இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோரின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி பல மோசடியாளர்கள் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் வரையில் மோசடி செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தியும் கேளாது பலர் பணத்தை கொடுத்து ஏமாந்து போயுள்ளார்கள். இது தொடர்பான கைதுகள் அடுத்தடுத்து இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில்; வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி 77 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த நபரை திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திணைக்களத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பதுடன் அவர் இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.