அமைச்சர் ஜீவன் தொண்டமான்

அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் – மலையக மே தின கூட்டத்தில் ஜீவன் !

எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நில உரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்குமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

 

கொட்டகலை பொது மைதானத்தில் இன்று புதன்கிழமை (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

 

ஆறுமுகன் தொண்டமான் மறைந்த பின்னர் எம்மால் மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.

 

கொரோனா,பொருளாதார நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள நேரிட்டது. இ.தொ.க முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்கள். 4 வருடத்தின் பின்னர் பாரிய மேதின கூட்டமொன்றை நடத்துகின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தோம்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 4 வருடங்களாக பல்வேறு அவமானங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறோம்.

 

எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நில உரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் என்றார்.

 

கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் இணைந்து கொண்டதுடன், மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் மே தினக் கூட்டமும் பேரணியும் நடைபெற்றதுடன் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணப்படுகிறது.

மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு மலையக மக்களினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன்,தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல்,பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தலைவி அனுஷியா சிவராஜா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறிமா  –  சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் மீண்டும் இலங்கை திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் !

சிறிமா  –  சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன்,  சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை சரி செய்வதற்கு தமக்குள்ள பொறுப்பை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள அமைச்சர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,

“இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக பலவந்தமாக நாடு  கடத்தப்பட்டனர். இவ்வாறு சென்றவர்களில் ஒரு தரப்புக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது. இதனால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. கடும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது மக்களுக்கு இலங்கையில் குடியுரிமையை பெற்றுக்கொடுத்தோம்.

இந்த வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். எமது மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கான நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர்ச்சஸ் காணி உரிமையும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவை போதுமானவை அல்ல.  பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ள மக்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று தவறு சீர்செய்யப்பட வேண்டும். அதற்காக தமக்குள்ள பொறுப்புகளை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இது விடயம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இணைந்து பணியாற்ற நான் தயாராகவே இருக்கின்றேன்.” என்றார்.

“வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச்  செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்.” – சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் !

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச்  செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமெனவும், இதற்காக விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன் ஓர் அங்கமாகவே  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான தொழில் மதிப்பு  அங்கீகாரம் இன்னும் முறையாக கிடைக்கப்பெறாத வகையில், அதனை எவ்வாறு தொழில்சார் நடவடிக்கையாக மாற்றுவது  என்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இலங்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் மலையக மக்களும் பெரும்பாலும் இடம்பெறுகின்றனர் எனவும் வீட்டு பணிப்பெண்ணாகச்  செல்லும் அவர்கள் பல்வேறு  சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.” – பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்

“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.” என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் கூறினார்.

அட்டனில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தற்போது உரிமைசார் விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள தனி வீடுகள், லயன் வீடுகள் என தோட்டப்பகுதிகளில் முகவரி இல்லாத அனைவருக்கும் முகவரி வழங்கப்படும். இதற்கான திட்டம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போது இலக்கம் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது, அப்பணி நிறைவுபெற்ற பின்னர் அனைத்து தரவுகளும் தோட்ட நிர்வாகம், கிராம அதிகாரி, அஞ்சல் மா அதிபர் ஆகிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும்.

கேகாலை மாவட்டத்தில் தற்போது பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டு திட்ட பணிகளும் இடம்பெறும். 10 பேர்ச்சஸ் காணி ஒதுக்கீட்டுக்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. மலையக மக்களுக்காக இந்திய அரசால் அண்மையில் ஒதுக்கப்பட்ட விசேட நிதி கல்வி, சுகாதாரத்துறைகளுக்காக பயன்படுத்தப்படும்.” – என்றார்.

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரைவில் கலந்துரையாடல் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குழாமினர் இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியிருந்தனர்.

இதன்போது விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்போது இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும்.

அதன்பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்படும்.

அதேபோல் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலையை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் வலுசக்தி திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.

குறிப்பாக மலையக சமூகம் 200 வருடங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது இந்தியப் பயணத்தின்போது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் விசேடமாக நாட்டினது பொருளாதார நெருக்கடி மற்றும் மலையக மக்களது வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

அதனடிப்படையில் கிட்டத்தட்ட மூவாயிரம் மில்லியன் ரூபாவினை மலையகத்தினது வீட்டுத்திட்டம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஒதுக்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

விசேடமாக மலையகத்தின் கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்காக இந்த நிதி பயன்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.