அசாத் மௌலானா

அசாத் மௌலானா

“என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்.” – செனல் 4 ஆவணப்படத்திற்கு தகவல் வழங்கிய அசாத் மௌலானா மீது பெண் ஒருவர் வழக்குத்தாக்கல்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் தகவலாளரான அசாத் மௌலானாவுக்கு எதிராக பெண் ஒருவரால் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் அவர் தம்மை திருமணம் செய்து ஏமாற்றியதாக தெரிவித்து குறித்த பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன் முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

“புகலிடக் கோரிக்கைக்காக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல பொய்யான பிரசாரங்களில் என்னுடன் இணைந்து செயற்பட்ட அசாத் மௌலானா ஈடுபட்டுள்ளார்.” – நாடாளுமன்றத்தில் பிள்ளையான் !

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் சனல் – 4 ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி கண்டு நான் அச்சம் கொள்ளப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், என்னோடும் என்னுடைய அமைப்புடனும் சேர்ந்து பயணித்த அசாத் மௌலான என்பவர் புகலிடக் கோரிக்கைக்காக பல பொய்யான பிரசாரங்களில் இறங்கியிருக்கிறார்.

அவர் எமது அமைப்பிலே இருந்து உத்தியோகபூர்வமாக அனுமதி பெற்று குடும்பத்துடன் வெளிநாடு சென்று ஒரு வருட காலத்தை கடந்த சூழலில் இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி என்பது எங்களுடைய நாட்டுக்கும் எங்களுடைய மக்களுக்கும் கடந்த காலங்களில் எண்ணத்தை செய்துள்ளது என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். அந்த அடிப்படையில் அந்த ஊடகத்தில் வந்த செய்தியை பற்றி அச்சம் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. அதேவேளை ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் தான் செய்தார்கள் என்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரே கூறியிருக்கிறார்.

அதேபோன்று இந்த தாக்குதலுக்கு அந்த அமைப்பு தமது உத்தியோகபூர்வ இணையதளத்தில் உரிமை கோரியிருந்தார்கள்.

இந்த தாக்குதலை எதற்காக செய்தார்கள் என நோக்கத்திற்காக செய்தார்கள் என்று அந்த தகவலை தெரிவித்து இருந்தார்கள்.

 

வெளிநாட்டிலே தஞ்சம் பெற சென்றிருக்கின்ற அசாத் மௌலானா இந்த விடயத்தை மறுபக்கம் திருப்ப நினைப்பதாக நான் நம்புகிறேன்.

எனக்குள்ள அச்சமும் கவலையும் என்னவென்றால் சாகுராமும் அவரிடம் சேர்ந்த ஒரு கூட்டமும் மதத்திற்காக மரணிப்போம் என்று சத்தியம் செய்தவர்கள் என்று சிறையிலும் வெளியிலும் இருக்கிறார்கள். இந்த தாக்குதலின் பின்னணியில் பல சர்வதேச சக்திகள் இருக்கின்றன இவற்றை காப்பாற்றும் முயற்சியாகவே அசாத் மௌலானாவின் நடவடிக்கை என எனக்கு சந்தேகம் இருந்திருக்கிறது

இந்த சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் ஒரு அச்சுறுத்தலான சூழலை ஏற்படுத்த இங்கு முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எங்களிடம் இருக்கிறது.” என்றார்.