இலங்கை சனத்தொகையில் 5லட்சத்துக்கும் அதிகமானோர் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் – அமைச்சர் அலிசப்ரி

“போதைப்பொருள் பாவனையாளர்கள் மீது மாத்திரம் முழுமையான அவதானம் செலுத்தாமல் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகவும்  கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

2019ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது நீதிமன்றத்தில் நிலுவையில் காணப்பட்ட பல இலட்ச வழக்குகளை துரிதமான விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம். அத்துடன் காலத்திற்கு தேவையான பல சட்டங்களை இயற்றினோம், பழமையான பல சட்டங்களை திருத்தம் செய்தோம்.

எமது நாட்டில் ஒரு மில்லியனுக்கு 15 நீதிபதிகள் உள்ளார்கள். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலுவையில் உள்ள வழக்குகள் பல தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் நீதித்துறையில் கட்டமைப்பில் உள்ள சிறப்பு விடயங்களை இலங்கையில் செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் ஹெரோய்ன் உட்பட அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.

சிறு வயதினை உடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றி வளைப்பதை இலக்காக கொண்டுள்ளோம், ஆனால் உலக நாடுகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுகாதார கோணத்தில் பார்க்கப்படுகிறார்கள்.

போதைப்பொருள் பாவனையுடன் கைது செய்தப்படுபவர்களின் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவது போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரிகளுக்கு சாதகமாக அமைகிறது, ஆகவே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை துரிதப்படுத்த வேண்டும். போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரிகள் தான் நாட்டை இல்லாதொழிக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரிகளுடன் அரசியல்வாதிகள், முக்கிய தரப்பினர் உட்பட பலர் தொடர்புப்பட்டுள்ளார்கள்.

ஆகவே போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். நாட்டுக்கு போதைப்பொருள் உள்வருவதை தடுக்கவும்,விநியோகத்தையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் அறியவில்லை. ஆகவே போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளை பாடசாலைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள சிறுவர்களுக்கு புனர்வாழ்வு உட்பட மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *