“இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 2500 ரூபாவை வழங்குவதாக கூறுவதற்கு இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனாவுடனான நீண்டகால நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள எரான் விக்ரமரத்ன,
அரசாங்கத்தின் கீழ் ஊழல் மற்றும் மோசடிகள் முடிவின்றி நடைபெறுவதாகவும், இறக்குமதி என்ற போர்வையின் கீழ் அரசாங்கம் மில்லியன் கணக்கான டொலர்களை இழந்துள்ளது.
இலங்கையில் வாழும் மக்கள் வறுமையில் இருந்து வெளிவர ஐந்து நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 62 ஆயிரத்து 220 ரூபாய் தேவை . இலங்கையில் தொழில் புரிவோரில் 70 வீதமானோர் 62 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
இலங்கையின் போசாக்கு குறைபாட்டை சர்வதேச சமூகத்தினரின் அறிக்கையை நிராகரிக்கிறதே தவிர மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அறிக்கையின்படி நாட்டில் வறுமை தீவிரமடைந்துள்ளது என்பதை கருத்தில் கொள்ளவில்லை.
இலங்கையின் சனத்தொகையில் சுமார் 30 வீதமானோர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளதும் நினைவில்கொள்ள வேண்டும். தற்போது சர்வதேச ஆதரவுடன் இலங்கைக்கு உணவு வழங்கும் திட்டத்தை உலக உணவுத் திட்டம் ஆரம்பித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட 20 ஆயிரம் ரூபாய் போசாக்கு பொதியை நிறுத்திவிட்டு, தற்போது இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 2500 ரூபாவை வழங்குவதாக கூறுவதற்கு இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென அவர் மேலும் கூறியுள்ளார்.