இலங்கையில் சுமார் 4 – 5 இலட்சம் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் எனவும் இதன் அபாய நிலைமை தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (22) செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில் ,
நச்சு போதைப்பொருட்கள் மற்றும் அபாயகர ஒளடதங்கள் பாவனையைத் தடுப்பதற்காக பொருத்தமான நடவடிக்கைகளை அடையாளங்காணல், திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்காக ஜனாதிபதி செயலணியொன்றை தாபிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி , சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக நானும் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போதைப்பொருள் பாவனை தொடர்பில் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள முழுமையற்ற அறிக்கைக்கு அமைய , சுமார் 4 – 5 இலட்சம் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் கஞ்சா மற்றும் அபின் போன்ற போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்பட்டதைப் போன்று தற்போது ஹெரோயின் மற்றும் ஐஸ் என்ற போதைப்பொருட்களின் பாவனனை தீவிரமடைந்துள்ளது.
தடைவிதிக்கப்பட்ட நச்சு போதைப்பொருள் பட்டியலில் ஐஸ் போதைப்பொருள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக இது தொடர்பில் சட்ட நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது.
எவ்வாறிருப்பினும் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கமைய , ஹெரோயினைப் போன்று 5 கிராமிற்கும் அதிகளவில் வைத்திருத்தல் , பாவித்தல் என்பவற்றுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதனால் ஏற்பட்டுள்ள அபாய நிலைமை யாதெனில் , பாடசாலைகளிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளமையாகும்.
கடந்த வாரங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பின்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் , மாணவிகள் போதைப்பொருள் பாவனைக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
விசேட வைத்திய நிபுணர்களின் ஆய்வில் ஐஸ் என்ற போதைப்பொருளை ஒரு முறை பயன்படுத்தினாலும் அதற்கு அடிமையாக நேரிடும் என்றும் , இதனை உபயோகிப்பவர்களின் ஆயுட்காலம் இரு வருடங்கள் மாத்திரமே என்றும் உறுதியாகியுள்ளது. யுத்தத்தை விட, போதைப்பொருள் ஒழிப்பிற்காக தீவிரமாக போராட வேண்டியுள்ளது.
பொலிஸ் அல்லது போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் வழக்கு சான்று பொருட்களாக வைக்கப்பட்டிருக்கும்.
சிறிது காலத்தின் பின்னர் இவையும் காணாமல் போகின்றன. கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் மீண்டும் சமூகத்திற்குள் செல்கின்றன.இதற்கு பல அதிகாரிகளும் உடந்தையாகவுள்ளனர்.
எனவே போதைப்பொருள் பாவனையாளர்கள் அல்லது விற்பனையாளர்களிடமிருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருட்களில் நீதிபதியின் உத்தரவிற்கமைய மாதிரி பரிசோதனைக்காக மாத்திரம் சிறிய அளவை வைத்துக் கொண்டு , ஏனையவற்றை உடனுக்குடன் அழித்து விடுவதற்கான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் , போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கான செயற்திட்டங்கள் முழுமையாக வெற்றியளிக்கவில்லை.
சிறைச்சாலைகளிலுள்ள 26000 பேரில் , 80 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களாகவும் அல்லது போதைப்பொருள் பாவனையால் வேறு ஏதேனும் குற்றச் செயல்களை புரிந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதி செயலாளர் தலைமையில் ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இதன் ஏனைய உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். மேலும் 9 மாகாணங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” எனவும் அவர் கூறியுள்ளார்.