இம்ரான் மஹ்ரூப்

இம்ரான் மஹ்ரூப்

ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறு பேறு இடைநிறுத்தம் – இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என்கிறார் இம்ரான் மகரூப் !

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறு பேறு இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.,

பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே இந்த மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது

காதுகளை மூடி பரீட்சை எழுதியமை பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல என குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர்

 

இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவு படுத்திய பின்னரும் பெறுபேறு இடைநிறுத்த பட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும் ஸாஹிரா கல்லூரியின் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களின் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவென்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பரீட்சை மண்டபத்தில் தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளரின் மனநிலையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது எனவும்

 

ஒரேமொழியை பேசும் நாம் இப்படி பிள்ளைகளின் உரிமைகளில் கைவைப்பது ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற் றோரினதும் இன்றைய சோகமான மனநிலையை சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இதன் போது சுட்டுக் காட்டினார்.

 

இது குறித்து இன்று பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் தாம் பேச்சுவார்த்தை செய்ததாகவும் இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை எனவும் கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் மற்றொரு வடிவம் இது எனவும் இதன்போது தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள் – இம்ரான் மஹ்ரூப்

கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுவரும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. செயலாளர் பதவிக்கு இதுவரை ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

கிழக்கு மாகாணத்தில் செயலாளர் பதவிக்கு இதுவரை எந்த முஸ்லிம் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. கடந்த வருடம் ஜூன் மாத்தில் இதுதொடர்பாக வெளிக்கொண்டுவரப்பட்டபோதும் அந்த நடவடிக்கை இன்னும் செயற்படுத்தப்படாமல் இருக்கிறது. கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்த 5 அமைச்சுக்களில் 2 தமிழ் செயலாளர்களும் 2 முஸ்லிம் செயலாளர்களும் ஒரு சிங்கள செயலாளரும் பணியாற்றி வந்தார்கள். இன சமநிலையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை இடம்பெற்று வந்தது.

 

ஆனால் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு அமைச்சிலும் முஸ்லிம் செயலாளர் ஒருவரேனும் இல்லாமை கவலைக்குரிய விடயமாகும். முதலமைச்சரின் அமைச்சு, சுகாதார அமைச்சு வீதி அபிவிருத்தி அமைச்சுகளுக்கு தமிழ் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று கல்வி அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியவற்றுக்கு சிங்கள செயலாளர்கள் மியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது இந்த மாகாணத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் கொச்சைப்படுத்துகின்ற செயலாகவே காண்கிறேன்.

 

எனினும் இந்த விடயத்தை அரசியல் தலைமைத்துவங்கள் கண்டுகொள்ளாத காரணத்தினால் கிழக்கு மாகாணத்திலே அண்மைக்காலமாக அரங்கேற்றப்படுகின்ற முஸ்லிம் விரோத போக்காகவே இதனை நாங்கள் காண்கிறோம். இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அதிகாரிகள் பணிபுரிய முடியாத நிலையே எதிர்காலத்தில் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

 

எனவே ரணில் ராஜபக்ஷ் ஆட்சியிலும் முஸ்லிம் விராேத போக்கு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதனால் இது தொடர்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் விழித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேசுகின்றவர்கள் என தெரிவிக்கக்கூடியவர்கள் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் , இது தொடர்பாக முஸ்லிம் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இஸ்லாம் பாடநூல்கள் சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் உரிமை ஞானசார தேரருக்கு உண்டா? – இம்ரான் மஹ்ரூப் கேள்வி !

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறப்படுவதன் நோக்கம் என்ன..?  என்பதை நீதி அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் தலைமையிலான ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமைய இஸ்லாம் பாட நூல்கள் மீளப் பெறப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்ததது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் நியமிக்கப்படும் துறைசார்ந்த வாண்மை மிகுந்தோரினால் தான் பாடநூல்கள் எழுதப்படுகின்றன. இஸ்லாம் பாடநூல்களும் அவ்வாறு தான் எழுதப்படுகின்றன. இவ்வாறு எழுதி வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்கள் சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் உரிமை ஞானசார தேரருக்கு உண்டா? என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.

இந்த விடயத்தில் அரசில் முக்கிய பங்கு வகிக்கும் அமைச்சர் அலிசப்ரி கவனம் செலுத்த வேண்டும். இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் தேசிய காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன? இந்த மௌனம் இவர்களது சம்மதத்தோடு தான் இந்த நாடகம் அரங்கேற்றப்படுகின்றதா என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இது குறித்து இவர்களும் தெளிவுபடுத்த வேண்டும். அற்ப சுய இலாபத்துக்காக சமுக உரிமைகளை தாரைவார்க்க வேண்டாமென நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த அரசிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக கூறும் இவர்கள் பெற்றுக் கொடுக்கும் நன்மை இதுதானா என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.

முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதாவுல்லா, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் கூட இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது முஸ்லிம் மக்களது உரிமை சார்ந்த பிரச்சினை இல்லை என இக்கட்சிகள் கருதுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது. மீளப்பெறப்படும் இஸ்லாம் பாடநூல்களில் என்ன மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதையாவது இவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எந்த மார்க்கத்தினதும் விடயங்களில் தீர்மானம் எடுக்கும் உரிமையை அந்தந்த மார்க்க அறிஞர்கள் தான் செய்ய வேண்டும்.

