ஆதிவாசிகளின் பிரச்சினைகளை தீர்க்க புதிய சட்டமூலம் – அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

நாட்டின் ஏனைய சமூகத்தினர் அனுபவிக்கும் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகைகளை ஆதிவாசிகளும் பெற்றுக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதிவாசிகளின் உரிமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் அனைத்து அரசாங்கங்களும் ஆதிவாசிகளினது பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.  அந்த வகையில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை அவர்களை ஆதிவாசிகள் என்று கூறுவதிலும் பிரச்சினை உள்ளது. அவர்களும் இந்த நாட்டின் ஒரு சமூகம், எமது சகோதரர்கள் மூதாதையர்கள். அவர்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அதேபோன்று நாட்டில் பல அடிப்படை உரிமை இல்லாது போயுள்ள நிலையில்,
அவர்கள் அனைவரதும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஆதிவாசிகளின் சமூக பொருளாதார அரசியல் தேவைகளை பாதுகாப்பதற்கான சட்டம் மூலம் கொண்டுவரப்படும். அல்லது தற்போதுள்ள சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது எமது எதிர்பார்ப்பு. அதே போன்று எமது நாட்டில் பல்வேறு சிறு குழுக்கள் காணப்படுகின்றன அந்த குழுக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு எமது அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *