“ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கும் – ஜே.வி.பிக்கும் தொடர்பு உள்ளது.” – நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ!

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விசாரணைகள் அரசியலுக்காக பயன்படுத்தப்படும் வரை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைப்பது சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் கொள்கை அடிப்படையில் செயற்படுகிறோமே தவிர சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவில்லை.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை பொதுஜன பெரமுன தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடையில் கலந்துகொண்டார்.

 

பிரதான குண்டுதாரி ஒருவரின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் இருந்தார். அவ்வாறாயின் இவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்று குறிப்பிட வேண்டும்.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 720 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு 70 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்டத்துக்கு அப்பாற்பட்டு அமெரிக்காவிலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

குண்டுத்தாக்குல் சம்பவம் மற்றும் விசாரணைகள் தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. ஆகவே அரசியல் நோக்கத்துக்காக இவ்விடயம் பயன்படுத்திக்கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை கண்டுபிடிப்பதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதும் சாத்தியமற்றது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *