இலங்கை வளர்ச்சியை நோக்கி பயணிக்க 16 அம்சங்களை உள்ளடக்கிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் !

இலங்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கான பதினாறு அம்சங்களை உள்ளடக்கிய நிர்வாக ஆளுகை மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு 2.9 பில்லியன் கடனுதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்த நிலையில், அது தொடர்பான முதலாம் கட்ட மீளாய்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது பதினாறு அம்சங்களை உள்ளடக்கிய நிர்வாக ஆளுகை மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பதினாறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகளுக்குள் வேரூன்றிய ஊழல் சிக்கல்களை நிவர்த்தி செய்வது இந்த மதிப்பீட்டின் நோக்கமாக அமைந்துள்ளது. இதன்படி, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவுக்கு ஆணையாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை இணைத்துக் கொள்ளும் பணிக்காக அடுத்த மாதமளவில் சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கிய ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென நிதியத்தின் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் புதிய நிர்வாகமொன்றை அமைப்பது குறித்த அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் ஜுன் 2024 ஆம் ஆண்டில் சமர்பிக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

வரிச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல், பொதுக் கொள்முதல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை குறித்த அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்குமென நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Gallery

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *