அனுர குமார திசாநாயக்க

அனுர குமார திசாநாயக்க

கனேடிய உயர்ஸ்தானிகருடன் அனுர குமார திசாநாயக்க சந்திப்பு!

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் இடம்பெற்றது.

 

இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.

 

இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இதன்போது இடம்பெற்றது.

 

அத்தோடு, தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

 

கனடாவில் வசிக்கின்ற இலங்கையரை சந்திப்பதற்கான அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயத்துக்கு உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்தார்.

 

 

இலங்கைக்கான கியூபத் தூதுவர் – அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே சந்திப்பு !

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இலங்கைக்கான கியூபத் தூதுவர் Andrés Marcelo Garrido வுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் இடம்பெற்றது.

 

இச்சந்திப்பில் கியூபத் தூதுவர் அலுவலகத்தின் பிரதான செயலாளர் Mrs. Maribel Duarte Gonzalez வும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவும் கலந்துகொண்டனர்.

 

இதன்போது நீண்டகாலமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இருந்த அரசியல் தொடர்புகள் பற்றியும் நிகழ்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் விலாவரியாக கலந்துரையாடப்பட்டது.

 

நீண்ட காலத்துக்கு முன்பாக கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை பற்றியும் இன்றளவில் கியூபாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நேரடி தொடர்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், பிரச்சினைக்குரிய பகுதிகள் பற்றியும் கியூபத் தூதுவர் அநுர குமார திசாநாயக்கவிடம் தெளிவுபடுத்தினார்.

அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த 6 நாடுகளின் தூதுவர்கள் !

6 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

 

இச் சந்திப்பு இன்று புதன்கிழமை (06) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

பாலஸ்தீனத்தின் தூதுவர் Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி Dewi Gustina Tobing, ஆகியோரும் இந்திதோனேசிய தூதரகத்தின் பிரதம கொன்சல் Heru Prayitno, மலேசிய உயர்ஸ்தானிகர் Badli Hisham Bin Adam மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் திருமதி Fathimath Ghina ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் இராஜதந்திரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.

தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்கிறார் அனுரகுமார திஸ்ஸநாயக்க !

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

 

இந்த நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் அவர் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் வேளை வவுனியாவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதுடன் அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்வுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள அவர், இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பதோடு பொதுமக்கள் சந்திப்பில் பங்கேற்று, தொடர்ந்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக, இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு தற்போது ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

முன்னதாக, கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் – ஜே.வி.பி

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமது கட்சியில், நாடாளுமன்றத்தில் வேட்பாளர்களாக களமிறங்க பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய மக்கள் சக்திக்கு அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், மேடைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரையில் கட்சியை குறைகூறி விமர்சனம் செய்வதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது…? – டக்ளஸ் தரப்பு கேள்வி !

இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய ஜேவிபியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்றையதினம் (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பிரதேசம் தொடர்பில் ஜே.வி.பி. எவ்வாறான கருத்தை கொண்டுள்ளது என பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப்பட்டபோதும் அவர்களிடமிருந்து தமிழர் தாயக பிரதேசம் தொடர்பாக எவ்விதமான தெளிவூட்டல்களும் வெளியிடப்படவில்லை.

இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு ஜே.வி.பி.யே முக்கிய காரணமாக செயற்பட்டது.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம் என்ற கருத்து நிலவும் சூழலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜேவிபி எழுச்சி பெற்று வருவதாக ஊடகமொன்றிற்கு கூறியுள்ளார்.

ஆனால் தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை சரத்பொன்சேகா கூட தெரிவிக்க முயலவில்லை.

ஆகவே வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜே.வி.பியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் பிரதான கட்சியாக எழுச்சியடையவுள்ள ஜே.வி.பி – எதிரிக்கட்சி எம்.பி எஸ்.எம். மரிக்கார் !

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக மாற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவின் இந்திய பயணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினரின் இந்திய பயணம் வரவேற்கத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தை தொடர்ந்து, இலங்கைக்கான முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சிறந்த அறிவை அனுரகுமார பெற்றிருப்பார் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக மாற தேசிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாகும் பட்சத்தில் இலங்கையின் அரசாங்கமாக ஐக்கிய மக்கள் சக்தி திகழும் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளை அந்த கட்சியின் உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பியினருக்கு ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் அழைப்பு விடுக்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன

ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியுடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெல்லவாய பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. முறையான மறுசீரமைப்புக்களுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளோம் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாற்றியமைத்தால் அல்லது இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்பதை அரசியல் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை தவறான வழிநடத்தும் வகையில் போலி அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதை அரசியல்வாதிகள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் வாக்குறுதிகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் அரசியல் வாக்குறுதிகளை அனைவரும் தவிர்த்துக் கொள்வது அத்தியாவசியமானது. இந்தியா, சீனா உள்ளிட்ட முன்னிலை நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜப்பான், தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியினரை இந்தியா அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தததது பாரிய பேசுபொருளானது. இலஙட்கை அரசியலில் சீனச்சார்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஜே.வி.பி எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்ற நிலையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கு பின்னணியில் இருப்பதாக பலரும் குறிப்பிட்டிருந்த நிலையில் ஜே.வி.பியினர் இதனை முழுமையாக மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

“வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.” – அனுர குமார திஸாநாயக்க

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது

 

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

 

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

 

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

 

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

 

இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

 

இனவாதத்தை பரப்பி அதன் ஊடாக தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் தீர்வுகளுக்கு முன்னர் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். எமது அரசியல் செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நிலை நாட்டுவதாக அமையும் என்றார்.

பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவையும் சேர்க்க வேண்டும் – அனுர குமார

பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவையும் சேர்க்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், உள்ளிட்டவர்கள் தான் பொருளாதார குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

தற்போது இன்னொருவரையும் இதில் சேர்க்க வேண்டும். அவர் தான் அமைச்சர் பந்துல குணவர்த்தன.

 

ஏனெனில், இவர்தான் பொருளாதாரம் தொடர்பாக இந்த நாடாளுமன்றில் அதிக தடவை கதைத்துள்ளார்.

 

எனவே, தனது பெயர் இந்தப்பட்டியலில் இல்லாதமையை நினைத்து பந்துல கவலையடைகிறாரோ தெரியவில்லை. அத்தோடு, நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றமை தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், உயர்நீதிமன்றின் தீர்ப்போடு இந்தத் தெரிவுக்குழு பயனற்றதாகிவிட்டது. இதனால், இந்தத் தெரிவுக்குழுவை கலைக்க வேண்டும் என நான் சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.