இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. முக்கியமாக எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை திணறுகிறது. இந்த நிலையில், உலக வங்கியிடம் இலங்கை மீண்டும் நிதியுதவி கேட்டிருந்த நிலையில், .
இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக பல தவறான தகவல் வெளியாகியுள்ளன.
“இலங்கை மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவோம். அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை.
சில அத்தியாவசிய மருந்துகள், வருமானமற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக பணப்பரிமாற்றம் உதவி, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் பிள்ளைகளின் பாடசாலை தேவைகள், உணவு, விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவாக போன்ற விஷயங்களில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வளங்களை நாங்கள் தற்போது மீண்டும் உருவாக்குகிறோம் என்று தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறும்போது, “வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது.
அந்நிய செலாவணியை செலவழிப்பதை விட அந்நிய செலாவணியை ஈட்டும் நாடாக இலங்கையை மாற்றுவதே தற்போதைய நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாகும்.
இதன்படி இலங்கையின் அந்நிய செலாவணி ஈட்டும் திறனை நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் மேம்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடரும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.
……………………………………………………………………………………………………………………………………………………
இவை ஒரு பக்கமாக இருந்தாலும் கூட வெளிநாட்டுக்கடன்களில் மட்டுமே தங்கியிருக்க இலங்கையின் அரசியல் தலைமைகள் முற்படுவது மிகுந்த வேதனையளிள்க கூடிய விடயமாக உள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இலங்கை மக்களை சதேசிய உற்பத்திகளுக்கு பழக்கப்படுத்தி – மீண்டும் விவசாய தன்னிறைவு உடைய நாடாக – உற்பத்திகளை மேற்கொள்ள கூடிய ஒரு நாடாக இலங்கையை மாற்ற ஏற்றாற் போன்றதான அரசியல் – பொருளாதார கொள்கைகளை உருவாக்கும் வரை இந்த நிலை நீடித்துக்கொண்டேயிருக்கும்!