இலங்கையில் ஒவ்வொரு வருடமும் இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் பிறக்கும் 3000 குழந்தைகள் !

எமது நாட்டில் வருடம் ஒன்றிற்கு 3000 குழந்தைகள் இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் பிறக்கின்றன. இவர்களில் 1500 குழந்தைகளுக்கு மட்டுமே ஒரு வருடத்திற்குள் சிகிச்சை அளிக்க எம்மால் முடிகிறது.

எஞ்சிய 1500 குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கின்றது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை இருதய நோய் நிபுணரும் ஆலோசகருமான வைத்தியர் துமிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு லங்கா வைத்தியசாலையின் டொக்டர் பிரதாப் சி ரெட்டி அரங்கில் நேற்றைய தினம் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை திட்டத்தில் ‘Don’t Skip A Beat’ என்ற வாசகத்துடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்த ஊடக சந்திப்பினை கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் 3220 மற்றும் ரோட்டரி கழகம் ஒஃப் கொழும்பு மெட்ரோபொலிட்டன் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் வைத்தியர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பிறவியிலேயே இதய பிரச்சினைகளைக் கொண்ட பிள்ளைகளின் உயிர் காக்கும் பணியில் ரோட்டரி கழகமும் இந்தியாவும் பெரும் உதவிகளை வழங்கியுள்ளன.

அந்த வகையில் இதய பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு எம்மால் சிகிச்சை அளிக்கவும் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் முடியுமானதாக உள்ளது என தெரிவித்தார்.

கொழும்பு லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனர்களுடன் இணைந்து கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் 3220 மற்றும் ரோட்டரி கழகம் ஒஃப் கொழும்பு மெட்ரோபொலிட்டன் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 80 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உதவியுள்ளன.

இது தவிர லங்கா வைத்தியசாலை, உள்நாட்டு வைத்திய நிபுணர்கள் மற்றும் கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் 3220 மற்றும் ரோட்டரி கழகம் ஒஃப் கொழும்பு மெட்ரோபொலிட்டன் ஆகியன இணைந்து பிறவியிலேயே இதய பிரச்சினை கொண்ட 50 சிறார்களுக்கான இதயம் தொடர்பான மருத்துவ சிகிச்சைகளுக்காக இவ்வாண்டில் உதவியுள்ளன.

அத்துடன் 65 சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் இந்தியாவின் கொச்சின் அம்ரிதா வைத்தியசாலையில் மேற்கொள்ள அனுமதித்துள்ளதுடன் 5 உள்நாட்டு வைத்தியர்களுக்கும் 30 தாதியர்களுக்கும் சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் பற்றிய பயிற்சிகளையும் வழங்குகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *