“ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சட்டமா அதிபர் உட்பட உயர் அதிகாரிகளின் அழுத்தங்களினால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி டி.சரவணராஜா தனது குடும்பத்தாரின் பாதுகாப்பு கருதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீதிபதிக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர் உட்பட கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கங்கள் பல இணைந்து கடந்த திங்கட்கிழமை எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியிடம் வலியுறுத்தல் மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகத்துக்கு மிடுக்காக குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது. உள்ளக விசாரணையில் சரியான மற்றும் நியாயமான நீதி கிடைக்காத காரணத்தால்தான் சர்வதேச விசாரணையை தொடர்ந்து கோருகிறோம் என்பதை அரச தலைவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஜேர்மனிய நாட்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ‘நாங்கள் என்ன இரண்டாம் தரப்பினரா (செகன்ட் கிளாஸ்) என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆத்திரமடைந்து பதிலளிக்கிறார்.
சர்வதேச நாடுகளிடம் கையேந்தும்போது இந்த இரண்டாம் தரப்பினரா என்ற நிலை ஏன் தோன்றவில்லை. அதே போல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவற்கும், தமிழர்களை கொன்று குவிப்பதற்கும் உலக நாடுகளிடம் நிதி மற்றும் ஆயுதம் பெற கையேந்தும்போது இரண்டாம் தரப்பினரா என்ற எண்ணம் தோன்றவில்லையா?
நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினை என்ன? பிரச்சினையின் ஆணி வேர் என்ன? என்பதை அரச தலைவர்கள் ஆராயாமல் இருக்கும் வரை இந்த நாடு எவ்வாறு முன்னேற்றமடையும். நாட்டின் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இலவச சுகாதாரத்துறையில் எதிர்காலம் தொடர்பில் அரச மருத்துவ சங்கத்தினர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அரசாங்கம் எதிர்ப்பு அறிவிப்புக்களை மாத்திரம் வெளியிடுகிறதே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை.
கொழும்பில் உள்ள கனடா, பிரித்தானியா உட்பட சகல தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் முன்பாக இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நாட்டுக்காவது செல்ல வேண்டும் என்பதே இளைஞர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் முஸ்லிம்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். குறிப்பாக, படித்த சமூகத்தினர் விரைவாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம், ஆசியாவின் ஆச்சரியம் என்று குறிப்பிட்டுக் கொண்டுவிட்டோம் என மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை. மாறாக, இந்து ஆலயங்களை அழித்து அங்கு விகாரைகளை கட்டுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மனநிலையில் எவ்வாறு முன்னேற முடியும்?
நாட்டின் தொழிற்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஆடை தொழிற்சாலைகள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பொருளாதார மீட்சி என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால், நாட்டின் பொருளாதார நிபுணர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் இனவாத செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. கௌதம சித்தார்த்தனின் போதனைகளை பறைசாற்ற வேண்டிய பௌத்த பிக்குகள் இனவாதத்தை பறைசாற்றி ஆவேசமாக செயற்படுகிறார்கள். இனவாதத்தை முன்னிலைப்படுத்திக்கொண்டு செயற்பட்டால் எவர் ஆதரவு வழங்குவார்?
இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து நீதியான தீர்வை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் தமிழர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.