இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமென்றால் தமிழ் கட்சிகள் பாராளுமன்ற பொறிமுறைக்குள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப்பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அத்தியாவசியமானதாகும். பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்படாது தூரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதை தமிழ் கட்சிகளிடம் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (மே1) காலை 10 மணிக்கு கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் இடம்பெற்றது.

கட்சி சார்பின்மையை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

எனினும் கட்சி ஆதரவாளர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவரால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு சற்று முன்னர் இக் கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.

அந்த விசேட அறிவிப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

எனது முயற்சி அரசியல் அல்ல. நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள்வதும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுமாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோடு, அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் காரணமாகவே நாம் முன்னோக்கிச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட்டது.

அதனை அமுல்படுத்தி 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே எனது இலக்கு மொத்த தேசிய உற்பத்தியை ஆண்டுக்கு 6 – 7 சதவீதம் என்ற அளவில் விரைவாகக் கொண்டு வரக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

2048 இல் நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை மாற்றமடைந்திருக்க வேண்டும்.

குறுகிய கால அரசியல் பற்றி சிந்திக்காது 2048 ஐ பற்றி சிந்திக்க வேண்டும். மீண்டும் பாராளுமன்றத்துக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள புதிய பாதையில் பயணிக்க வேண்டும்.

நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப் பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வருட இறுதிக்குள் இது குறித்து இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

இனப்பிரச்சினை விடயத்தில் தூரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என தமிழ் கட்சிகளிடம் தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில் பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்படுமாறு அழைப்பு விடுகின்றேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *