இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் குறித்து பின்லாந்து அரசாங்கமும் இலங்கையின் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.
இலங்கையின் மீது கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பின்லாந்து அரசும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் அதில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் குறித்த எழுத்து மூல அறிக்கையில்,
“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கை அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
ஆனால் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மந்தகதியிலே உள்ளது, எனவே பின்லாந்து அரசும் அமெரிக்கா மற்றும் கனடாவைப் போன்று இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.