அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்ததாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பிலான முழுமையான விபரங்களும் நாம் அறிவோம். ஆனால், அதனை பகிரங்கப்படுத்த போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மே மாதம் இடம்பெற்ற கலவரத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியே அனைவரின் விட்டிற்கும் தீவைத்திருந்தாகவும் அமரகீர்த்தி அத்துக்கோறளவையும் ஜே.வி.பியே கொலை செய்திருந்தாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
அன்றைய கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியே தலைமை தாங்கியிருந்ததாகவும், காலி முகத்திடல் போராட்டத்திற்கு தலைமை வகிக்க முயற்சித்து ஜே.வி.பியினர் தோல்வி கண்டிருந்ததாகவும் அங்கு ஏற்கனவே முன்னிலை சோசலிச கட்சி ஆதிக்கம் செலுத்தியிருந்தாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
வெளிநாடுகளில் செயற்படுகின்ற புலிகளின் அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலிமுகத்திடலுக்கு வருகை தந்திருந்தாகவும் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, முஸ்லிம், அடிப்படைவாதிகளும் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த கோட்டாபய ராஜபக்சவினால் முடியாமல் போனதாகவும் ஆனால் ரணில் அதனை கனகச்சிதமாக நிறைவுக்கு கொண்டு வந்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த போராட்டத்தின் போது இராணுவத்தினர் ஏன் அமைதியாக இருந்தார்கள் என்பதும் தனக்கு தெரியும் என்றும் ஆனால் அதனை இப்போது கூற முடியாது என்றும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.