நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சையையும், சிங்களவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்தியும், தமிழர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தியும் தமது தாய் மொழியில் பரீட்சை எழுதுவதற்கான உரிமை நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், சட்டக்கல்லூரியின் நடவடிக்கைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்த தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வினாத்தாள்களுக்கு விடை எழுதுவதற்கு இடைக்காலத்தின் போது சந்தர்ப்பம் வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பரீட்சைகள் எதுவாக இருந்த போதிலும் அதற்கு தாய்மொழியில் பதிலளிப்பதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும் என்றும் அவர் கூறினார். ஏந்தவொரு நாட்டிலும் ஆரம்பக் கல்வி தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதை யுனெஸ்கோ சர்வதேச அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு, கலாநிதி பட்டம், அதற்கும் மேற்பட்ட பட்டங்களுக்கும் பதிலளிக்க தாய்மொழி தேவைப்படுமாயின் அதற்கு இடமளிக்கப்படுவது அடிப்படை மனித உரிமையாக நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், சட்டக் கல்லூரியின் நிருவாக சபையில் உள்ள நீதிபதிகள் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அடிப்படை தாய்மொழியான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத முறையில் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.