மார்க்கத்தோடு தொடர்பில்லாத வேறு யாரும் செய்ய முடியாது. இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா படகு விபத்து – நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை !

அரசாங்கம் குறிஞ்சாக்கேணி பாதை சேவையைச் செய்ய நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தமையே அனர்த்தத்துக்குக் காரணம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா படகு விபத்து குறித்து மேலும் பேசிய அவர்,

குறிஞ்சாக்கேணி பாலம் பொதுமக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு சுமார் 9 மாதங்களாகின்றன. எனினும், இந்த மக்களுக்கான மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை அரசு இதுவரை செய்யவில்லை. மக்கள் படும் கஷ்டங்களைப் போக்க பிரதேச சபை, நகர சபை தவிசாளர்கள் துணை செய்தார்கள். இது தவறென்றால் இரண்டு தவிசாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.

குறிஞ்சாக்கேணிப் பாலம் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தனர். மக்கள் எதிர்நோக்கும் இந்தக் கஷ்டங்களைப் போக்க கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் முதலாவது பாதைச் சேவைக்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்தார்.

நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான மாணவர்களும் இதனூடாகப் பயணஞ் செய்வதால் இன்னொரு பாதைச் சேவை அவசியப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நகரசபைத் தவிசாளரின் அனுமதியுடன் மற்றுமொரு பாதைச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை என்பதைப் பகிரங்கமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனினும் பிரதேச சபைத் தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஆரம்பித்த பாதை சேவை குறித்து இங்கு மறைக்கப்படுவதை அல்லது பேசாமல் விடப்படுவதை அனுமதிக்க முடியாது.

விசாரணை நியாயமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு வீதியோ அல்லது பாலமோ புனரமைக்கப்படுமாயின் அதற்கான மாற்று வீதியை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுக்கிறார்கள்.” – இம்ரான் மஹ்ரூப்

“அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுத்தே அந்த அதிருப்தியை மறைக்கிறார்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்றைய தினம்(18.04.2021) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிங்கள அமைப்புக்கள் எதனையும் தடைசெய்யாது முஸ்லிம் அமைப்புக்களை மாத்திரம் தடை செய்துள்ளனர். ரமழான் மாதத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சால் முஸ்லிம்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாயலில் நூறு பேருக்கு மேல் ஒன்றுகூட முடியாது. நோன்பு கஞ்சி பகிரமுடியாது என அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கடை வீதிகளிலும் பொது இடங்களிலும் ஆயிரக்கணக்கில் சமூக இடைவெளி இன்றி ஒன்று கூடியதை நாம் கண்டோம். மதுபான சாலைகளில் பெரிய கூட்டமே கூடி இருந்தது. ஆகவே புத்தாண்டில் தடைகளை விதிக்காத அரசு ஏன் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தடைகளை விதிக்க வேண்டும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தான் கொரோனா தொற்றுவது போன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் என்றே நாம் கேட்கின்றோம். இதற்கு பின்னாலும் பெரிய இனவாத நிகழ்ச்சிநிரல் உள்ளது.

இந்த காலத்தில் இடம்பெறும் முஸ்லிம்களின் வியாபாரத்தை முடக்குவதே இந்த அரசின் நோக்கம். மே மாதத்தில் கொரோனாவின் மற்றொரு அலை உருவாக்கலாம் என இராணுவ தளபதி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

ஆகவே மே மாதத்தில் இடம்பெறும் பெருநாள் வியாபாரத்தை முடக்க அரசு திடடமிட்டுள்ளதா என்ற சந்தேகம் இதனால் இப்போது எழுகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையால் முஸ்லிம் வியாபாரிகள் பலரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கவே அரசு திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு துறைகளிலும் முஸ்லிம்களை பழிவாங்கவே இந்த அரசு முயற்சிக்கிறது. ஆனால் காபட் வீதி மற்றும் பாலங்களில் இருந்து வரும் கொமிஸ்களுக்காக சிலர் பசில் வந்தால் சரியாகும் நாமல் வந்தால் சரியாகும் என ஊருக்குள் கூறி திரிவது வேடிக்கையானது எனவும் தெரிவித்துள்ளார்.

“கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன” – இம்ரான் மஹ்ரூப்

“கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன” என திருகோணமலை மாவட்ட பாராளுமன்றளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இந்த நினைவு தூபி அழிக்கப்பட்டமை தொடர்பாக அவர் இன்று (09.01.2021) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பலியான சகோதர சிவில் தமிழ் உறவுகளை நினைவூட்டும் ஆத்மார்த்த மனிதாபிமான சின்னம். அது பயங்கரவாதம் சார்ந்த அல்லது படையினரை சாடுகின்ற குறியீடு அல்ல. தென் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் கூட கடந்த கால அரச எதிர்ப்பு கிளர்ச்சிகளில் பலியானவர்களுக்கான நினைவுத்தூபிகள் உள்ளன.

ஆகவே யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது. இத்தகைய அரசின் இனவாதம் சார் செயற்பாடுகள் ஒருபோதும் நாட்டில் அமைதியை, அபிவிருத்தியை ஏற்படுத்த வழிசமைக்க மாட்டாது. கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற இனவாதம் சார் அரச செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அரசின் பொறுப்பற்ற, இனங்களுக்கிடையே பிரிவினையை வளர்க்கும் செயற்பாடுகளை ஒரு பொறுப்புள்ள அரசியல் பிரதிநிதி என்றவகையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.