்கின்றீர்களா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எங்களுக்கு போட்டியில்லை.ஆனால் மாவட்ட மக்களை தொடர்ந்த நீங்கள் ஏமாற்றமுடியாது.நேற்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இழந்துள்ளது.

இது முதலாவது அடியாகும்.நாங்கள் நினைத்திருந்தால் வாகரையினையும் கைப்பற்றியிருப்போம்.ஆனால் அந்த மக்களால் நீங்கள் துரத்தியடிக்கப்படவேண்டும் என்பதற்காக விட்டிருக்கின்றோம்.வட்டாரங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் பிச்சையெடுப்பதுபோன்று வேட்பாளர்களை தேடி அலைகின்றனர்.” என தெரிவித்தார்.

“இம்முறை 100க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் தமிழரசுக் கட்சி வெற்றி பெறும்.” – இரா.சாணக்கியன்

“இம்முறை 100க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் தமிழரசுக் கட்சி வெற்றி பெறும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

மழையுடன் ஆரம்பித்துள்ள பல நிகழ்வுகளை வெற்றிகரமாகவே முடித்துள்ளோம். இதற்கு சிறந்த உதாரணமாக, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியினை குறிப்பிடலாம். தமிழரசு கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.

குறிப்பாக, சொல்லப்போனால், இந்த தேர்தலை பொறுத்தவரையில், அதிகளவான உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 76 வட்டாரங்களில் வெற்றி பெற்ற எமக்கு, இம்முறை 100க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் தமிழரசுக் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

கடந்த காலங்களில் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போதும், ஆட்சியமைப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருந்தோம். எனினும், எங்களுடைய தந்திரமான நடவடிக்கை காரணமாக இம்முறை எந்தவொரு ஒட்டுக்குழுவின் ஆதரவும் இல்லாமல் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“சம்பந்தன் ஐயா கார் மாதிரி. அந்தக் காரின் டயர் கொஞ்சம் தேய்ந்து உள்ளது.” – இரா. சாணக்கியன்

“சம்பந்தன் ஐயா கார் மாதிரி. அந்தக் காரின் டயர் கொஞ்சம் தேய்ந்து உள்ளது.”என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்து செயற்படாத பட்சத்தில் அடுத்த 75 ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தை முழுமையாக இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என மேலும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் இல்லாது போகும் அபாயம் காணப்படுவதாக மருதமுனையில் இடம்பெற்ற இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“ தமிழ் மொழியினால் கிறிஸ்தவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம். வடக்கு கிழக்கில் கூட தமிழ் மொழியின் ஊடாக தான் எமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.

1948 ஆம் ஆண்டில் இருந்து எமது இனங்களுக்கிடையிலான விகிதாசாரங்களை சம்பந்தன் ஐயா ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு புள்ளிவிபரவியல் ஒன்றினை வைத்திருக்கின்றார். 90 வயதிலும் இவ்வாறான ஆய்வுகளை சம்பந்தன் ஐயா மேற்கொள்கின்றார்.

சம்பந்தன் ஐயாவினை பற்றி நான் சில இடங்களில் அவர் கார் மாதிரி என்று குறிப்பிட்டுள்ளேன். அந்தக் காரின் டயர் கொஞ்சம் தேய்ந்து உள்ளது. ஆனால் இயந்திரம் நன்றாக ஓடுகின்றது. அப்படி தான் அவர் தற்போது இவ்வாறான புள்ளிவிபரங்களை வைத்திருக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஏனைய மாகாணங்களை விட பெரும்பான்மை சமூகத்தினர் 800 வீதத்தினால் அதிகரித்துள்ளனர்.

அதிலும் அம்பாறை மாவட்டத்தில் தான் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே வடக்கு – கிழக்கில் உள்ள நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும்” – என்றார்.

சஜித் பிரேமதாசவுக்கு பூரண ஆதரவினை வழங்கத்தயார் – இரா.சாணக்கியன்

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை வழங்க எதிர்க்கட்சித் தலைவர் முன்வருவாராக இருந்தால், பூரண ஆதரவினை வழங்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2001 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தமிழர்களினுடைய பிரச்சனைக்கான தீர்வை வழங்க முன் வந்த போது அதை தடுத்தவர் தான் தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்க. ஆனால் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்குவதில் ஆர்வமாக உள்ளார்.

பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றிய பேச்சுக்களின் போது எதிர்க்கின்ற நிலையே  காணப்பட்டாலும் கூட சஜித் பிரேமதாச இதிலிருந்து வேறுபடுகிறார்.

இதனால் எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரச்சினைக்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாக சஜித் பிரேமதாச ஒத்துக்கொண்டால் அவருக்கான முழுமையான ஆதரவை வழங்க தயாராக உள்ளதாகவும் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

சீனாவை வெளியேற சொன்ன இரா.சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் !

பாராளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘கோ ஹோம் சீனா’ என்று சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது தாம் சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

“இராணுவத்தினருக்கு புதிய வரவு-செலவு திட்டத்தில் 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது எதிர்க்கப்பட வேண்டிய விடயமல்ல.“ – இரா.சாணக்கியன்

“2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ‘சர்வஜன நீதி’ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இராணுவ சிப்பாய்களின் நலனுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆனால் ஒதுக்கப்படும் நிதி உண்மையில் இராணுவ சிப்பாய்களை சென்றடைகிறதா என்பதை ஆராய வேண்டும்.

நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள நாட்டு மக்களுக்கான நலன்புரி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் சீறுடை பிரான்ஸ் நாட்டில் இறக்குமதி செய்யப்படப்படுகிறது.

இராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் நவநாகரிக பொருள் கொள்வனவுக்கு செல்லும் போது அரச செலவுடன் அவர்களுக்காக இராணுவ சிப்பாய்கள் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. இவ்வாறான அடிப்படை முறையற்ற செயற்பாடுகள் முதலில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ள பின்னணியில் நேரடி வரி அறவிடலினால் நடுத்தர மக்கள்பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் சிகரெட்விற்பனை விலைக்கும், சிகரெட்நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பிற்கான வரைபுகளை தயாரிக்கும் அரசாங்கம் சிகரெட் நிறுவனத்திடமிருந்து முறையாக வரி அறவிட நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை வகுக்கவில்லை.

ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சிகரெட் நிறுவனத்திற்கு பல்வேறு வழிமுறையில் வரி விலக்கு வழங்கியுள்ளன. 2000 ஆம் ஆண்டு ஆட்சியில்  சிகரெட்ஒன்றின் விற்பனை விலைக்கும் – நிறுவனத்திடமிருந்து அறவிடப்படும் வரிக்கும் இடையில் சமனிலை தன்மையை பேணப்பட்டது. ,பிற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் சிகரெட் நிறுவனங்களுக்க சார்பாகவே செயற்பட்டது.

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சிகரெட் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டு வரி விதிப்புக்கு முன்னர் பல பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வருடம் மாத்திரம் 40 முதல் 50 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் ஒன்றின்விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது. ஆனால் சிகரெட் உற்பத்திக்கான வரி விலக்கு 50 சதவீதத்தால் வழங்கப்பட்டது.

ஆகவே நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நிறுவனம் பெறும் வருமானத்தில் ஒருபகுதியை அரசாங்கம் பெற்று அதனை நடுத்தர மக்களின் நலன்புரி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை நிதியமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.