ஹொரபேயில் நேற்று காலை நெரிசல் மிக்க ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பயணியின் மரணத்திற்கு 84 புகையிரத ஊழியர்களே நேரடிப் பொறுப்பு என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர்,
நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 84 ஊழியர்களின் சுயநல செயற்பாட்டினால் துரதிஷ்டவசமாக இளைஞன் உயிரை பணயம் வைக்க நேரிட்டதாக தெரிவித்தார்.
ஏறக்குறைய 18,000 தொழிலாளர்கள் தமது கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசியல் அல்லது சுயநல நோக்கங்களுக்காக 84 ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பணிப்புறக்கணிப்புகளை மேற்கொள்ளும் முன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ரயில்வே ஊழியர்களுக்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை புகையிரத பொது முகாமையாளருடன் அனைத்து பிரச்சினைகளையும் கலந்துரையாடுமாறும், அது தோல்வியுற்றால் போக்குவரத்து அமைச்சின் செயலாளரை சந்திக்குமாறும் தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், தன்னை சந்திக்குமாறு ரயில் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, அமைச்சரவை உபகுழு உறுப்பினர்களுடன் நாளை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் திட்டமிடப்பட்ட போதிலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தொழிலாளர்கள் குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தம் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக நீண்ட தூர ரயில்களின் இயக்கத்தை பாதித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்ப்பதற்கு ஏற்கனவே தொழிலாளர்களுக்கு விருப்பங்களை வழங்கியிருப்பதன் மூலம் தொழிற்சங்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது .
84 ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தற்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு துக்ககரமான மரணத்தை தவிர்த்திருக்க முடியும் என்பதால் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரின் தலையீட்டை நாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.