இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்..” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளதால்  வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேணும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10) உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்.இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருந்தாலும், அதற்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமைக்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள அமைச்சர் உள்ள நாட்டில், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர். எனவே அவர்களுக்கு விரைவாக இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக தபால் மூலமாகவேணும் அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை அரசாங்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தும் என நம்புகின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார்.” – இரா.சாணக்கியன்

“ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்குத் தெரியும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஒரே நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என நாம் கேட்கின்றோம். எம்மைப் புறக்கணித்தால் நாம் வேறு எங்கு செல்வது? எனவே ஜனாதிபதியிடம் நாம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன செய்வார் என்பது எமக்கும் தெரியும். ஜனநாயகத்தை பாதுகாக்க மாட்டார் என்பதும், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்குத் தெரியும்.

நாட்டில் இன்று ஒருபுறம் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தமது விவசாயத்தை ஏதேனும் ஒரு விதத்தில் முன்னெடுக்க முடியும். ஆனால் மக்களுக்கே பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது.

அடுத்த ஆண்டுக்குள் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நட்டஈடு கொடுத்துவிட்டு மக்களுக்கு ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு எவ்வாறு தீர்வு கொடுப்பது?

மக்களுக்கு ஒரு வேளை உணவு கிடைக்காவிட்டால் ஏற்படும் நிலை என்ன என்பது சகலருக்கும் தெரியும். அடுத்த ஒரு வாரத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். இதனை எவரும் மறுக்க முடியாது. இந்த நெருக்கடியில் கறுப்பு சந்தையின் தேவை அதிகரிக்கும். மக்களும் கறுப்புச் சந்தையை நாடும் நிலைமை ஏற்படும்” என்றார்.

“அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காதீர்கள்.” – இரா.சாணக்கியன்

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காமல் வெளியேறிதன் பின்னர் விமர்சியுங்கள் என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்திலிருந்து கொண்டு ஆளும் கட்சியினர் அரசாங்கத்தினை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்திலிருந்து கொண்டு எதிர்கட்சிக்கான வேலையினை செய்ய முடியாது. அரசாங்கத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் எங்களுடன் இணைந்து அந்த வேலையினை செய்யுங்கள்.

அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் அரசாங்கத்தினை விமர்சிப்பதாகவே நாங்கள் நினைப்போம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் முப்படையை வைத்திருந்த காலம் போய் இன்று பத்துபேருடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம்.” – இரா.சாணக்கியன் ஆதங்கம் !

“அபிவிருத்தி என்பது வெறுமனே கொங்கிறீற்றுப் பாதை போடுவதோ கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்று சொல்லி காசைப் பிரித்துக் கொடுப்பதோ அல்ல. எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றமே மக்களின் பொருளாதார நலனுக்கான அபிவிருத்தி என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் முப்படையை வைத்துக் கொண்டிருந்த காலம் போய் இன்று பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டே பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம். அவ்வாறு இருக்கையில் எமது பலம், பலவீனம் என்ன என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் வரலாறு காணாத அளவிற்கு மக்களின் எதிர்ப்பினை சந்தித்த அரசாங்கமொன்று செயலில் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் மிகமிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்பைச் சம்பாதித்த அரசென்று சொன்னால் அது இதுவாகத் தான் இருக்கும்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது மாநாட்டிலேயே இதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் மூவர் மூன்று விதமான கருத்துகளைச் சொல்லியிருந்தார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் மோசமான நிலைமை குறித்த உண்மையான கருத்தை இதன் போது வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களிலே தாங்கள் ஒரு தனிக்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் கட்சி என்பன மொட்டுவின் பங்காளிகள் என்பதை நேற்றைய தினம் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இவை அனைத்தையும் தாண்டி நாங்கள் தற்போது மட்டக்களப்பின் நிலைமை குறித்துப் பார்த்தால், மட்டக்களப்பில் பசளை இல்லாமல் விவசாயிகள் மிகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கையில் பொங்கலுக்குப் பின்னர் விவசாயிகள் மில்லியனர்களாகப் போவதாக அலட்சியமான கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஏனெனில் இந்த மாவட்டத்திலே விவசாயத்தை நம்பி வாழும் மக்களை மிகவும் கேவலப்படுத்தும் முகமாக பசளை இல்லாவிட்டாலும் விவசாயம் செய்ய வேண்டும், மில்லியனர்களாக ஆக முடியும் என்ற பொய்யான விடயங்களைச் சொல்வதன் ஊடாக பொருளாதாரம் தொடர்பாக அவருக்கு இருக்கும் அறிவே வெளிப்படுகின்றது.

இவர்கள் சொல்வது போல் குறைந்த விளைச்சலில் விவசாயிகள் மில்லியனர்களாக ஆகுவதாக இருந்தால் இந்த மாவட்டத்திலே மக்கள் அரிசியை விடுத்து வேறு எதையாவது சாப்பிட வேண்டும். ஏனெனில் விளைச்சல் குறையுமாக இருந்தால் நெல்லின் விலை அதிகரிக்கும் நெல் விலை அதிகரித்தால் அரிசியின் விலை அதிகரிக்கும். அரிசியின் விலை அதிகரித்தால் அன்றாடம் சாப்பிடுவதற்குக் கூட மக்கள் கஷ்டப்படும் நிலைமையே உருவாகும்.

எப்பாடுபட்டாவது விவசாயிகள் முட்டி மோதி விவசாயத்தில் ஈடுபட்டாலும், அடுத்து இருக்கும் மிக முக்கிய பிரச்சனை யானைப் பிரச்சனை. கடந்த சில நாட்களாக யானை தாக்கத்திற்குள்ளாகி எத்தனையோ பேர் மரணத்தைத் தழுவிக் கொண்டனர். இது மிகவும் கவலையான விடயம். கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று வந்தவர்களிடம் ஒரு கேள்வி. 2020ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் வரை கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கத்தினால் 670 கிலோமீட்டர் யானை வேலி அமைக்கப்பட்டது. அக்காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட எமது மக்களுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற யானை வேலி விடயத்தைச் செய்திருந்தோம். வடக்கு கிழக்கிலே சுமார் 1200 கிலோமீட்டர் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அரசாங்கத்துடன் இருந்து மக்களுக்கு நன்மை செய்யப் போகின்றோம், கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று வந்தவர்களால் 2020 செம்டெம்பர் தொடக்கம் 2021 செப்டெம்பர் வரை 40 கிலோமீட்டர் யானை வேலி தான் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழர் வாழும் பிரதேசம் ஒன்றோ இரண்டு தான் இருக்கின்றது. அபிவிருத்தி என்பது வெறுமனே கொங்கிறீற்றுப் பாதை போடுவதோ கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்று சொல்லி காசைப் பிரித்துக் கொடுப்பதோ அல்ல. எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றமே மக்களின் பொருளாதார நலனுக்கான அபிவிருத்தி என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையிலே இன்று எங்கள் விவசாயிகள் உரமில்லாமல் களை நாசினிகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இன்று அரசாங்கத்துடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறுமனே தென்னங்கன்றுகளைக் கொடுத்து வளர்க்கச் சொல்லுகின்றார்கள். ஆனால், அந்தத் தென்னங் கன்றுகளுக்கு வண்டு அடித்தால் அதனைத் தடை செய்வதற்கான உரிய கிரிமி நாசினிகள் இங்கு இல்லை. எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உங்களின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது அபிவிருத்தி அசியல் அல்ல. அண்மையில் காணி அமைச்சர் எமது மாவட்டத்திற்கு வந்த யார் யாருக்கு காணிப் பத்திரம் கொடுத்தார் என்பதை அனைவரும் அறிவார்கள். எமது மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதேநேரம் இயற்கைப் பசளை தயாரிப்பதற்கு காணி வழங்குவதாகச் சொல்லியிருந்தார்கள். அவை அனைத்தும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

எமது மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் சவால் விட்டார் புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதியைக் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யுமாறு, ஆனால் என்னால் கொண்டுவரப்பட்ட கனேடிய முதலீட்டுத்திட்டத்தை அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற பதவியைப் பயன்படுத்தி தடை செய்ததே சிவநேசதுரை சந்திரகாந்தன் தான்.

எங்களால் கொண்டுவரப்பட்ட திட்டத்தையும் தட்டிக் கழித்து விட்டு எமது மண்ணையும் காணியையும் அபகரித்து விற்ற நீங்கள் மில்லியனர், பில்லியனர் ஆகுவதற்கு எமது மாவட்ட மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

“ஒரு நாடு ஒரு சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு ஒரு குற்றவாளியை தலைவராக்கியுள்ளார்கள் – இரா.சாணக்கியன்

“நாட்டின் சட்டத்தினை மதிக்காத ஒருவரை ஒரு நாடு ஒரு சட்டம்  என்னும் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்துள்ளார்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளிட்டுள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இன்று காலை ஜனாதிபதியினால் புதிய செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த செயலணிக்கு கலகொடே அத்தே ஞானசார தேரர் தலைமைவகிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது இந்த நாட்டில் இருக்கும் ஒரு நாடு ஒரு சட்டத்தினை அமுல்படுத்துவதற்காக அந்த செயலணி தொடர்பில் வெளியான செய்தியில் பார்க்ககூடியதாகவுள்ளது.

இந்த நாட்டில் உள்ள சட்டத்தினை அமுல்படுத்தினாலேயே போதுமானது. இருக்கின்ற சட்டத்தினை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதே இந்த நிலைப்பாடாகும். ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்கள், தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒரு சட்டமும், வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும் என்ற நிலைப்பாடில்லாமல் ஒரு சட்டத்தினை அமுல்படுத்துங்கள் என்றே நாங்கள் கூறியிருந்தோம்.

அதனைவிடுத்து புதிதாக ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயணியை உருவாக்குவதன் மூலம் இலங்கை நாட்டின் சட்டத்தினை மதிக்காத ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவந்துள்ளனர். இந்த சட்டத்திற்கு எதிரான எங்களது கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் இதன் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பாரிய விளைவுகளுக்கு முகம்கொடுக்கும் நிலையுருவாகும்.

இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடிவருகின்ற நிலைகாணப்படுகின்றது. இன்னும் இரண்டு வருடத்தில் இந்த நாட்டில் பசியினால் மக்கள் உயிரிழக்கும் நிலையேற்படும். இவ்வாறான நிலையில் இலங்கையில் மக்களை திசைதிருப்புவதற்காக போலியான விடயங்களை செய்யாமல்,நாட்டு மக்களின் நலனுக்காக செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் டுவிட்டரிலும் பதிவு செய்துள்ள சாணக்கியன் “

நாட்டில் சட்டத்தை அமுல்ப்படுத்த முடியாது என்றால் எதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும்..? குற்றவாளி ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை வகிப்பது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே இருக்கிறது என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

“கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காக கொண்டுசெயற்படுகின்றார்.” – இரா.சாணக்கியன்

“கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காக கொண்டுசெயற்படுகின்றார்.”என  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

களுவாஞ்சிகுடியில் உள்ள எனது அலுவலகத்தில் திருகோணமலையிலிருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் விசாரணைக்காக வருகைதந்திருந்தார்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மண் அகழ்வு விடயமாக கேட்கவிரும்புவதாக கேட்டிருந்தார்.அதற்கு நான் இணக்கம் தெரிவித்திருந்தேன்.சரியான விடயத்தினை செய்யப்போகின்றார்கள் என்று நம்பியிருந்தேன்.

ஆனால் 10-09-2021 சிங்கள பத்திரிகையொன்றில் கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்திருந்த செய்தியொன்று வெளிந்திருந்தது. அதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்த கருத்தினை வைத்து ஆளுனரினால் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடம் 09ம் திகதி ஒரு முறைப்பாட்டினை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரை என்ன என்பது கூட தெரியாமல் கிழக்கு மாகாண ஆளுனர் இவ்வாறாக நடந்துகொள்வது மிகவும் கவலையான விடயம். கிழக்கு மாகாண ஆளுனரை பொறுத்தவரையில் அவர் கிழக்கு மாகாணத்தில் முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்களுடைய விடயங்களை சரியான வகையில் கையாளாகதவராகவே இருந்துவருகின்றார்.

