“நோபல் பரிசுக்காக நாட்டை துண்டாடாது நாட்டில் சமாதானம், அமைதியை உருவாக்கிக்கொள்ள பயங்கரவாதத்தைத் தோற்கடித்தவர் மஹிந்த ராஜபக்ச.”என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஊடகங்களிடம் இன்று (02.04.2021) கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜெனிவாத் தீர்மானம் இலங்கைக்கு ஒருபோதும் ஆரோக்கியமான ஒன்றல்ல. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் எமது நாட்டின் இராணுவத்தைத் தண்டிக்கவும், நாட்டைத் துண்டாடவும் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும்.
அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மாத்திரம் அனுமதி பெற்று இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மாறாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து அனுமதி பெறவும் இல்லை. அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ளவும் இல்லை.
அதேபோல் ஜெனிவாவில் இந்தக் காட்டிக்கொடுப்பைச் செய்த காரணத்தால்தான், எமது இராணுவத்தில் பலர் கைதாகினர். புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தப்பட்டது. எம்மால் 30/1 தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதனை நிறைவேற்ற நாம் ஆட்சிக்கு வரவில்லை.
எமது அரசு எவருக்கும் அடிபணியாது. எமது நாட்டின் இறையாண்மை மற்றும் எமது இராணுவத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொள்கையில் நாம் பயணிக்கின்றோம். மேற்கத்தேய நாடுகள் கூறுவதற்கு அமைய சமாதான பாதையில் சென்று நாட்டை துண்டாடி கையில் கொடுத்தால் மஹிந்த ராஜபக்சவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கும்.
நோபல் பரிசைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டைத் துண்டாடுவதை விடுத்து நாட்டில் சமாதானம், அமைதியை உருவாக்கிக்கொள்ள பயங்கரவாதத்தைத் தோற்கடித்த காரணத்தால்தான் இன்றும் சர்வதேசம் எம்மைத் துரத்திக்கொண்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள், இராணுவக் குற்றம் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்வதேச நாடுகள் எம்மைத் துரத்திக்கொண்டு இருந்தாலும், எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை முன்னெடுத்தாலும் அவர்களின் பொறியில் நாம் சிக்கிக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்.