அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை போதிய காற்றோட்டம் அற்ற சூரியவெளிச்சம் படாத இடத்தில் தடுத்துவைத்திருப்பதன் காரணமாக அவர் தோல்நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் சந்த முதலிகேயின் சகோதரர் அனுர முதலிகே ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளதாவது,
எனது சகோதரர் மிகக்குறைந்தளவு வசதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளார், அவரை ஏன் மோசமான நிலையில் தடுத்துவைத்துள்ளனர் என்பதற்கான காரணங்களை தெரியாத நிலையில் பயங்கரவாத விசாரணை பிரிவினர் உள்ளனர். வசந்தமுதலிகே தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் போதிய காற்றோட்ட வசதிகளோ அல்லது சூரிய ஒளியே இல்லாததன் காரணமாக அவர் தோல்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வசந்த முதலிகேயின் கழுத்து உட்பட உடல் பகுதிகள் தோல்தொற்று நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. பயங்கரவாத விசாரணை பிரிவினர் அவரை தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவர்கள் சில மருந்துகளை வழங்கியுள்ளனர் ஆனால் பயங்கரவாத விசாரணை பிரிவினர் அதனை வழங்கவில்லை.
தங்களிடம் குறிப்பிட்ட மருந்து போதியளவு இல்லை என பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்தனர் பின்னர் நாங்கள் 14000 ரூபாய்க்கு மருந்தை வாங்கிக்கொடுத்தோம். ஆனால் மோசமான சூழ்நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் அவர் இன்னமும் குணமடையவில்லை – என்றார்.