அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்சவும் வாசுதேவ நாணயக்காரவும் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னெடுக்கவேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்திக்கு தெரிவித்துள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த தருணத்தில் பொருத்தமற்றது என கருதுவதாக தெரிவித்துள்ள அவர் மாறாக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கான 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஜனாதிபதியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சில யோசனைகளை முன்வைத்துள்ளோம்,தேசிய நிறைவேற்று பேரவையை உருவாக்குதல்,கடன்களை செலுத்துவதை பிற்போடுவதற்கான வேண்டுகோளை விடுத்தல்,சம்பளம் எதுவும் பெறாத அமைச்சரவையை நியமித்தல், 21 வது திருதத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் ஆகிய யோசனைகளை முன்வைத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள் இந்த யோசனைகள் நிறைவேற்றப்பட்டால் தங்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிடுவார்கள் என கருதுவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
21வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டால் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பார்களா..? என்ற கேள்விக்கு எங்களிற்கு எந்த தனிநபர் குறித்தும் பிரச்சினையில்லை அமைப்பு முறை குறித்தே கரிசனை என அவர் தெரிவித்துள்ளார்.
உத்தேச தேசிய நிறைவேற்று பேரவையினால் நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு வழிவிடுவதற்காக பிரதமரும் பதவி விலகவேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.