ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தி – சஜித் பிரேமதாச வழங்கியுள்ள உறுதி !

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு, இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடையுடன் நாடாளுமன்றத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாக அனைவரையும் தண்டிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,

“3 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத் தாக்குதலில் நாம் எமது உறவுகளை இழந்தோம். இந்த பயங்கரவாத் தாக்குதலால் நாடு என்ற ரீதியில் நாம் பல பாதிப்புக்களை எதிர்கொண்டோம்.

இந்த நேரத்தில், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் பாரபட்சம் பாராது சட்டநடவடிக்கை எடுப்போம் என்றும் அவர்களுக்கு உச்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் பேராயருக்கு நாம் எழுத்துமூலமாக இவ்வேளையில் அறியத்தருகிறேன்.

இன்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்கள், பேராயர் மற்றும் எதிர்க்கட்சியாக எமக்கு என அனைவருக்கும் சந்தேகம் இருந்துக்கொண்டேதான் உள்ளது.

இதுதொடர்பான உண்மைகள் இன்னமும் வெளிவரவில்லை. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் பொது மக்களுக்கு காண்பிக்கவில்லை. இதனை நாடாளுமன்ற இணையத்தில் வெளியிடவேண்டும் என நான் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சூழ்ச்சியொன்று இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்திருந்தார். இதனை கண்டுபிடிக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் பிரதான கடமையாகும். உண்மைகள் வெளிவர வேண்டும். உண்மைகளை பேச வேண்டும்.

எனது தந்தையும் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றில்தான் கொல்லப்பட்டார். அன்று எனக்கு இருந்த மனநிலை, இன்றும் என்னுள் இருக்கிறது. இதனால், ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

எனவே, இவர்களை கருத்திற்கொண்டு தகவல்களை மறைத்துக்கொண்டிருக்காமல், வெளிப்படையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுதொடர்பாக புதிய விசாரணையை அரசாங்கம் நடத்த வேண்டும். இதில் கொழும்பு பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை உள்வாங்க வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் யாரையும் பாதுகாக்கவே, காப்பாற்றவோ முற்படக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *