வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், இன்னும் அந்த பிரச்சினை தொடர்கிறது.
வனபாதுகாப்பு திணைக்களத்துடனும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன.
அவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மாத்திரமன்றி வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதே வேளை வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக வவுனியாவில் இன்று பேரணி ஒன்று நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் கண்டிக்கப்பட்டதுடன் தமிழரின் வழிபாட்டு உரிமைகளை பறிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது.