கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கையின் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் போலியானது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த கடிதத்தில் இருதரப்பு , வணிகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 5 ஆண்டு கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் திருப்பிச் செலுத்தும் அட்டவணையைத் தளர்த்த சீனா தயாராக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை மறுத்துள்ள சீனத் தூதரகம், தனது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ், இலங்கை ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு எழுதப்பட்ட சமூக ஊடகங்களில் பரவும் கடிதம் முற்றிலும் போலியானது என்றும் தெரிவித்துள்ளது.
எனவே உத்தியோகபூர்வ தகவல் ஆதாரங்களை மட்டுமே பின்பற்றுமாறு தூதரகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி பெறும் முயற்சியில் இலங்கை தனது சர்வதேச கடன் வழங்குனர்களிடம் கடன் மறுசீரமைப்புக்கான பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறான இந்த போலி கடிதம் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.