இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

“வடக்கு – கிழக்கு டயஸ்போராக்களின் ஆசைக்காக சாணக்கியன் வேலை செய்துகொண்டிருக்கிறார்.” – அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு !

வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும்.வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே ஆகும். இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து கொண்டு இருக்கின்றார் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
இன்று(11) அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது ,

சாணக்கியன் எம்.பிக்கு வரலாறு தெரியாது என தமிழ் பேசும் மக்கள் கூறியிருந்தால் அதில் உண்மை இருக்கும்.எனெனில் இன்று அவருக்கு பேச்சு திறமை இருக்கலாம் .அதற்காக எல்லாவற்றையும் பேசி தன்னை ஒரு திறமைசாலியாக காட்ட முயற்சிக்கின்றார்.ஆனால் அவருக்கு வரலாறுகள் தெரியாது.ஆனால் அவரது வரலாறு நம் எல்லோருக்கும் தெரியும்.கடந்த காலங்களில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக இருந்தவர்.வடக்கு தொடர்பாக வரலாறு இன்னும் அவருக்கு தெரியாது.

ஏனெனில் அவருக்கு வயது போதாது.தற்போது 30 வயதினை தான் தாண்டியிருப்பார் என்று நினைக்கின்றேன்.வடக்கில் மக்களுக்கு நடந்த துன்பங்கள் கிழக்கிலே மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எதுவும் அவருக்கு தெரியும் என்பதை நாம் நம்பவில்லை.அதனால் அவருக்கு அந்த அனுபவம் காணாது என்பதே எமதும் மக்களினதும் கருத்தாகும்.அவர் இப்பொழுது வெளிநாட்டு சக்திகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.இவரது செயற்பாடு ஆடு நனைகின்றது ஓநாய் அழுதது என்ற செயலில் தான் உள்ளது.இன்று முஸ்லீம் மக்களுக்கு பிரச்சினை உள்ளது என்று கூறி திரிகின்ற இந்த வார்த்தைகள் இந்த பழமொழிக்கு ஒப்பானது என்பதை மக்கள் எல்லோரும் அறிவார்கள்.

இவரது தற்போதைய தேவையானது வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே ஆகும்.இந்த வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும்.இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து கொண்டு இருக்கின்றார்.நாங்கள் அதை அனுமதிக்க முடியாது.நீங்கள் சிங்கள மக்களுடன் வாழ முடியாது என்பதனால் தான் தனிநாடு கேட்டு போராடினீர்கள்.அதுமாத்திரமன்றி வடக்கில் நிம்மதியாக முஸ்லீம் மக்களை வாழ அனுமதித்தீர்களா?அங்குள்ள அவர்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து கொடுத்துள்ளீர்களா? அம்மக்களை அங்கு இதுவரை ஒழுங்காக குடியேற்றப்படாமல் தடுத்துள்ளீர்களே இதற்கு என்ன கூறுவது என்று கேட்கின்றேன் என்றார்.

தமிழ் பேசும் மக்களை பிரிக்கும் செயற்பாட்டுக்கு துணைபோகும் பிள்ளையான் – நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டிய சாணக்கியன் !

தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும். விசேடமாக நீங்கள் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால், இதற்கு ஆதரவாக வாக்களிக்க நீங்கள் சில நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.

“நீண்டகாலமாக சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, முகநூல் பதிவுகளுக்காக சிறைகளிலுள்ளவர்களின் விடுதலை, வடக்கு – கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துங்கள்.“ என நிபந்தனைகளை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம்.

அதேபோன்று இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால், ´ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தால் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகதத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விடுதலை, கொரோனாவினால் உயிரிழப்போரின் ஜனாசாக்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதனை நிறுத்துங்கள், ஞானசார தேரர் தலைமையிலான செயலணியினை கலையுங்கள்.“ உள்ளிட்ட நிபந்தனைகளை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம்.

மேலும் அண்மையில் கிண்ணியாவில் படகுவிபத்தில் உயிரிழந்த சிறுவர்களை நினைத்துக் கொண்டு நீங்கள் அனைவரும் வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அங்கே சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் இங்கே களனிபாலம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனையும் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அத்துடன், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பிள்ளையானும் துணைபோகின்றார்.´ எனத் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தானில் எரிக்கப்பட்ட இலங்கையருக்கு அனுதாபங்கள். ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தவற்றை நாம் மறக்கவில்லை.” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ஸவையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் தோற்கடிக்க வேண்டுமென்றுதான் இந்த அமைச்சுக்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

“நாடாளுமன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு எனது கண்டனத்தை நான் இவ்வேளையில் பதிவு செய்கிறேன். எனது நண்பரான மனுஸ நாணயக்காரவுக்கு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தற்போது பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சில சிரேஸ்ட உறுப்பினர்களும் தொடர்புபட்டுள்ளார்கள்.

