அலரி மாளிகைக்கு அருகில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதேவேளை, இன்று முற்பகல் அலரி மாளிகை முன்பாக ஒன்றுகூடியிருந்த பிரதமரின் ஆதரவாளர்களுக்கும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
தொடர்ந்து பிரதமருக்கு ஆதரவாக அணி திரண்ட மக்கள் காலி முகத்திலுக்குள் நுழைந்தததை அடுத்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடரங்களை உடைக்கும் காட்சிகளை காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் கலகக்காரர்களை அடக்கும் முகமாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதே நேரம், காலி முகத்திடலுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சகிதம் வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது குழுவொன்றினால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் உடனடியாக வாகனத்தில் ஏற்றப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதேநேரம் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மேல் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பின் சில பகுதிகளில் அமுல்படுதப்பட்ட ஊரடங்கு சட்டம் தற்போது மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் காலிமுகத்திடலில் தற்போது இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.