“இராணுவத்தினருக்கு புதிய வரவு-செலவு திட்டத்தில் 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது எதிர்க்கப்பட வேண்டிய விடயமல்ல.“ – இரா.சாணக்கியன்

“2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ‘சர்வஜன நீதி’ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இராணுவ சிப்பாய்களின் நலனுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆனால் ஒதுக்கப்படும் நிதி உண்மையில் இராணுவ சிப்பாய்களை சென்றடைகிறதா என்பதை ஆராய வேண்டும்.

நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள நாட்டு மக்களுக்கான நலன்புரி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் சீறுடை பிரான்ஸ் நாட்டில் இறக்குமதி செய்யப்படப்படுகிறது.

இராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் நவநாகரிக பொருள் கொள்வனவுக்கு செல்லும் போது அரச செலவுடன் அவர்களுக்காக இராணுவ சிப்பாய்கள் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. இவ்வாறான அடிப்படை முறையற்ற செயற்பாடுகள் முதலில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ள பின்னணியில் நேரடி வரி அறவிடலினால் நடுத்தர மக்கள்பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் சிகரெட்விற்பனை விலைக்கும், சிகரெட்நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பிற்கான வரைபுகளை தயாரிக்கும் அரசாங்கம் சிகரெட் நிறுவனத்திடமிருந்து முறையாக வரி அறவிட நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை வகுக்கவில்லை.

ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சிகரெட் நிறுவனத்திற்கு பல்வேறு வழிமுறையில் வரி விலக்கு வழங்கியுள்ளன. 2000 ஆம் ஆண்டு ஆட்சியில்  சிகரெட்ஒன்றின் விற்பனை விலைக்கும் – நிறுவனத்திடமிருந்து அறவிடப்படும் வரிக்கும் இடையில் சமனிலை தன்மையை பேணப்பட்டது. ,பிற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் சிகரெட் நிறுவனங்களுக்க சார்பாகவே செயற்பட்டது.

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சிகரெட் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டு வரி விதிப்புக்கு முன்னர் பல பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வருடம் மாத்திரம் 40 முதல் 50 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் ஒன்றின்விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது. ஆனால் சிகரெட் உற்பத்திக்கான வரி விலக்கு 50 சதவீதத்தால் வழங்கப்பட்டது.

ஆகவே நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நிறுவனம் பெறும் வருமானத்தில் ஒருபகுதியை அரசாங்கம் பெற்று அதனை நடுத்தர மக்களின் நலன்புரி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை நிதியமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *