முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த ஆலய கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத கட்டுமானம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் 30.03.2023 அன்று இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி இடம்பெற்று வரும் கட்டுமான பணிகள் தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்க்கனவே இருந்த AR/673/18 வழக்கு இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் இணைத்து நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிபதி ரி.சரவணராஜாவால் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணைகளை 30.03.2023 அன்று மீளவும் விசாரணை மேற்கொள்வதற்கு தவணையிட்டுள்ளார். இதன் போது, முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட் பிரசாந் ஆகியோர் இன்று வழக்கு தொடுநர்கள் சார்பில் முன்னிலையாகினர்.
இவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.தனஞ்சயன், சுபா விதுரன், ருஜிக்க நித்தியானந்தராஜா உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் ஆறுபேர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை கேட்டறிந்த பின்னரே நீதிபதி மேற்கண்டவாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.