இதேபோன்ற சம்பவங்களுக்கு நானும் கடந்த காலங்களில் முகம் கொடுத்துள்ளேன். எனவே, இவை தொடர்பாக எதிர்க்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் நம்புகிறேன். அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமார விஜேரத்தன தொடர்பாக நாடாளுமன்றில் பின்வரிசை உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கூற்று தொடர்பாக, நான் ஒரு ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினியிடமும் ஏனைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இவ்வேளையில் மன்னிப்பைக் கேட்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி தொடர்பாக குறித்த உறுப்பினர் மிகவும் கீழ்த்தரமான கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், குறித்த உறுப்பினர் அவ்வாறான கருத்தை வெளியிடும்போது, அவரை சுற்றி அமர்ந்திருந்த உறுப்பினர்கள் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தமையானது, உறுப்பினரின் அந்தக் கருத்தைவிட கேவலமானது.

அந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினரின் தாய் மற்றும் சகோதரிகளிடமும் நாம் மன்னிப்பைக் கேட்ட வேண்டும். இவர்கள் மட்டுமன்றி, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பெண்களிடமும் நாம் மன்னிப்புக் கோர வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து குறித்த உறுப்பினரை இரண்டு வாரங்களுக்கேனும் நாடாளுமன்றிலிருந்து இடைநிறுத்தம் செய்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இதனை மேற்கொள்ளாது விட்டால் அது பிழையான உதாரணமாக மாறிவிடும் என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

வடக்கு – கிழக்கில் உள்ள தொழிற்சாலைகளை அரசாங்கம் புதுபிக்க வேண்டும் என்பதோடு, அங்கு புதிய தொழிற்சாலைகளையும் ஸ்தாபிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்கனவே, தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் வரையிலான கப்பற்சேவையை மீள ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

அத்தோடு, மட்டக்களப்பு விமாநிலையம், பலாலி விமான நிலையங்களை மீள செயற்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன். குறைந்தது பொலன்னறுவையிலிருந்து வரும் புகையிரதத்தையேனும் மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு கேட்டிருந்தேன். ஆனால், இவையெதுவும் இன்றுவரை நடக்கவில்லை.

பிரதேசங்களுக்கிடையில் ஒரு தொடர்பு இல்லாவிட்டால் எம்மால் பொருளாதார ரீதியாக எதனையும் செய்ய முடியாது. வடக்கு – கிழக்கில் உள்ள தொழிற்சாலையொன்றில் உருவாக்கப்படும் ஒரு தயாரிப்பை, இங்குள்ள துறைமுகத்திற்கு கொண்டுவரும்போது, அந்த தயாரிப்பில் உள்ள பெறுமதியே இல்லாது போய்விடும்.

வடக்கு – கிழக்கில் தொழிற்சாலைகளை உருவாக்குதாயின், ஒரு இணைப்பு இன்றி அவற்றை மேற்கொள்ள முடியாது. கிழக்கில் சில ஆடைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. எனினும், இந்தத் தொழிற்சாலைகளின் கிளைகள் இலங்கையின் ஏனைய இடங்களிலும் இருப்பதால்தான் அவை லாபகரமானதாக இயங்குகின்றன.

எனினும், புதிதாக ஒரு தொழிற்சாலையை இந்தப் பிரதேசங்களில் ஆரம்பிக்க வேண்டுமெனில், நிச்சயமாக போக்குவரத்து உள்ளிட்ட இணைப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்தியே ஆகவேண்டும். புன்னக்குடா எனும் பகுதியில் 260 ஏக்கரில், ஆடைத்தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்து.

புன்னக்குடா என்பது கிழக்கில் உள்ள மிகவும் அழகான கடல் பிரதேசமாகும். ஆனால், இங்கு இவ்வாறானதொரு தொழிற்சாலையை ஸ்தாபிப்பது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியம் என்பது விளங்கவில்லை. மாறாக, இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் கொண்டுவந்தால் வரவேற்கத் தக்கதாக இருக்கும்.

