ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் இன்றையதினம் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது.
முன்னதாக பெரும்பான்மை சிங்கள மக்கள் தேசிய கீதத்தை தமது மொழியில் பாடியதை அடுத்து பின்னர் தமிழ் மொழியில் கீதம் பாடப்பட்டது.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு உத்தியோகபூர்வ பொது நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது, ஆனால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் 2020 இல் இந்த நடைமுறையை நிறுத்தியது.
இதேவேளை தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு எதிராகவும் ஆதரவாகவும் சிங்கள மக்களால் டுவிட்ட பதிவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக எதிர்காலச் சந்ததியினருக்கான தாய்நாட்டைப் பாதுகாக்கும் வகையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் இலங்கைவாழ் அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளுமாறு சிங்களக் கலைஞர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.