யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய வேளை, நெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் போது, குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.
இதே நேரம் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் எனவும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்தவர் எனவும் அவர் புங்குடுதீவினை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.