தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பில் சட்டத்தரணி சுகாஷ் தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடக்கும் பாடசாலை பரீட்சை மண்டபத்திற்கு அருகில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அரசியல் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பில், பரீட்சை மண்டபத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் சிலர் ஒன்று கூடியுள்ளதாக காவல்துறை புலனாய்வு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் சென்று இருந்தனர்.
அவர்களது கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சென்றவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புலானய்வு உத்தியோகத்தர்களிடம் அடையாள அட்டையைக் கோரி இருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைய, அவரிடம் தனது அடையாள அட்டையை காண்பிக்க முயன்ற வேளை, அங்கிருந்த நபர்கள் புலனாய்வு உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த வேளை அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து, அவருடன் கூடச் சென்ற மற்றைய புலனாய்வு உத்தியோகத்தரை மடக்கிப் பிடித்து சில மணி நேரம் வைத்திருந்த பின்னர் , மருதங்கேணி காவல் நிலையத்தில் உத்தியோகத்தரை கையளித்துள்ளனர்.
அதேவேளை, பரீட்சை மண்டபத்திற்கு அருகில் அரசியல் கூட்டம் நடத்தியமை மற்றும் காவல்துறை புலனாய்வு உத்தியோகத்தரை தாக்கியமை , அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்டவை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து , அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயார் ஆகி வருவதாக காவல்துறை தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.