நாட்டில் வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்துத் தட்டுபாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 10 விடயங்கள் அடங்கிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு சரியான முறையில் பின்பற்றாமையே நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவக் காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதார அமைச்சின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
தேசிய வைத்தியசாலைகளில் அஸ்ப்ரீன் மருந்துகளுக்குக்கூட பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன், பிரதேச வைத்தியசாலைகளில் சேலைன் போத்தல்களிலிருந்து பரசிட்டமோல் மருந்துகளுக்குக்கூட தட்டுப்பாட்டு நிலவுவதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிடுகின்றது.
ஒளடதங்கள் மற்றும் மருந்து வகைகள் தொடர்பில் ஈடுபட்டுள்ள சகல நிறுவனங்களையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து, அதனூடாக கலந்துரையாடல்களை முன்னெடுத்து தேவையான தீர்மானங்களை எடுக்குமாறு தமது சங்கம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டு சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியிருந்தபோதிலும், அதனை சுகாதார அமைச்சு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
இதன் காரணமாகவே நாட்டில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவக்காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.