ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தவிர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் 13வது திருத்தம் தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான வகையில் ஈழத் தமிழர்களின் விடயங்களை மனோ கணேசன் கையாள்வதாக சாடினார்.
தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்துக்கட்சிகளும் தமிழ் மக்களுக்கு அப்பட்டமான பொய் முகங்களை காட்டிவருகின்றன. எனவே தமிழ் மக்கள் இதனை சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.
13ஆம் திருத்தம் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அன்றி தமிழ் மக்களின் தீர்வு அல்ல.
இந்தியா அமெரிக்கா, அரசாங்கம், மற்றும் சிங்கள முற்போக்குவாதிகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 13வது திருத்ததையே வலியுறுத்துகின்றனர்.
ஏற்கனவே ரணில் விக்ரமசிங்க 13வது திருத்தமே தீர்வு என்று அறிவித்த போது எதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு சென்றது.இது ரணிலுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஏமாற்று வேலை.
அண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் முன்னெடுத்த தமிழ் தரப்புக்களின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஓடி ஒளிந்து அரசுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
இந்த ஹர்த்தால் நடவடிக்கையால் 100 கோடி ரூபா, ஒருநாளில் மட்டும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு என தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி மனோ கணேசன் எம்.பி., தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு மின்னஞ்சல் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் பாராளுமன்றத்தில் தமிழரை பிரதிபலிக்கும் இரண்டு அங்கத்தவர்களை கொண்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.