அத்தோடு, வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ஸவையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் தோற்கடிக்க வேண்டுமென்றுதான் இந்த அமைச்சுக்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா எனும் சந்தேகமும் எமக்கு எழுகிறது. ஏனெனில், நாட்டில் தற்போதைய நிலைமையில் இந்த இரண்டு துறைகளும் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளன.

இவ்வாறான நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹாவில் அதிகூடிய விருப்பு வாக்கு பெறும் இவர்கள் இருவரின் செல்வாக்கையும் வீழ்த்த திட்டமிட்டுத்தான் இந்த அமைச்சுக்கள் வழங்கப்பட்டதோ என்றும் எமக்கு தோன்றுகிறது. மேலும், நாட்டில் இன்று டொலர் வருகை இல்லாது போயுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், ஒரு நாடு – ஒரு சட்டம் எனும் செயலணியின் தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரர், நாட்டில் எவ்வேளையிலும் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என்று அரச ஊடகங்கள் முன்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். இங்குள்ள முதலீட்டாளர்கள், நாட்டுக்குள் வர அச்சப்படுகிறார்கள். நாட்டில் எவ்வேளையிலும் குண்டுத்தாக்குதல் இடம்பெறலாம் என்றால், எப்படி வந்து முதலீடு செய்வது என எம்மிடம் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ஒரு நாடு – ஒரு சட்டம் எனும் செயணி ஊடாக, இலங்கைக்கு வரவுள்ள டொலர்கள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்காலத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படியே சென்றால், இலங்கையில் எந்தவொரு வியாபாரமும் செய்ய முடியாத நிலைமை ஏற்படலாம்.

பாகிஸ்தானின் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரியந்த குமாரவுக்கு நிகழ்ந்த துன்பியல் சம்பவம் தொடர்பாக எனது கவலையை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபகங்களையும் கூறிக்கொள்கிறேன். இந்தச்சம்பவம் தொடர்பாக எமது இளைஞர்கள் இன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்ச்சியாக அனுதாபங்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், அதேபோன்ற சம்பவங்கள் எமது நாட்டிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளமையை நான் நியாபகப்படுத்த விரும்புகிறேன். 1956- 57 களில் நடைபெற்ற கிளர்ச்சியின்போதும், இதற்கு சமமான சம்பவங்கள் இங்கும் நிகழ்ந்துள்ளன. அதுவும் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் தான் இவை நிகழ்த்தப்பட்டன.

குறிப்பாக தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 1983 கலவரத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் நடு வீதிகளில்வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவை தொடர்பான புகைப்படங்கள் இன்றும் காணப்படுகின்றன. அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு யார் காரணம் என இங்குள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட தெரிந்திருக்கலாம்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கத்தை கொலை செய்தார் எனும் குற்றஞ்சாட்டுள்ள ஒருவர் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பாகிஸ்தானில் இடம்பெற்றதைப் போன்று இலங்கையில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பே இருக்கவில்லை.

1948 முதல் 1978 வரையான காலப்பகுதியில் அரசியல் உரிமைக்காக தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளையே மேற்கொண்டார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்த காரணத்தினால்தான் தமிழ் இளைஞர்கள் அன்று ஆயுதம் ஏந்தினார்கள். பாகிஸ்தானில் மத அடிப்படைவாதத்தினால் தான் இந்த சம்பவம் இடம்பெற்றது.

ஆனால், ஒருநாடு – ஒரு சட்டம் என்பதன் ஊடாக இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் தலைத்தூக்கியுள்ளது என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கிழக்கு மக்கள் அனைவரும் இந்த செயலணிக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள். ஒரு நாடு – ஒரு சட்டம் என்பதை வைத்து நாட்டை ஒருபோதும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாம் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்றோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றோ ஒருபோதும் நினைக்கவில்லை. மாறாக பொருளாதாரத்தை வளர்க்கவம் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இணைந்து செயற்படத் தயார் என்பதையே கூற விரும்புகிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ மயமாக்கலை நோக்கி நகரும் இலங்கை – சாணக்கியன் கண்டனம் !

நாடு இராணுவமயமாக்கலை நோக்கி நகர்கிறதா..? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கண்டன  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது கடந்த 27ஆம் திகதி இராணுவத்தினர் மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முள்ளியவாய்க்கால் கிழக்கில் வசித்து வரும் குறித்த ஊடகவியலாளர் கடந்த 27ஆம் திகதி செய்தி சேகரிப்பிற்காக முல்லைத்தீவு சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர் பலகையினை ஒளிப்படம் எடுத்த நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் ஊடகவியலாளரை கேள்வி கேட்டு அடையாளப்படுத்த சொல்லி கோரிய போது குறித்த ஊடகவியலாளர் அடையாள அட்டையினை எடுத்து காட்ட முற்பட்ட வேளையில் படையினர் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய படையினர் இராணுவ சீருடையிலும் கடமை அல்லாத நேரத்தில் இராணுவம் அணியும்,  அரை காச்சட்டையுடனும் ரி சேட்டுடனும் நின்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இராணுவம் தாக்குதலுக்காக பயன்படுத்திய பச்சை பனை மட்டை ஒன்றில் முள்ளு கம்பிகள் சுற்றப்பட்ட ஆயுதம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இராணுவத்தினர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதுடன், பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது வெறும் கண்துடைப்பு கைதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்களை பார்கின்ற போது, எம்முள் அச்ச உணர்வு ஒன்று தோன்றுவதுடன், நாடு இராணுவ மயமாக்கலினை நோக்கி நகர்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

இதனை கூட்டமைப்பு என்ற வகையில் பலமுறை உரக்கச்சொல்லியிருக்கின்றோம். இதுகுறித்து இராணுவத் தளபதி மற்றும் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் மௌனம் காக்கின்றமை வருத்தமளிக்கின்றது. குறித்த இருவரும் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

தற்போதைய அரசாங்கத்தின் கடந்த ஆட்சிக்காலத்தின் போதும் மிக மோசமான ஊடக அடக்குமுறைகள், ஊடகவியலாளர்களைக கடத்திப் படுகொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்தநிலையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படமாட்டார்கள் என கூறி தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

எனினும் தற்போதைய அரசாங்கத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. குறிப்பாக பிழைகளை சுட்டிக்காட்டுகின்ற ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எமது மக்களுக்கும் சுதந்திரமில்லை ஊடகவியலாளர்களுக்கும் சுதந்திரம் இல்லை. சுதந்திர ஊடக முடக்கமானது ஒரு நாட்டின் முடக்கத்துக்கு ஒப்பானது. அரச சார்பான தமிழ் அரசியல்வாதிகள் இவ் அரசின் இவ்வாறான செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதும் பக்கச் சார்பாக செயல்படுவதும் அவர்களுக்கு சார்பான செயற்பாடுகளை சரி எனவும் நிறுவிக்கொண்டுள்ளார்கள்.

இந்த அரசின் காலத்திலேயே எம் மக்கள் பல இன்னல்களை அதிகளவாக அனுபவித்தனர் அனுபவித்துக்கொண்டும் வருகின்றனர்.“ எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் என்னை புலி என்றும் கனடாவில் புலி இல்லை என்றும் ஏசுகிறார்கள்.” – கனடாவில் இரா.சாணக்கியன் !

இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னை பார்க்கின்றேன்.

சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது. இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை கதைக்கின்றார். எங்களுக்காக பேசுகின்றார் என. எனினும் நான் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுகின்றேன்.

அதிலே இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது எங்களை பாராட்டுவதனை விடவும், இஸ்லாமியர்களுடைய பாராட்டுக்கள் அதிகமாக வருகின்றது. எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று. அது உண்மைதான். என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் பேரினவாதிகளின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரா.சாணக்கியனை மொஹமட் சாணக்கியன் என குறிப்பிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் – சிறீதரன் வழங்கிய பதில் என்ன..?

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை கீழ்த்தரமான அரசியல்வாதியென திட்டித்தீர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், எந்தத் தகுதியும் திலீபனுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று  கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை “மொஹமட் சாணக்கியன்“ என தனது உரையில் கூறியிருந்தார்.

எனினும் இதன்போது சாணக்கியன் சபையில்லை என்பதால் உடனடியாக ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி திலீபனின் சர்ச்சைக்குரிய கூற்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் , இராசமாணிக்கம் இராஜபுத்திர சாணக்கியன் என்கிற பெயரை மாற்றி மொஹமட் சாணக்கியன் திலீபன் தனது உரையில் கூறுகிறார். இதுவொரு கீழ்த்தரமான செயலாகும். அதனால், இதனை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை தவறாக கூறுவது பாராளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு முரணானது என்றார். இந்த (திலீபன்) படிக்காத பாராளுமன்ற உறுப்பினரை திருத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொதுமக்களை அச்சுறுத்தி மட்டக்களப்பின் அமைதியை சீர்குழைக்கும் சுமனரத்ன தேரர் – பொலிஸார் வேடிக்கை பார்ப்பது ஏன்..?

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதன்காரணமாக நேற்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியிருந்தது. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தினை குறித்த மத குரு முன்னெடுத்திருந்தார்.

இந்தநிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த மத குரு போராடிவருவதாகவம் பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கோரியுள்ளார்.

அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இவர் அவரின் அறையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியிருந்தார்.
இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக நேற்றைய தினம் முடங்கியிருந்தது. பிரதேச செயலாளரையும், அரசாங்க ஊழியர்களின் நடவடிக்கைக்கு அச்சுறுத்தும் வகையில் குறித்த பிக்குவின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

அங்குள்ள ஊழியர்கள் வீதியில் இறங்கி குறித்த பிக்குவை கைது செய்யக்கோரி போராட்டம் நடாத்திய போதும் மக்களையும் ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டிய பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். பெண் ஒருவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இவர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏனோ. எமது மக்களுக்கு இவ் நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை வாழும் உரிமையும் இல்லை.

இவரின் இவ்வாறான செயல்பாடுகள் ஆனது எமது மாவட்டத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. நாடாளுமன்றத்தில் கூட இவரின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்திருந்தேன். இவரினால் எமது மக்களும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். தற்போது ஒரு நாடு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுவது இதுதானா என்ற கேள்விக்குறி எழுகின்றது.

இவ்வாறான செயல்பாடுகளுக்கு மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் அரச தரப்பு அரசியல்வாதிகளை நம்பி இருந்து எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை. எமது மக்களே மென்மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். எமது மக்களுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“பணத்தை எப்படி செலவழிக்கலாம் என்பதற்காக ஒரு வரவு செலவுத்திட்டம்.” – இரா.சாணக்கியன்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனை தெரிவித்தார்.

​​வெளிநாட்டு முதலீடுகள் மூலமே வருவாயை ஈட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும் நிலையில் 2022 வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வெட் மற்றும் வரிவிதிப்பு முறை மாற்றப்பட்டாலும், தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அது போதுமானதாக இருக்காது என இரா.சாணக்கியன் கூறினார்.

கடனை அடைப்பதற்கும் கையிருப்பில் டொலர்களை வைத்திருப்பதற்குமான எந்தவித திட்டங்களும் இந்த வரவுசெலவு திட்டத்தில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்..” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளதால்  வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேணும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10) உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்.இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருந்தாலும், அதற்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமைக்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள அமைச்சர் உள்ள நாட்டில், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர். எனவே அவர்களுக்கு விரைவாக இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக தபால் மூலமாகவேணும் அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை அரசாங்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தும் என நம்புகின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார்.” – இரா.சாணக்கியன்

“ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்குத் தெரியும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஒரே நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என நாம் கேட்கின்றோம். எம்மைப் புறக்கணித்தால் நாம் வேறு எங்கு செல்வது? எனவே ஜனாதிபதியிடம் நாம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன செய்வார் என்பது எமக்கும் தெரியும். ஜனநாயகத்தை பாதுகாக்க மாட்டார் என்பதும், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்குத் தெரியும்.

நாட்டில் இன்று ஒருபுறம் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தமது விவசாயத்தை ஏதேனும் ஒரு விதத்தில் முன்னெடுக்க முடியும். ஆனால் மக்களுக்கே பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது.

அடுத்த ஆண்டுக்குள் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நட்டஈடு கொடுத்துவிட்டு மக்களுக்கு ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு எவ்வாறு தீர்வு கொடுப்பது?

மக்களுக்கு ஒரு வேளை உணவு கிடைக்காவிட்டால் ஏற்படும் நிலை என்ன என்பது சகலருக்கும் தெரியும். அடுத்த ஒரு வாரத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். இதனை எவரும் மறுக்க முடியாது. இந்த நெருக்கடியில் கறுப்பு சந்தையின் தேவை அதிகரிக்கும். மக்களும் கறுப்புச் சந்தையை நாடும் நிலைமை ஏற்படும்” என்றார்.