“வடமாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட இணக்கசபை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்துவரும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நடமாடும் சேவை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வட மாகாண மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு நடமாடும் சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. விசேடமாக இந்தியாவில் இருந்து இங்குவந்திருக்கும் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக ஏற்கனவே விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
நீதி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்று அதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன. அந்த குழுவினால் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் வடமாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட இணக்கசபை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு இழப்பீட்டுக்கான அலுவலகமும் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலயமும் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடுகள் சம்பந்தமான விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதுடன் அந்த காரியாலயத்துக்காக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய அதிகாரிகள் அதுதொடர்பாக ஆரம்பித்திருக்கும் விசேட வேலைத்திட்டம் காரணமாக எதிர்வரும் சில மாதங்களுக்குள் குறித்த விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும்.
மேலும் ஒட்டுமொத்த நாடும் எதிர்கொண்டுள்ள போதைப்பொருள் தொடர்பான பிரச்சினை வடமாகாணத்திலும் பரவலாகப் பரவி வருவதால், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பது பாதுகாப்புப் படையினர் உட்பட அனைவரின் பொறுப்பாகும். அதனாத் இதுதொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதன்போது யுத்தம் மற்றும் வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அமைச்சரின் தலைமையில் நட்டஈடும் வழங்கி வைக்கப்பட்டது.