கடந்த காலத்தில் மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை காணி விடயம் தொடர்பில் அவரின் செயற்பாடுகள்,மண்மாபியாக்களை கட்டுப்படுத்திலான அணுகுமுறைகள்,மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அவர் நடந்துகொள்ளும் விதங்களை பார்க்கும்போது கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காக கொண்டுசெயற்படுகின்றார்.கிழக்கு மாகாண ஆளுனரின் செயற்பாடுகள் பொலிஸாரையும் நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாவேயுள்ளது.

நாடாளுமன்றத்தில் நான் பேசிய ஒரு விடயத்தினை இவ்வாறு விசாரணைசெய்யுமாறு கூறினால் வருங்காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சம்கொள்ளும் நிலையே ஏற்படும். கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாத அரசியலை செய்கின்றது என்று அவர் ஊடகங்களுக்கு எனது பெயரை கூறி தெரிவித்தது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் என முறையிட்டபோதிலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அண்மையில் கூட  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் கைதுசெய்யப்பட்டது அவரது சிறப்புரிமையினை மீறும் ஒரு செயல்.தியாக தீபம் திலிபன் நினைவுதினத்தினை அமைதியான முறையில் அனுஸ்டித்தபோது அவரை கழுத்தைப்பிடித்து இழுத்துச்சென்றதானது பாராளுமன்ற உறுப்பினர் என்றதுக்கே மதிப்பளிக்காத தன்மையினை அங்கு காணமுடிந்தது.கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கும் சிறப்புரிமையை மதிக்கவேண்டும்.

அதிகாரிகளின்  இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகத்தான்  நாடாளுமன்ற சிறப்புரிமையும் சவாலுக்குவந்துள்ளது.இது தொடர்பில் சபாநாயகர் தனது கவனத்தினை செலுத்தவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையினை பாதுகாக்கவேண்டியது அவரின் பொறுப்பு. கிழக்கு மீட்பு கோசத்தினை செய்துவந்தவர்கள் இன்று காணி,மண் என பல கொள்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.இவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக ஏதாவதுசெய்யவேண்டும்.

இன்று ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200பேருக்கு மட்டுமே இவர்களினால் வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்கமுடிந்தது. 2021ஆம் ஆண்டு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 33325பேருக்கு இலங்கையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.இதில் சிங்கவர்களுக்கு 31517பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களுக்கு 1060பேருக்கு வழங்கப்பட்டுள்ளது,748முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 33325பேரில் வெறும் ஆயிரம் தான் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் 25வீதத்திற்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாழும்போது இனவிகிதாசார அடிப்படையில் வழங்கியிருந்தால் கூட இதில் 8000பேருக்காவது நியமனங்கள் வழங்கியிருக்கவேண்டும்.இந்த விடயத்தினைக்கூட உங்களால் கையாளமுடியாவிட்டால் உங்களால் என்ன அபிவிருத்தியை செய்யமுடியும்.

அண்மைக்காலமாக தூக்கத்திலிருந்த சில இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கும் இங்கும் கருத்துச்சொல்வதும்,ஒருநாளும்  நாடாளுமன்றத்தில் உரையாற்றாதவர்கள் இன்று பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.சாணக்கியன் பேசுகின்றார் என்ற காரணத்தினால் உங்களது மக்களுக்கு ஏதாவது குரல்கொடுக்கவேண்டும் என்று உங்களுக்கு ஆர்வம் வந்ததை வரவேற்கின்றேன்.

20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 748 முஸ்லிம்களுக்குதான் நியமனம் வழங்கப்பட்டுள்ளது தொடர்பிலாவது சிந்திருக்கவேண்டும்.தனிப்பட்ட இலாபங்களுக்காக மாறிவிட்டு என்னை விமர்சிக்கவரவேண்டாம்.நான்  நாடாளுமன்றத்தில் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுப்பேன்.இதுவே எங்களது கட்சியின் நிலைப்பாடுமாகும்.

தேசிய இனவிகிதாசாரத்தில் நியமனங்களைக்கூட பெற்றுவழங்கமுடியாதவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதானது தங்களது தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவேயாகும். என தெரிவித்தார்.

“வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் கைவசமுள்ளன. அரசுடன் இணைந்து செயற்பட தயார்.” – இரா.சாணக்கியன்

“வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் கைவசமுள்ளன. வடக்கின் அபிவிருத்திக்காக அரசுடன் இணைந்து செயற்பட தயார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டை நடத்தி செல்ல வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். செலவு குறைவாக இருக்கவேண்டும். சாதாரணமாக கூறுவது என்றால் நாட்டில் பணம் இருக்க வேண்டும்.உலகில் ஷ்டீவ் ஜொப்ஸ். பில்கேடஸ், ஜெக் மார்க் போன்ற மில்லியனர்கள், பில்லியனர்கள் தமது திறமையால், உழைப்பால் முன்னேறி வந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், எமது நாட்டில் மில்லியனர்கள் அதிகளவில் உள்ளனர். திருட்டுகளின் ஊடாக மில்லியனரகள் ஆனவர்கள் உள்ளனர். அவர்களின் திருட்டுகளுக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் உள்ளனர்.  திறமையால் முன்னேறியவர்களும் இருக்கின்றனர். எனினும்,  அரசியல்வாதிகள் உதவியுடன் பணம் சம்பாதித்தவர்களே அதிகளவானவர்கள் உள்ளனர். அண்மைய காலங்களை எடுத்துக்கொண்டால் ஒரு வருடத்துக்குள் பில்லியன் கணக்கில் இலாபம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கு அவ்வாறு முடியும் என்றால், அரசுக்கு வருமானம் குறைவடைந்தமை குறித்து அரசாங்கம் தேடியறிய வேண்டும்.

அரசு வழங்கிய வரி சலுகைகள் காரணமாக பொதுமக்களை விட நிறுவனங்களே அதிகளவில் நன்மை பெற்றனர். இன்று சீமெந்து, பால்மா, கேஸ் உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன. சீனி மோசடி, வெள்ளைப்பூடு மோசடி என்று மோசடிகளை அடுக்கிக்கொண்டே செல்லாம். நான் விமர்சிக்கவில்லை. வரிச்சலுகை வழங்கப்படுவதால் சாதாரண மக்கள் மீதே தாக்கம் செலுத்துகின்றது.  பாரிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதில்லை. எனவேதான், பொதுமக்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்கும் வகையிலான வரிச்சலுகை முறையினரை அறிமுகப்படுத்துமாறு நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம்.

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க 2019 ஏப்ரல் பட்ஜட்டில் முன்மொழியப்பட்டது. இன்றுவரை 153 குடும்பங்களுக்கு மாத்திரம் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அந்த கொடுப்பனவும் 2019 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படவில்லை. காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனினும், அதனை செய்யும் வரை அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். அதற்காக மரண சான்றிதல் வழங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே  காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் வரை இந்த தொகை அந்த மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். வடக்கு – கிழக்கில் உள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எம்மிடம் உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு – கிழக்கில் உங்கள் அருகில் வைத்திருந்த அந்த நபர்கள் செய்த மோசடிகள், திருட்டுகள் காரணமாகவே நீங்கள் பாரிய தோல்வியை அந்தப் பகுதிகளில் சந்திக்க நேரிட்டது. இன்றும் அதுதான் நடக்க போகின்றது. நிதியமைச்சரின் கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் உள்ளது. பீ.சந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்.

அடுத்தது, சதாசிவம் மயுரன் வியாழேந்திரனின் தம்பி, அடுத்தது, சிவனேசத்துறை சந்திரகாந்தன். இந்த தகவல்களை நாடாளுமன்றில் தான் நான் பெற்றுக்கொண்டேன். நாங்கள் நிதியமைச்சருடன் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி வேலைத்திடங்களில் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். எம்மிடம் சிறந்த முன்மொழிவுகள் உள்ளன.

மாவட்ட ரீதியில் சில முன்மொழிவுகளை கூட எம்மால் வழங்க முடியாது உள்ளது. எனவே எமது திட்டங்களை முன்மொழிய எமக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள்.“ எனக்குறிப்பிட்டுள்ளார்.

“அரசு வெளிநாட்டில் ஒரு விதமாக பேசிவிட்டு உள்நாட்டில் வேறு விதமாக செயற்படுகிறது.” – இரா.சாணக்கியன்

“அரசு வெளிநாட்டில் ஒரு விதமாக பேசிவிட்டு உள்நாட்டில் வேறு விதமாக செயற்படுகிறது.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்றைய தினம் பாராளுமன்றத்தில். 13வது சட்டத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வினை பற்றி நாம் கதைத்துக் கொண்டிருக்கும் அதேவேளை அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றனர்.  அதற்கான உதாரணம் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் அதிகாரத்திற்கு உட்படாத தலையீட்டினால் பல பிரச்சனைகளை அவ் சபையானது முகம் கொடுத்து வருகின்றது மற்றும் வாழைச்சேனை உள்ளூராட்சி சபையையும் இப்படியான பிரச்சனைகள் காணப்படுகின்றன.
நாம் நீதியை மதித்து நீதிமன்றம் சென்று அதற்குரிய தீர்ப்பைப் பெற்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் அதனை பொருட்படுத்தாது தீர்ப்பையும் மதியாது செயற்படுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது எமது மக்களே.
இவ் குறைந்த பட்ச அதிகாரங்களுடனே எம்மை செயல்பட விடாமல் தடுக்கும் இவ் அரசானது எமக்கான சுயநிர்ணயத்தை எவ்வாறு பெற்றுத்தர போகின்றது. வெளிநாடுகளில் இவ் அரசானது கதைக்கும் விடயம் வேறு இங்கு நடைமுறைப்படுத்தும் விடயங்கள் வேறாக காணப்படுகின்றது. என அவர் தெரித்துள்ளார்.

“இளைஞர்களை உசுப்பேற்றி சாணக்கியன் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்” – சிவநேசதுரை சந்திரகாந்தன் சாடல் !

“வெளிநாட்டு பிரதிநிகளின் வருகையால் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.”  என நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆணைகட்டியவெளி சின்னவத்தை 02 கிலோமீட்டார் வீதி கொங்கறீற்று வீதியாகப் புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

” நானும் போராட்ட காலத்தில் இருந்து அவதானித்திருக்கின்றேன். எல்லா பத்திரிகைகளிலும் வெளிநாட்டு பிரதிநிதிகளில் வருகையை பெரிய எழுத்துகளில் தான் எழுதுவார்கள். அவ்வாறான செய்திகள் வந்து மக்களை ஈர்ப்புச் செய்திருக்கின்றதே ஒழிய நடைமுறைகளிலே எதுவும் நடைபெறவில்லை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். எமது மக்களை மெல்ல மெல்ல யதார்த்தத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

என்னுடைய அரசியல் வாழ்க்கையும் சாணக்கியனின் வயதும் ஒன்றாக இருக்கும். அவரது பாண்டித்தியம் சிறப்பானது. ஆனால், அவர் எங்களுடைய பாதையில் வந்து என்னைப் போன்று அரசாங்கத்துடன் இணைந்து மக்களுடன் சேவையாற்ற முற்பட்டு தோற்றுப்போனார். தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்தார். இன்று அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இளைஞர்களை உசுப்பேற்றுகின்றார். எவ்வாறு தேசிய உணர்வு மாறி மாறி வர முடியும்.

இவ்வாறான பேச்சுக்கள் எதையாவது பெற்றுத் தந்தால் நியாயமாக இருக்கும். ஆனாலும் எதிர்க்கட்சி அரசியலும் தேவைதான் சில நியாயமான விடயங்களும் பேசுகின்றார்கள். ஆனால் மக்களைக் குழப்புகின்ற, சிங்கள மக்களோடு குரோதமான மனநிலையை உண்டுபண்ணுகின்ற விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பிழையான விடயங்களை எதிர்த்துக் கொண்டு அரசின் பங்காளியாக எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதுதான் காலத்தின் தேவை. இது நாங்கள் கற்றிந்த பாடம். இந்த அரசியல் கற்றுத்தந்த கசப்பான உண்மையும் இதுவே.

யார்மீதும் தனிப்பட்ட விமர்சனத்தைச் செய்வதில் எவ்வித பயனும் இல்லை. இவர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி என்கின்ற விடயத்தைக் கொண்டு வந்து ஒரு அரசியல் எழுச்சியை அல்லது இளைஞர்களைத் திருப்பப் பார்த்தார்கள். ஆனால் அதில் தோற்றுவிட்டார்கள். உணர்வை வைத்து மாத்திரம் அனைத்து விடயங்களையும் நோக்காமல் எங்களுடைய எதிர்கால சந்ததியை உறுதியான தளத்தில் கொண்டு செல்வதற்காக நாங்கள் பாடுபட வேண்டும்.

கிழக்கு மாகாணம் என்பது தமிழர்களின் மாகாணமாக இருந்தாலும், நீண்ட காலப்போராட்டத்தினால் பொருளாதார உற்பத்தில் நலிவுற்று பின்தங்கி இருப்பதன் காரணமாகப் பல சவால்களை எதிர்கொண்டிருக்கின்றோம். இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு இன்னும் இன்னும் வீழ்ச்சிப் போக்கான அரசியற் தீர்மானங்களை எடுக்காமல் தந்திரோபாயமான அரசியற் சித்தாந்தத்தை நாங்கள் உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“ரிசாட், அஷாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா?” – சாணக்கியன் கேள்வி !

“நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா?”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியு்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு முக்கி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.

கடந்த காலங்களில் இவ்வாறு கோஷங்களை எழுப்பியவர்கள் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களாகவே காணப்பட்டனர். இன்று நாங்கள் பார்த்தால் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களே இவ்வாறு கோஷங்களை எழுப்புகின்றனர்.

இவ்வாறு கோஷங்களை எழுப்புவதற்கான பிரதான காரணங்களாக நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு, நாட்டில் எரிவாயு இல்லை. அதேபோன்று நாட்டில் உரம் இல்லை. சீனி கொள்வனவில் மோசடி, பி.சி.ஆர் செய்வதில் மோசடி. இவற்றிற்கு எல்லாம் ஜனாதிபதி, பிரதமர் மாத்திரம் காரணம் இல்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுமே காரணம்.

நாங்கள் இன்று வனஜீவராசிகள் அமைச்சு குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம். வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர்தான் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனால் அவர் அம்பாறையில் காடுகளை அழித்து மரமுந்திரிகை செய்கின்றார். தகுதி இல்லாதவர்களுக்கு ஆசனங்களை வழங்கி அவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்கினால் இந்த நிலைதான் ஏற்படும்.

தற்போது ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். அவரது கருத்துக்களும் அவ்வாறே உள்ளது. நாங்கள் இனவாதமாக செயற்படும் மத தலைவர்களுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். இந்த நாட்டில் 500 அடிப்படைவாத கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும், ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவருவதற்காக சுமார் 800 முறை மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாத தாக்குதல்தாரிகளுக்கு சூத்திரதாரி அல்லாஹ்தானென ஞானசார தேரர் சொல்கிறார். அவரின் கருத்தை கண்டிக்கிறேன். இந்த கருத்து தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் மௌனம் காப்பதேன்? எந்த நேரத்திலும் இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென ஞானசார தேரர் கூறுகிறார். அப்படியானால் முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்கு வருவார்கள்?

நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா? என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுகின்றார். ஆனால் நாட்டில் நடப்பதே வேறு விதமாக காணப்படுகின்றது.

ரிசாட், அஷாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது தொகுதிக்கு வந்தால், அவரை போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.