“அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐ.நாவில் இந்தியாவின் கூற்றிலே இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் கால இழுத்தடிப்பு ஒன்றை செய்து வருகின்றது என்று சொல்லியிருக்கிறார்கள்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளடங்கலாக அதிகாரப் பகிர்வு முறை செய்யப்பட வேண்டும் என்று தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 13 ஆம் திருத்தச் சட்டத்துடன் இந்த விடயம் நிறைவுக்கு வருகிறது என அவர்கள் சொல்லவில்லை. ஆகவே அந்த நிலைப்பாடு நல்ல நிலைப்பாடு. முதல் படியாக 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுவத்துவதாக இருந்தாலும் அதனைச் செய்யட்டும். ஆனால் அது தீர்வல்ல.
அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரப் பகிர்வையே நாம் ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.
ஐ.நாவில் நிறைவேற்றப்படப் போகும் தீர்மானங்கள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நான் பேசியுள்ளேன். அதில் என்ன மாற்றம் தேவை என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் அதனை நிறைவேற்றப் போகிறவர்கள் இணை அணுசரணை நாடுகள். அவர்கள தான் இறுதியில் அதில் வேறு எதனையும் சேர்த்துக் கொள்ளலாமா, இதைப் பலப்படுத்தலாமா, அப்படிச் செய்தால் வாக்குகள் கூடுமா, குறையுமா என்கின்ற கடைசி தீர்மானங்களை எடுப்பார்கள். ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள வரைபு ஓரளவு எல்லா விடயங்களையும் அணுகுகின்ற ஒரு வரைபாக உள்ளது. அது இன்னும் பலமூட்டப்பட வேண்டும் எனக் கோரியுள்ளோம்.
எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கியுள்ளார்கள். ஏனைய நாடுகளுடன் பேசி முடிவு எடுப்பார்கள். கூட்டத்தின் இறுதி நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும்” என்றார்.