இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

இப்போதும் தமிழக அரசிடம் ஆயுதம் நான் கேட்கிறேன் – சென்னையில் இரா.சாணக்கியன்

முன்னரான காலப்பகுதியில் ஈழத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகவும் அதற்கு தமிழக அரசு உதவியதாகவும், இப்போதும் தமிழக அரசிடம் ஆயுதம் நான் கேட்கிறேன், அந்த ஆயுதம் பொருளாதார ஆதரவே, என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சென்னையில் நேற்றையதினம் (11) ஆரம்பமான 2024ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர் தினத்தின் முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது தமிழக மாநில அரசு செய்த உதவிக்கு சாணக்கியன் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நெருக்கடியான நேரத்தில் தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பியது, பெருமையான தருணம், ஏனெனில் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்குமட்டுமல்ல, அனைத்து இலங்கையர்களுக்கும் அனுப்பப்பட்டது என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேவேளை, 1980 களில், ஈழத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகம் அதற்கான உதவிகளை தமிழக அரசு வழங்கியது இப்போது தமிழக அரசிடம் நான் ஆயுதம் கேட்கிறேன், பொருளாதார ஆதரவே, அந்த ஆயுதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக தமிழ்நாட்டு அரசிடம் கேட்கும் ஆயுதமே இந்த பொருளாதார வளர்ச்சி. இந்த பொருளாதார வளர்ச்சியை வைத்து ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்க்காலத்தை அமைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் – பெண்ணின் கழுத்தை நெரித்த பொலிஸார் !

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்றமையால்,  பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக சென்ற பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி, முக்கியமாக இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியில் நிற்க வைத்து பிரதான கதவை பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரான பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து  அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர் பிரச்சினை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக சூரிய கலங்களை நிறுவுவதற்காக விவசாய காணிகளை கையகப்படுத்துவது சம்பந்தமான பிரச்சினை, மணல் அனுமதிப் பத்திரம் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள், வாகரை மீனவர்கள் பிரச்சினை, காணிகளை காப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடு வழங்கச் சென்றுள்ளனர்.

இவ்வாறு மக்கள் பிரச்சினையை ஆராய வேண்டிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது பிரச்சினைகளை தெரிவிக்க வந்த பொதுமக்களையும், பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,  ஊடகவியலாளர்கள் என அனைவரையும் மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் பெண் ஒருவரின் கழுத்தை காவல்துறையினர் நெரித்தமையால் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மாவட்ட அரசியல்வாதிகளின், மாவட்ட முதலாளிகளின், கார்ப்பரேட் கொம்பனிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இடமாக இது போன்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதியை பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.

மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள்வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விளங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால் வழங்கப்பட்ட போதிலும்,அதனை ஏற்றுக்கொள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்குஆபத்தான நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவத்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, இரா. சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, இரா.சாணக்கியனும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமூகமாக இடம்பெற்றது.

“வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் கைவசமுள்ளன. அரசுடன் இணைந்து செயற்பட தயார்.” – இரா.சாணக்கியன்

“வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் கைவசமுள்ளன. வடக்கின் அபிவிருத்திக்காக அரசுடன் இணைந்து செயற்பட தயார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டை நடத்தி செல்ல வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். செலவு குறைவாக இருக்கவேண்டும். சாதாரணமாக கூறுவது என்றால் நாட்டில் பணம் இருக்க வேண்டும்.உலகில் ஷ்டீவ் ஜொப்ஸ். பில்கேடஸ், ஜெக் மார்க் போன்ற மில்லியனர்கள், பில்லியனர்கள் தமது திறமையால், உழைப்பால் முன்னேறி வந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், எமது நாட்டில் மில்லியனர்கள் அதிகளவில் உள்ளனர். திருட்டுகளின் ஊடாக மில்லியனரகள் ஆனவர்கள் உள்ளனர். அவர்களின் திருட்டுகளுக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் உள்ளனர்.  திறமையால் முன்னேறியவர்களும் இருக்கின்றனர். எனினும்,  அரசியல்வாதிகள் உதவியுடன் பணம் சம்பாதித்தவர்களே அதிகளவானவர்கள் உள்ளனர். அண்மைய காலங்களை எடுத்துக்கொண்டால் ஒரு வருடத்துக்குள் பில்லியன் கணக்கில் இலாபம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கு அவ்வாறு முடியும் என்றால், அரசுக்கு வருமானம் குறைவடைந்தமை குறித்து அரசாங்கம் தேடியறிய வேண்டும்.

அரசு வழங்கிய வரி சலுகைகள் காரணமாக பொதுமக்களை விட நிறுவனங்களே அதிகளவில் நன்மை பெற்றனர். இன்று சீமெந்து, பால்மா, கேஸ் உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன. சீனி மோசடி, வெள்ளைப்பூடு மோசடி என்று மோசடிகளை அடுக்கிக்கொண்டே செல்லாம். நான் விமர்சிக்கவில்லை. வரிச்சலுகை வழங்கப்படுவதால் சாதாரண மக்கள் மீதே தாக்கம் செலுத்துகின்றது.  பாரிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதில்லை. எனவேதான், பொதுமக்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்கும் வகையிலான வரிச்சலுகை முறையினரை அறிமுகப்படுத்துமாறு நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம்.

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க 2019 ஏப்ரல் பட்ஜட்டில் முன்மொழியப்பட்டது. இன்றுவரை 153 குடும்பங்களுக்கு மாத்திரம் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அந்த கொடுப்பனவும் 2019 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படவில்லை. காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனினும், அதனை செய்யும் வரை அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். அதற்காக மரண சான்றிதல் வழங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே  காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் வரை இந்த தொகை அந்த மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். வடக்கு – கிழக்கில் உள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எம்மிடம் உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு – கிழக்கில் உங்கள் அருகில் வைத்திருந்த அந்த நபர்கள் செய்த மோசடிகள், திருட்டுகள் காரணமாகவே நீங்கள் பாரிய தோல்வியை அந்தப் பகுதிகளில் சந்திக்க நேரிட்டது. இன்றும் அதுதான் நடக்க போகின்றது. நிதியமைச்சரின் கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் உள்ளது. பீ.சந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்.

அடுத்தது, சதாசிவம் மயுரன் வியாழேந்திரனின் தம்பி, அடுத்தது, சிவனேசத்துறை சந்திரகாந்தன். இந்த தகவல்களை நாடாளுமன்றில் தான் நான் பெற்றுக்கொண்டேன். நாங்கள் நிதியமைச்சருடன் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி வேலைத்திடங்களில் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். எம்மிடம் சிறந்த முன்மொழிவுகள் உள்ளன.

மாவட்ட ரீதியில் சில முன்மொழிவுகளை கூட எம்மால் வழங்க முடியாது உள்ளது. எனவே எமது திட்டங்களை முன்மொழிய எமக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள்.“ எனக்குறிப்பிட்டுள்ளார்.