முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமூக நீதி ஆணைக்குழுவுடன் கைகோர்க்குமாறு முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் அனைத்து சமூகங்களும் உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் (ACJU) 100 ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவொரு மதமும் அந்தந்த சமூகத்தை நவீனத்துவத்திற்கு வழிநடத்த வேண்டும் மற்றும் நவீன உலகத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மதங்கள் பல்வேறு நம்பிக்கைகளை கொண்டிருந்தாலும், எந்த மதமும் வெறுப்பை வளர்க்கவில்லை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ACJU இன் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
கடந்த 75 வருடங்கள் பல்வேறு சமூகங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டன என்றும், நாடு தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் அனைத்து இலங்கையர்களும் அனைத்து பேதங்களையும் விடுத்து ஒரே இலங்கையின் பிரஜைகளாக ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.