“குருந்தூர் மலை வழிபாடு தொடர்பான பிரச்சினையை தீர்க்க கதிர்காமத்தினை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.” – பேராசிரியர் சன்ன ஜயசுமன

குருந்தூர் மலையில் சர்ச்சைகள் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் அதிகரித்து வருவதால் அதற்கு நிரந்தரமான தீர்வொன்றை பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்மொழிந்துள்ளார்.

அவருடைய முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குருந்தி மலையானது (குருந்தூர் மலையானது) தொல்பொருளியல் பகுதியாகும். அதற்கான சான்றாதாரங்கள் பல காணப்படுகின்றன. ஆகவே அந்தப் புராதன இடத்தினை பேணுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது.  எனினும், குறித்த பகுதியில் பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் வழிபாடுகளைச் செய்துவந்ததாக வரலாற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது.

ஆகவே, தற்போதைய நிலைமையில், இந்த விடயத்தினை மையப்படுத்தி பௌத்தர்கள், இந்துக்கள் இடையே முரண்பாடான நிலைமைகள் வலுவடைவதற்கு இடமளிக்காமல், நிரந்தரமானதொரு தீர்வினை காண்பது அவசியமாகிறது.

அதன் அடிப்படையில், குறித்த மலையின் கீழ்ப் பகுதியில் உள்ள பிரதேசத்தில் தொல்பொருளியல் விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், இரு சமயத் தலங்களை நிர்மாணிப்பதே பொருத்தமானதாகும்.

குறிப்பாக, மலையின் கீழ்ப் பகுதியில் தலா ஒவ்வொரு ஏக்கர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்து மற்றும் பௌத்த தலங்களை நிர்மாணிப்பதன் ஊடாக இரு தரப்பினரும் தமது இறை நம்பிக்கைக்கு அமைவாக வழிபாடுகளை முன்னெடுக்க முடியும்.

இதற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமத்தினை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும். அதன் மூலமாக பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினைக் காண முடியும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *