அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பிலும் – பஷில் ராஜபக்ஷவின் ரகசிய திட்டங்கள் தொடர்பிலும் பகிரங்கப்படுத்தினார் விமல்வீரவங்ச !

“இனிமேல் எந்தக்காரணத்தை கொண்டும் அமைச்சுப்பதவியை ஏற்கப்போவதில்லை” என விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதிவியிலிருந்து நேற்று திடீரென நீக்கப்பட்டதையடுத்து, இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 

“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் இருந்தே எமது தரப்புக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. ஏனெனில் பசில் ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியை தனது சொந்தக் கட்சியாக நினைத்து செயற்பட ஆரம்பித்தார்.

ஆனால், நாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்னர் கோட்டாபய ராஜபக்ஷதான் ஜனாதிபதியாக தகுதியானவர் என கருதி, நாம் எமது செயற்பாடுகளை மேற்கொண்டோம்.

இது பசில் ராஜபக்ஷவின் கனவுக்கு தடையாக அமைந்தது. இறுதியில் அவரும் விருப்பப்படாமல் கோட்டாபய ராஜபக்ஷவுக்காக வேலை செய்தார்.

2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியடைந்தபோது, அப்போதைய ஜனாதிபதியிடம் சென்று தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தருமாறு பசில் ராஜபக்ஷ கோரினார்.இதனை மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் இறுதியில், யாருக்கும் சொல்லாமல் பசில் நாட்டை விட்டுச் சென்றார்.

அரசாங்கத்துக்குள் பிரச்சினைகள் தொடர்ச்சியாக இருந்தன. 20 ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து இது ஆரம்பமானது.

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு அமைச்சர் அந்தஸ்த்து வழங்கியமை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியமை என அனைத்து விடத்திலும் நாம் எதிர்ப்பினை வெளியிட்டோம்.

 

இது கொள்கை ரீதியான முரண்பாடாகும். இதனால் தான் இன்று ஒட்டுமொத்த நாடும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தான் நாம் மக்களுக்கு எடுத்துக் காட்டினோம். நாடு பள்ளத்தில் விழுந்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க எம்மால் முடியாது.

இந்த நிலையில், நாம் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவிட்டோம் என என்னையும் உதயகம்மன்பிலவையும் அமைச்சர் பதவிகளிலிந்து நீக்கியுள்ளார்கள்.

எம்மை நீக்கியமையால் நாட்டுக்கு டொலர் கிடைத்துவிடுமா? அல்லது எரிப்பொருள் ஊற்றெடுக்குமா? மின்சாரப் பிரச்சினைகள் இல்லாது போகுமா? அல்லது பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?அத்தோடு, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றுக்கு கொண்டுவர நாம் என்றும் ஆதரவளிக்கவில்லை. இதற்கு ஆரம்பத்திலிருந்தே நாம் எதிர்ப்பினைத் தான் வெளியிட்டோம்.

பசில் ராஜபக்ஷவினால் தான் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இந்த நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. அவர் அமெரிக்க பிரஜையாவார். அமெரிக்கா நினைத்தால் நிதித்தூய்மையாக்கலின் கீழ் அவரை எந்நேரத்திலும் கைது செய்ய முடியும். அதிலிருந்து தப்ப வேண்டுமெனில் அவர் அமெரிக்காவுக்காக இங்கு சேவையாற்ற வேண்டும்.இந்தோனேசியாவைப் போன்று இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்பதுதான் அவரின் திட்டமாகும். இதனை இலக்காகக் கொண்டுதான் அவர் செயற்பட்டு வருகிறார். நாட்டை கொள்ளையடிக்க மட்டும்தான் அவரால் முடியும். இதுதான் இன்றைய உண்மையான கதை.

எம்மை பதவியிலிருந்து நீக்கியமைக்கு பிரதமர் உடன்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதியின் கீழ் இனி மேல் அமைச்சர் பதவியொன்றை பெற்றுக் கொள்ள நாம் எப்போதும் தயாரில்லை.

இந்த அரசாங்கத்தை பசில் ராஜபக்ஷதான் வழிநடத்துகிறார். ஜனாதிபதியால் நிதியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாட முடியாதுள்ளது. இதுதான் இன்றைய நிலைமை.

இவை தொடர்பாக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பினை வெளியிட்டோம். அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எம்மை நீக்கியுள்ளார்கள்.

அரசாங்கத்திலுள்ள நிறைய பேருக்கு இந்த நிலைமை புரிந்துள்ளது. அவர்களும் அதிருப்தியுடன் தான் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எமது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை.

எமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது. நாம் மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தோம். இதற்காக கதைத்தால் எமது பதவிகள் பறிபோகும் என்றால் நாம் கவலையடையப்போவதில்லை.“ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *