நாட்டின் சுகாதாரத்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவர 500பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. அந்த பணத்தை தேடிக்கொள்வதாக இருந்தால் இலங்கையை வங்குராத்து பட்டியலில் இருந்து மீட்டிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இரண்டாவது நாளாக இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உண்ணாட்டரசிறை திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பது, நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து விரைவாக கழற்றிக் கொள்வதற்காகவே யாகும்.
சுகாதாரத் துறையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன அந்த வகையில் சுகாதார சேவையை முழுமையாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதானால் 500 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
அந்தளவு தொகையை தேடிக்கொள்வதென்றால் இலங்கை வங்குரோத்து பட்டியலில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு ஒரு சிலர் மட்டும் காரணமல்ல பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள். அதிகாரிகளும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அந்த வகையில் நான் சரி. அவர் தவறு என ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு சுகாதாரத்தை அரசியலாக்கிக் கொள்வதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. அனைவரும் தவறு செய்துள்ளவர்கள். அந்த வகையில் அனைவருமே ஒன்றிணைந்து அதனை நிவர்த்திக்க வேண்டும்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதனையடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து அகற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.