அட்மிரல் சரத் வீரசேகர

அட்மிரல் சரத் வீரசேகர

“பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.” – சரத் வீரசேகர

பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

நெருக்கடிக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டு நாட்டில் பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டாம் என மகாசங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மகாசங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதிப்பளித்து செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக இலங்கைக்கு அமுல்படுத்தப்பட்டது என்றும் இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு வழிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

“புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க முடியாது. தனித்து போராடுவேன்.”- அட்மிரல் சரத் வீரசேகர

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

30 வருட கால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்கலாம். புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,புலம்பெயர் தமிழ் அமைப்பினரும் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.

எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாகாண சபை தேர்தல் உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாக்கவில்லை.மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக மாகாண சபை தேர்தலை பிற்போட நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் கூட்டமைப்பினர் உண்மை நோக்கத்துடன் செயற்பட வேண்டும்.அரசியல் தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை இல்லாதொழித்துள்ளார்கள்.  அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால்; அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வலுவற்றதாகி விடும் என குறிப்பிடும் கூட்டமைப்பினர் கொழும்பில் இருந்துக் கொண்டு அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.தமிழ் மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கபோவதில்லை. ஆனால் நாட்டின் ஒருமைப்பாட்டையும்,இன நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் போது அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது,13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.

“உங்கள் பெற்றோர்களை கேளுங்கள் இராணுவமா? புலிகளா? தமிழ் மக்களை கொன்றது என்று.” – நாடாளுமன்றில் சரத் வீரசேகர

“யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழ் மக்கள் தமது வீடுகளுக்குள் இருந்தவாறு நினைவு கூர்ந்துக் கொள்ளலாம்.”  என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“உங்கள் பெற்றோர்களை கேளுங்கள் இராணுவமா, புலிகளாக மக்களை கொன்றது என்று. இவ்வாறு பயங்கரவாதிகளை நினைவேந்துவது தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் பாவம். முன்னர், வெளியே சென்ற இளைஞர்களை மீண்டும் காண முடியாது. புலி பயங்கரவாதிகள் அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

இதனை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அன்று நீங்கள் நிம்மதி அற்று இருந்தீர்கள். இன்று தான் உங்களுக்கு விடுதலை. அதேவேளை, இலங்கையில் சிங்கள இனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே புத்த சாசனம் பாதுகாக்கப்படும். நாட்டில் பௌத்த மத உரிமைகள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் உள்ளன.

இலங்கையில் 72 சதவீதம் பௌத்தர்களும், 12 சதவீதம் இந்துக்களும், 9.7 சதவீதம் இஸ்லாமியர்களும், 6.3 சதவீதம் கத்தோலிக்கர்களும் வாழ்கிறார்கள். இலங்கை தேரவாத பௌத்த நாடு அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு, போசிக்கப்படவேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள இனத்தவர்கள் தான் பௌத்த சாசனத்தை தோற்றுவித்தார்கள், ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள இனம் பாதுகாக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் இருந்து சிங்களவர்களும், முஸ்லிம்களையும் பிரபாகரன் மாத்திரம் வெளியேற்றவில்லை. பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வாறே செயற்பட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் கொழும்பில் சிங்களவர்களுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு வடக்கு மாகாணத்திற்கு சென்று குறிப்பிடுகிறார். வடக்கில் சிங்களவர்களுக்கு இடமில்லை என்று, இது வெறுக்கத்தக்கதாகும். வடக்கில் புத்த சிலையை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள், இவ்வாறானவர்களிடம் நல்லிணக்கத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது.

வடக்கு மாகாணத்தில் புத்தசாசனத்திற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து தடையேற்படுத்துவதையிட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அவர்களின் உறவுகள் வீடுகளுக்குள் வைத்து நினைவு கூர்ந்து கொள்ளலாம்.

விடுதலைப்புலிகள் 3 இலட்சம் தமிழர்களை பகடைகாயாக வைத்து போர் செய்தார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராகவே செயற்பட்டார்கள்.

இவ்வாறானவர்களையா..? தாம் நினைவு கூறுகிறோம் என்பதை தமிழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“தனி நாடு என பேசும் தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் பரிதாபமான நிலையில் உள்ளனர்.”- சரத் வீரசேகர

“தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பிற நாடுகளில் உயர் கல்வியை கற்கிறார்கள். சுகபோகமாக வாழ்கிறார்கள்.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளார்கள்.” என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிம் அரசியல் தலைமைகள் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்களே தவிர,தமிழ் மக்களின் அடிப்படை பொருளாதார பாதிப்பு குறித்து அவதானம் செலுத்தவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நாட்டு மக்கள் கோரவில்லை,இந்தியாவின் அழுத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஊரடங்கு சட்டத்தை பிரயோகித்து 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட்டன.ஆனால் வழங்கப்பட்ட அரசியல் உரிமைகளை தமிழ் தலைமைகள் பாதுகாத்துக் கொள்ளவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போடும் வகையில் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைமைகள் அதற்கு எதிராக செயற்படவில்லை.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளினால் அவர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை.

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதி அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தாமல் திறைச்சேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அரசியல் உரிமை என குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களுக்கான உண்மையான அபிவிருத்தியை இவர்கள் தொடர்ந்து தடுத்து வருகிறார்கள்.

வடக்கு மாகாண இளைஞர்களின் தொழில்வாய்ப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அரசியல் தீர்வுக்கான மதிப்பு இல்லாமல் போகும் என குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பிற நாடுகளில் உயர் கல்வியை கற்கிறார்கள். சுகபோகமாக வாழ்கிறார்கள்.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளார்கள். இதுவே உண்மை.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளோம்.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்.அதிகார பகிர்வு என்ற சொற்பதத்தின் ஊடாக நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மலினப்படுத்த முடியாது.

அதிகார பகிர்வு சாத்தியமற்றது,மாவட்டங்களுக்கான அதிகாரங்களை விஸ்தரிக்கலாம் .ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.அதிகார பகிர்வு என்ற இலக்கை அடைவதற்காக பொருளாதார நெருக்கடி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தப்பட்டு,அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தற்போது செயற்பாட்டில் உள்ள போது நாட்டு மக்கள் வழங்கிய ஆணை எவ்வாறு வலுவற்றதாகும்,ஆகவே மக்கள் வழங்கிய ஆணையை மதித்து அரச தலைவர்கள் செயற்பட வேண்டும்.

அதிகார பகிர்வுக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் மட்டத்தில் முன்னெடுப்பேன்.நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பேன்.எதிர்வரும் நாட்களில் ஒன்றுப்பட்ட சக்தியாக இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவோம் என்றார்.

“நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் செய்த தியாகங்களை இன்னொரு இனத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது.” – சரத் வீரசேகர

” நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.” என நாடளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொட்பில் பாராளுமன்றத்தில் நேற்று அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அமுல்படுத்தியது. இலங்கையர்கள் அதனை கோரவில்லை.

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தான் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி, அதிகாரத்தை பிரயோகித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார் . ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கும், நாட்டு மக்களுக்கும் இடையில் தொடர்பில்லை.

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம். ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை. சமஷ்டியாட்சி நாடுகளில் மாத்திரம் தான் அதிகார பகிர்வு சாத்தியமாகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் உயிர் தியாகம் செய்துள்ளது. சோழர், பாண்டியன் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் போராடினார்கள். தியாகம் செய்தார்கள். ஆகவே அதிகார பகிர்வு என்ற சொற்பதம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் இந்த நோக்கத்துடன் செயற்பட்டார்.

ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள்.

பாதுகாக்கப்பட்ட ஒருமைப்பாட்டை ஒவ்வொருவரின் தேவைக்காக மலினப்படுத்த முடியாது. மாகாண சபைக்கு முழுமையாக எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்.

மாகாண சபை என்பது வெள்ளை யானை. ஒவ்வொரு இனத்தவரின் தேவைக்காக நாட்டை பிளவுப்படுத்த முடியாது, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும்” என்றார்.

 

“ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.” – அட்மிரல் சரத் வீரசேகர

“நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.”  என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

குருந்தூர் மலை – பௌத்த மத அடையாளங்களை பாதுகாப்போம் என வலியுறுத்தி,பௌத்த தேரர்கள்,சிவில் அமைப்பினர் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்க வளாகத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த நாட்டில் பௌத்த மத பாரம்பரிய அடையாளங்கள் மற்றும் உரிமைகளை பாதுகாப்பது சிங்களவர்களின் கடமை மாத்திரமல்ல இலங்கையில் வாழும் அனைவரது கடமையாகும். 2000 வருடகாலம் பழமை வாய்ந்த குருந்தூர் மலையில் பௌத்த மத மரபுரிமைகளை பாதுகாப்பது அவசியமானது.

புழமை வாய்ந்த குருந்தூர் மலை விகாரையினை புனரமைத்து பௌத்த மத வழிபாடுகளில் ஈடுப்பட ஒருசில இனவாதிகள் இடமளிக்கவில்லை.இது முற்றிலும் வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.குருந்தூர் மலையில் பௌத்த மத மரபுரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் யுத்த தீவிரமடைந்த போது கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் இடம்பெற்றன. வீதியில் தேர் ஊர்வலம் சென்றன. சிங்களவர்களுக்கு பொறுமையுண்டு.நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.

திருகோணேச்சரம் ஆலயத்தில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்துகிறார்கள். நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு முன்பாக முஸ்லிம்,தமிழ் சமூகத்தினர் கடைகளை வைத்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனவாதம் பேசிக் கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள். கூட்டமைப்பினர் இனவாத செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

“ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த இடமளிக்க முடியாது.”- சரத்வீரசேகர

ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு  ஆதரவளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு தாம் ஆதரவளிக்கவில்லை எனவும், அவ்வாறே 21ஆவது திருத்தச் சட்டத்துக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின்  அதிகாரங்கள் குறைக்கப்படுவதில் தனக்கு உடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரியந்த குமார படுகொலை சாதாரண விடயம் என கூறிய பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் – சரத் வீரசேகர வழங்கியுள்ள பதில் !

பிரியந்த குமார படுகொலை சாதாரண விடயம் என பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பிரியந்த குமாரவின் வீட்டிற்கு சென்று உடலிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்திற்கு அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களில் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தினை பார்த்ததாகவும் அந்த கூற்று நிராகரிப்பு தன்மையை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரியந்த குமாரவின் படுகொலையை கண்டித்துள்ள அமைச்சர் இந்த படுகொலை குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் கண்டணமும் வெட்கமும் வெளியிட்டு குற்றவாளிகளை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தமை மாத்திரமே ஆறுதலான விடயம் என குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புலிகளின் தங்கத்தை தேடிய பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணி இடைநீக்கம் !

இறுதி யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக கருதப்படும் புலிகளின் தங்கம் தேடிய சம்பவம் தொடர்பில் சரத் வீரசேகரவின் அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு செயலாளர் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வௌியான செய்திகள் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளிடம் கோரியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தக் காலத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத் தொகையொன்றை இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்த அமைச்சரவை அமைச்சர்கள் இருவரின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த செயலாளர்கள் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் சட்டம் மற்றும் ஒழங்கு அமைச்சரின் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

“விக்கினேஸ்வரன் உள்ளிட்டோர் அதிகாரப் பகிர்வு வேண்டும் என நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் புலம்பித்திரிவதை நிறுத்த வேண்டும்” – அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர

“விக்கினேஸ்வரன் உள்ளிட்டோர் அதிகாரப் பகிர்வு வேண்டும் என நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் புலம்பித்திரிவதை நிறுத்த வேண்டும்” என அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர என வலியுறுத்தியுள்ளார் .

‘மாகாண சபை முறைமை தேவையற்றது எனக் கூறிவரும் அமைச்சர் சரத் வீரசேகர, அதனூடாகத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வையும் கொடுத்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில்  ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை. இதை மீறி 9 மாகாணங்களில் 9 விதமான சட்டங்களை உருவாக்க முடியுமாயின் ஜனாதிபதியின் கொள்கை பொய்யாகிவிடும். எனவே, மாகாண சபை முறைமை தேவையில்லை.

மாகாண சபை முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக இருக்கின்றேன். அதாவது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டபோது அதை நான் கடுமையாக எதிர்த்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை அதற்கு எதிராகவே கருத்து வெளியிட்டு வருகின்றேன். இதை உணராமல் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் எனப் புலம்பித் திரிகின்றனர். இந்தப் புலம்பலை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும்” – என்றார்.