“ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோக்கு உண்மையில் கரிசனை இருக்குமாயின் கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம். மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் இலக்கை அடைய டயஸ்போராக்கல் செயற்படுகிறார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற பந்தயம்,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச் ) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்ட ஒரு சில விடயங்களை மேற்கோள்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
உலகளாவிய ரீதியில் மிக கொடிய அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை முடிவுக்கு கொண்டு வந்து 14 ஆண்டுகளை கடந்துள்ளோம் பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
இராச்சியத்தை வீழ்த்தும் வகையில் செயற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை நாட்டுக்காகவே முடிவுக்கு கொண்டு வந்தோம்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இன நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்து வாழும் டயஸ்போராக்கல் மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கத்தை அடைய முயற்சிக்கிறார்கள்.இதற்காக ஐரோப்பிய நாடுகள் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனடா நாட்டு பிரதமர் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது.அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தியே அவர் இவ்வாறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்துக்கு இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சு வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கடனாவில் புலம் பெயர் தமிழர்கள் வளம் பெற்றுள்ளார்கள்.இவர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே கடனாவின் பிரதமர் இலங்கை தொடர்பில் முறையற்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையை காட்டிலும் கனடா பாரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது.ஈழத்தமிழர்கள் தொடர்பில் கடனாவின் பிரதமருக்கு உண்மையில் கரிசனை,அக்கறை காணப்படுமாக இருந்தால் கனடாவில் ஈழ இராச்சியத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் ஈழத்தை கோரவில்லை.தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரம் தான் இன்றும் ஈழத்துக்காக போராடுகிறார்கள்.
நாடு முழுவதும் தமிழர்கள் சிங்களவர்களுடன் வாழ்கிறார்கள்.எங்கும் பிரச்சினையில்லை.அரசியல்வாதிகள் மாத்திரமே பிரச்சினைகளை உருவாக்கி குறுகிய இலாபம் பெறுகிறார்கள் என்றார்.