பொகவந்தலாவ சிங்காரவத்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி தோட்ட மக்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சிங்காரவத்தை தோட்டத்தின் கிராம அபிவிருத்தி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணித்தியாலயம் இடம்பெற்றது. நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட சிங்காரவத்தை தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த 1800க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பொகவந்தலாவ நகரத்திலிருந்து இத்தோட்டத்திற்கு செல்லும் ஒன்பது கிலோமீற்றர் கொண்ட பிரதான வீதி குன்றும், குழியுமாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.
இப்பாதையை நோயாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள் என அன்றாடம் தொழிலுக்கு செல்பவர்களும் பயன்படுத்துகின்றனர்.
இதேவேளை ரொக்கில், சிங்காரத்தை, வானக்காடு, மோரார் மேற்கு பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்களும் இப்பாதையை பயன்படுகின்றனர் . சுமார் 25 வருடங்களுக்கு மேல் பாதை சீர் செய்யாத காரணத்தினால் மண் பாதையாகவே காணப்படுகிறது.
புனரமைப்பு செய்து தருவதாக அரசியல்வாதிகள் அடிக்கல் நாட்டிய போதிலும் பாதையை புனரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் இத்தோட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி பிரதான வீதியில் எதிர்ப்பினை முன்னெடுத்தனர்.