இந்நாட்டில் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஒரு மாதம் வாழ்வதற்கு குறைந்தபட்ச தொகையாக 13,137 ரூபா அடையாளம் காணப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் துறை வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.
முந்தைய மாதத்தில் இதே எண்ணிக்கை 12,444 ரூபாவாகக் காட்டப்பட்டது, இம்முறை வளர்ச்சி 5.57% ஆக உள்ளது.
நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்யத் தேவையான தொகை 52,552 ரூபா எனவும் கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 56,676 ரூபா எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இலங்கையின் தற்போதைய பொருளாதார – வாழ்க்கைச்செலவு பற்றி குறிப்பிட்ட போது,
இலங்கையில் வாழும் மக்கள் வறுமையில் இருந்து வெளிவர ஐந்து நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 62 ஆயிரத்து 220 ரூபாய் தேவை . இலங்கையில் தொழில் புரிவோரில் 70 வீதமானோர் 62 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார்கள். இலங்கையின் போசாக்கு குறைபாட்டை சர்வதேச சமூகத்தினரின் அறிக்கையை நிராகரிக்கிறதே தவிர மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அறிக்கையின்படி நாட்டில் வறுமை தீவிரமடைந்துள்ளது என்பதை கருத்தில் கொள்ளவில்லை.
இலங்கையின் சனத்தொகையில் சுமார் 30 வீதமானோர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளதும் நினைவில்கொள்ள வேண்டும். தற்போது சர்வதேச ஆதரவுடன் இலங்கைக்கு உணவு வழங்கும் திட்டத்தை உலக உணவுத் திட்டம் ஆரம்பித்துள்ளது.” என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.