கல்வித்துறையில் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பல குறைபாடுகளை தாம் கண்டறிந்துள்ளதாக, கல்வி அமைச்சரான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,
பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் . மேலும் சில பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண முடியும். டிசம்பர் மாதத்திற்குள் நாடு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம், அந்தந்த பிரிவுகள் தங்கள் நிபுணத்துவப் பகுதியில் கவனம் செலுத்த முடியும்.
பாடசாலை பாடத்திட்டங்களை உரிய நேரத்தில் உள்ளடக்குதல், பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துதல், பரீட்சை பெறுபேறுகளை தாமதமின்றி வெளியிடுதல், பாடசாலைப் பாடப்புத்தகங்களை வழங்குதல் கால இடைவெளியில் பல்கலைக்கழக பிரவேசத்தை உறுதிப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் கல்வித்துறையை வழமைக்கு கொண்டு வருவதற்கு தான் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தாள் தட்டுப்பாடு காரணமாக பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் இன்றும் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையில் உள்ள சில முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும். நாட்டின் தற்போதைய நிலையை மனதில் கொண்டு நீண்ட கால பிரச்சினைகளுக்கு பின்னர் தீர்வு காண முடியும்.
தனது அமைச்சின் செயலாளராக அனுபவம் வாய்ந்த நபர் ஒருவர் இருப்பதாகவும், ஏனைய அதிகாரிகளின் ஆதரவுடன் தனது குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை அடைவதில் நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.